தேடுதல்

மே 13 திருப்பலியின் இறுதியில் அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் மே 13 திருப்பலியின் இறுதியில் அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

இயேசுவோடு இணைந்து வாழும் வரத்திற்காக...

மரமோ, செடியோ நேரடியாக கனிகளைத் தாங்குவதில்லை, அக்கனிகளை, கிளைகளும், கொடிகளுமே தாங்குகின்றன – திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மாணவர்களுக்காகவும், அவர்களுக்கு புதிய வழிகளில் சொல்லித்தர முயற்சிகள் செய்துவரும் ஆசிரியர்களுக்காகவும் வேண்டிக்கொள்வோம்; அவர்கள், துணிவுடன் உழைக்கவும், வெற்றியடையவும் செபிப்போம் என்ற கருத்தை வெளியிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 13, இப்புதனன்று, தன் காலை திருப்பலியைத் துவக்கினார்.

இயேசுவில் 'இணைந்திருத்தல்'

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் காலை ஏழு மணிக்கு திருத்தந்தை துவக்கிய திருப்பலியில், யோவான் நற்செய்தியில் (யோவான் 15:1-8) கூறப்பட்டுள்ள 'இணைந்திருத்தல்' என்ற கருத்தை மையப்படுத்தி தன் மறையுரை சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள் (யோவான் 15:4) என்ற இயேசுவின் கூற்றை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, 'இணைந்திருப்பது' என்ற எண்ணத்தை இயேசு இன்றைய நற்செய்தியிலும், வேறு இடங்களிலும் வலியுறுத்தியுள்ளார் என்று எடுத்துரைத்தார்.

மரம்-கிளை, செடி-கொடி உறவு

மரம், அல்லது திராட்சை செடி, ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் கிளைகளும், கொடிகளும், மரமோ, செடியோ இன்றி தன்னிலேயே உயிர் வாழமுடியாது என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே வண்ணம், மரம், செடி, ஆகியவற்றிற்கு, கிளைகளும், கொடிகளும் தேவைப்படுகின்றன என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

மரமோ, செடியோ நேரடியாக கனிகளைத் தாங்குவதில்லை, அக்கனிகளை, கிளைகளும், கொடிகளுமே தாங்குகின்றன என்று கூறியத் திருத்தந்தை, கிளைகள் தாங்கும் கனிகளே மரம் அல்லது திராட்சை செடியின் வாழ்வுக்குச் சான்றாக அமைகின்றன என்பதையும் குறிப்பிட்டார்.

சாட்சி பகருதல் வழியே இணைந்திருத்தல்

இதே வண்ணம், ஒவ்வொரு கிறிஸ்தவரும், தன் வாழ்வில் வெளிப்படுத்தும் கனிகளான நற்செயல்கள் வழியே, கிறிஸ்துவுக்கு சாட்சியாக இவ்வுலகில் வாழ்கிறார் என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையில் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

கிறிஸ்துவோடு இணைந்திருப்பது, ஓர் ஆழ்நிலை தவம் சார்ந்த உறவாகத் தெரிந்தாலும், அத்தகைய உறவுக்கு நாம் அனைவருமே அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்த இணைப்பில், கடவுள் நமக்கு எவ்வளவு தேவையோ, அதேவண்ணம் நாம் கடவுளுக்குத் தேவை என்ற உண்மையைப் புரிந்து, அதற்கேற்றவாறு வாழும் வரத்திற்காக மன்றாடுவோம் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆன்மீகத் திருவிருந்து

ஏனைய நாள்களைப் போலவே, இப்புதனன்று நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், ஆன்மீக அளவில், திருவிருந்தில் மக்கள் கலந்துகொள்வதற்கு உதவியாக, ஒரு செபத்தைக் கூறியபின், சிற்றாலயத்தில் இருந்தவர்களுடன், திருநற்கருணை ஆராதனையை, சில நிமிடங்கள் மௌனமாக மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், திருநற்கருணை ஆசீரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2020, 10:32
அனைத்தையும் படிக்கவும் >