தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

வரலாற்று நினைவுகளை மறந்து வாழ்வது கிறிஸ்தவம் அல்ல

அழகு என்ற எண்ணத்தை புரிந்துகொள்ளாமல் நற்செய்தியைப் புரிந்துகொள்ள முடியாது, அந்த அழகை நாம் புரிந்துகொள்ள உதவும் கலைஞர்களை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டிக்கொள்வோம் – திருத்தந்தையின் திருப்பலி கருத்து

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே மாதம் 7, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில், கலைஞர்களுக்காக வேண்டிக்கொள்வோம் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.

அழகை புரிந்துகொள்ள உதவும் கலைஞர்கள்

மே 6ம் தேதி புதனன்று, செபத்தை மையப்படுத்தி தான் வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், கலைஞர்களைப் பற்றி குறிப்பிட்டதற்காக, ஒரு சில கலைஞர்கள் தனக்கு நன்றி கூறியிருந்தனர் என்பதை, இவ்வியாழன் திருப்பலியின் துவக்கத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை, அழகு என்ற எண்ணத்தை புரிந்துகொள்ளாமல் நற்செய்தியைப் புரிந்துகொள்ள முடியாது என்றும், அந்த அழகை நாம் புரிந்துகொள்ள உதவும் கலைஞர்களை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டிக்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார்.

செபத்தை மையப்படுத்திய மறைக்கல்வி பாடங்களின் வரிசையை இப்புதனன்று துவங்கிய திருத்தந்தை, தர்மம் கேட்டு வாழ்ந்த பர்த்திமேயுவின் வேதனையும், நம்பிக்கையும் நிறைந்த குரலைப் பற்றி விளக்கிக் கூறியபின், படைப்பு ஒவ்வொன்றுமே இறைவனை நோக்கி குரல் எழுப்புகின்றன என்றும், அவை எழுப்பும் மௌனமான குரல்களை, கலைஞர்கள் பல வழிகளில் பொருள்கொண்டு, அவற்றை தங்கள் படைப்பின் வழியே வெளிக்கொணர்கின்றனர் என்றும், தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறியிருந்தார்.

திருத்தந்தை வெளிப்படுத்திய இந்த எண்ணத்திற்காக கலைஞர்கள் அவருக்கு நன்றி கூறியுள்ளதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழகைப் புரிந்துகொள்ள உதவும் அவர்களுக்காக வேண்டிக்கொள்வோம் என்ற விண்ணப்பத்துடன் தன் திருப்பலியைத் துவக்கினார்.

வரலாற்றின் ஓர் அங்கமாக விளங்கும் இயேசு

மேலும், இவ்வியாழனன்று வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில் (தி.பணிகள் 13:13-25), திருத்தூதர் பவுல், இயேசுவை, ஒரு குறிப்பிட்ட மக்களினத்தின் வரலாற்றுடன் இணைத்துப் பேசியதை சுட்டிக்காட்டி, நாம் அனைவருமே வரலாற்று நினைவுகளை மறந்துவிடக்கூடாது என்பதை தன் மறையுரையின் மையக்கருத்தாகக் கூறினார்.

கிறிஸ்தவ மறை, இறையியல், மற்றும் நன்னெறியியல் ஆகியவற்றைக் கூறும் கொள்கைத் திரட்டு அல்ல, மாறாக, அது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்களினத்தின் வரலாறு என்றும், ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்த மக்களினத்தின் உறுப்பினர் என்றும் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் வரலாறு

மூதாதையரில் துவங்கி, எகிப்தில் வாழ்ந்த காலம், மற்றும் அதைத் தொடர்ந்த இஸ்ரயேலரின் வரலாறு அனைத்தையும் நினைவுகூர்ந்து, இறுதியில் இயேசுவுடன் இந்த வரலாற்றை நிறைவுக்குக் கொணரும் திருத்தூதர் பவுலைப் போலவே, ஸ்தேவானும் இயேசுவை ஒரு வரலாற்றுடன் இணைத்தே பேசியுள்ளார் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

அன்னை மரியாவின் புகழ் பாடல், மற்றும் செக்கரியாவின் பாடல் இரண்டிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய நினைவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை, தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நினைவுகளை, ஒவ்வொரு நாளும், காலையிலும், மாலையிலும், நம் செபங்களில் இணைத்து வருகிறோம் என்பதையும் குறிப்பிட்டார்.

மக்கள் குலத்தையும், வரலாற்றையும் மறந்துவிட்டு, ஒரு கொள்கை திரட்டாக கிறிஸ்தவ மதத்தைக் காணும்போது, அங்கு, ஒருவர் தன்னையே உயர்வாகக் கருதுவதற்கும், மற்றவர்களை ஒதுக்குவதற்கும் வழிகள் பிறக்கின்றன என்பதையும் திருத்தந்தை, தன் மறையுரையில், ஓர் எச்சரிக்கையாக விடுத்தார்.

புனிதர்களும், பாவிகளும் நிறைந்த வரலாறு

இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மனித குடும்பத்தில், புனிதர்களும் இருந்தனர், பாவிகளும் இருந்தனர் என்பதை உணர்ந்து, அத்தகைய மக்களினத்தில் நாமும் பங்குவகிக்கிறோம் என்பதை நினைவில் கொள்வதற்கு இறைவனிடம் வரம் வேண்டுவோம் என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆன்மீக முறையில் திருநற்கருணை பெற...

மேலும், ஒவ்வொரு நாளும் திருப்பலியின் இறுதியில், மக்கள் ஆன்மீக முறையில் திருவிருந்தில் பங்கேற்பதற்கு, ஓர் இறைவேண்டலை கூறிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்றும் அந்த இறைவேண்டலை மேற்கொண்டார்.

கடந்த நாள்களைப் போலவே, இத்திருப்பலியின் இறுதி சில நிமிடங்கள் திருநற்கருணை பீடத்தில் வைக்கப்பட்டு, ஆராதனை நிகழ்ந்தபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணை ஆசீரை வழங்கி, திருப்பலியை நிறைவு செய்தார்.

07 May 2020, 10:18
அனைத்தையும் படிக்கவும் >