தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனை 

நினிவே மக்களைக் காத்த கடவுள், நம்மையும் காப்பாராக

"உலகளாவிய நோய் தோற்று என்ற கொடுமையை கடவுள் ஒரு முடிவுக்குக் கொணர்வாராக. இவ்வுலகில் நிலவும் பசி, போர், குழந்தைகளுக்கு கல்வி மறுப்பு போன்ற ஏனைய உலகளாவிய நோய்களையும் கடவுள் முடிவுக்குக் கொணர்வாராக."

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியால் உருவாகியுள்ள நோய் உலகெங்கும் பரவியுள்ளதை தடுக்க, மே 14, இவ்வியாழனன்று, உலகினர் அனைவரும், செபம், உண்ணா நோன்பு மற்றும் பிறரன்புச் செயல் ஆகியவற்றில் ஈடுபட விடுக்கப்பட்டுள்ள சிறப்பான ஓர் அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

உலக மக்கள் அனைவரோடும் இணைந்து...

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிக்கடி கூறுவதுபோல், நாம் அனைவருமே சகோதரர்கள், சகோதரிகள் என்பதை, இத்திருப்பலியின் துவக்கத்தில் நினைவுறுத்திய திருத்தந்தை, இந்த உடன் பிறந்த உணர்வுடன், உலக மக்கள் அனைவரோடும் இணைந்து, இவ்வுலகை, இந்நோயின் துன்பத்திலிருந்து விடுவிக்க, கருணையே உருவான இறைவனை நோக்கி செபிப்போம் என்ற விண்ணப்பத்துடன், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் தன் திருப்பலியைத் துவக்கினார்.

மே 14ம் தேதி சிறப்பிக்கப்பட்ட திருத்தூதரான புனித மத்தியா திருநாளுக்கென திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து குறிக்கப்பட்ட முதல் வாசகத்திற்குப் பதிலாக (தி.ப. 1: 15-17,20-26), இவ்வியாழனன்று, உலகெங்கும் மேற்கொள்ளப்பட்ட செபம், உண்ணாநோன்பு முயற்சியையொட்டி, இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து (யோனா 3:1-10) முதல் வாசகம் வாசிக்கப்பட்டது.

நன்னெறி பிறழ்தல் என்ற நோயினால் தாக்கப்பட்ட நினிவே

இந்த வாசகத்தை மையப்படுத்தி தன் மறையுரைக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நினிவே மாநகரம், நன்னெறி பிறழ்தல் என்ற நோயினால் தாக்கப்பட்டிருந்ததால், அம்மக்களுக்கு செபம், உண்ணாநோன்பு, தவம் ஆகிய செய்திகளைக் கூற, கடவுள், இறைவாக்கினர் யோனாவைத் தேர்ந்தெடுத்தார் என்ற கருத்துடன் தன் மறையுரையைத் துவக்கினார்.

கடவுள் விடுத்த அழைப்பை முதல் முறை ஏற்பதற்கு யோனா அஞ்சினார் என்பதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அவர் மறுமுறை விடுத்த அழைப்பை ஏற்று, நினிவே நகருக்குச் சென்று, யோனா, தன் பணியை நிறைவேற்றினார் என்று குறிப்பிட்டார்.

சற்றும் எதிர்பாராத தாக்குதல்

சற்றும் எதிர்பாராத வழியில் நம்மைத் தாக்கியுள்ள இந்த தொற்றுக்கிருமியின் பரவலால், உலகெங்கும் பல்லாயிரம் பேர், தனிமையில் இறந்துள்ளனர் என்பதை குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சூழலில், நம்மை எதுவும் பாதிக்கவில்லை என்று எண்ணி மகிழ்வதை விட்டுவிட்டு, அடுத்தவர் மீது நம் கவனத்தை திருப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சுயநலத்திலிருந்து வெளியேற, செபம், நோன்பு

உலகமெங்கும் கடைபிடிக்கப்படும் செபம் மற்றும் நோன்பு நாள் என்ற முயற்சியை, நம்மைப்பற்றிய சிந்தனைகளிலிருந்து வெளியேறும் ஒரு வாய்ப்பாகக் கருதவேண்டும், என்று கூறியத் திருத்தந்தை, இந்த தொற்றுக்கிருமியின் பரவல், பொருளாதாரம், கல்வி ஆகிய துறைகளில் உருவாக்கப்போகும் தாக்கங்களையும் நாம் மனதில் கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

நாம் எந்த மத நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், அனைத்து மதங்களும் சமம் என்று எண்ணுபவராக இருந்தாலும், அனைவருமே இணைந்து, தந்தையாம் இறைவனிடம், அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப, வேண்டுதல்களை எழுப்புவது, மிகச் சிறந்த முயற்சி என்று கூறினார்.

மனித குலத்தை தொடர்ந்து தாக்கும் ஏனைய நோய்கள்

தன் மறையுரையின் இறுதிப் பகுதியில், மனித குலத்தை தொடர்ந்து தாக்கிவரும் ஏனைய நோய்களைக் குறித்து சிந்திப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

அண்மையில் வெளியான அதிகாரப்பூர்வமான ஒரு தகவலின்படி, இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில், கொரோனா தொற்றுக்கிருமி நோயினால் இறந்தோரைக் காட்டிலும், ஏனைய காரணங்களால் இறந்தோரின் எண்ணிக்கை அதிகம் என்பதை, திருத்தந்தை குறிப்பிட்ட வேளையில், இந்த நான்கு மாதங்களில், பட்டினியால் இறந்தோர், 3.7 மில்லியனுக்கும், அதாவது, 37 இலட்சத்திற்கும் அதிகம் என்பதை, தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டினார்.

நினிவே மக்கள் மேற்கொண்ட செபம் மற்றும் கடும் நோன்பு முயற்சிகளையும், அவர்களது மனமாற்றத்தையும் கண்ட கடவுள் அவர்கள் மீது அனுப்பவிருந்த தண்டனையை அனுப்பவில்லை என்பதை, தன் மறையுரையில் நினைவுபடுத்தினார் திருத்தந்தை.

கடவுள் நம் மீது இரக்கம் கொள்வாராக

"உலகளாவிய நோய்தொற்று என்ற கொடுமையை கடவுள் ஒரு முடிவுக்குக் கொணர்வாராக, நம் மீது இரக்கம் கொள்வாராக. இவ்வுலகில் நிலவும் பசி, போர், குழந்தைகளுக்கு கல்வி மறுப்பு போன்ற ஏனைய உலகளாவிய நோய்களையும் கடவுள் முடிவுக்குக் கொணர்வாராக. இதை, நாம், அனைத்து சகோதரர், சகோதரிகளுடன் இணைந்து கேட்கிறோம். கடவுள், நம் அனைவர் மீது இரக்கம் கொண்டு, நம்மை ஆசீர்வதிப்பாராக" என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையை நிறைவு செய்தார்.

14 May 2020, 10:47
அனைத்தையும் படிக்கவும் >