தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 120520 சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 120520 

திருத்தந்தை பிரான்சிஸ்: செவிலியர்களுக்காக சிறப்பு செபம்

திருத்தந்தை : இயேசு நமக்கு வழங்கும் அமைதி, நம்மை பிறரை நோக்கி திறக்கவும், விண்ணுலகம் குறித்த நம்பிக்கையை வழங்கவும் உதவுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வீரத்துவப் பண்புகளின் அடையாளமாக விளங்கும் செவிலியர்களுக்காக, இந்நாளில் தான் இறைவனின் சிறப்பாசீரை வேண்டுவதாக, மே 12, இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலியின் துவக்கத்தில் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நமக்கு வழங்கும் அமைதி என்பது, ஓர் இலவசக் கொடை என்ற தலைப்பில் மறையுரை வழங்கினார்.

செவிலியர், மற்றும், தாதியர் உலக நாள் இச்செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்படுவதையொட்டி, சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், திருப்பலியின் துவக்கத்தில் அவர்களுக்காக செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் இந்த தொற்றுநோய் பரவல் காலத்தில், துணிவுடனும், தியாகத்துடனும் உழைத்துவரும் மருத்துவப் பணியாளர் பலர், தங்கள் உயிரையும் இழந்துள்ளனர் என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டு, அவர்களுக்காக இத்திருப்பலியை ஒப்புக்கொடுப்பதாகக் கூறினார்.

இந்நாளின் நற்செய்திப் பகுதியில் (யோவா.14:27-31) இயேசு தன் சீடர்களைப் பார்த்து, தன் அமைதியை அவர்களுக்கு விட்டுச் செல்வதாக உரைத்ததை மையமாக வைத்து தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நமக்கு வழங்கும் அமைதி, போர்கள் அற்ற அமைதியல்ல, மாறாக, இதயத்தில் கிட்டும் அமைதி என்றார்.

உலகம் தரும் அமைதியோ, அது நமக்கே சொந்தமானது என நம்மை நம்பவைத்து நம்மை பிறரிலிருந்து தனிமைப்படுத்துவதாக உள்ளது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தரும் அமைதியோ நம்மை எப்போதும் இயங்கு நிலையில் இருப்பதாக மாற்றி, பிறருக்கு எப்போதும் திறந்த மனதுடையவர்களாகச் செயல்பட வைக்கிறது என்றார்.

இறைவனின் இலவசக் கொடையாக இருக்கும் இயேசுவின் அமைதி, பலன்தரக்கூடியது, மற்றும், நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வது என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நாம் அமைதியை எங்கு கண்டுகொள்கின்றோம் என்ற கேள்வியையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொருட்களிலும், உடமைகளிலும் காணமுடியாத அமைதியை, இறைவனின் இலவசக் கொடையாக நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

எத்தனை துன்ப வேளைகளிலும், நாம் அமைதியாக, மன சமாதானத்துடன் செயல்படவும், பிறருடன் அந்த அமைதியைப் பகிரவும் உதவுவது இறைவன் வழங்கும் அமைதி எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

விண்ணுலகு குறித்து அதிகம் அதிகமாகப் பேசவேண்டும் என, ஒரு நல்ல அருள்பணியாளர் தனக்கு ஒருமுறை எழுதியது சரியான கூற்று, அதையே இன்று தான் வலியுறுத்த விரும்புகிறேன் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு வழங்கும் அமைதி, இந்நாளுக்கும் நம் வருங்காலத்திற்கும் உரியது, அது, விண்ணுலகக் கனிகளுடன், இவ்வுலக வாழ்வை வழங்குவதாக உள்ளது என்று கூறினார்.

இயேசு வழங்கும் அமைதி, இவ்வுலகம் வழங்கும் சுயநல அமைதியல்ல, மாறாக, பிறருக்காக நம்மைத் திறக்கும் அமைதி, மற்றும், நம்பிக்கையை வழங்கும் அமைதி என, மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருப்பலியின் இறுதியில், சமூகத்தொடர்புச் சாதனங்கள் வழியாக இதில் பங்குபெற்ற அனைவர்க்கும் திருநற்கருணை ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

12 May 2020, 10:04
அனைத்தையும் படிக்கவும் >