தேடுதல்

Vatican News
புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறப்புத் திருப்பலி புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறப்புத் திருப்பலி  

இரக்கத்தையும் நீதியையும் ஒன்றிணைத்த 2ம் ஜான் பால்

கடவுள் தன் மக்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதுபோல், ஒவ்வொரு மேய்ப்பரும் தன் மக்களோடு நெருங்கியிருக்கவேண்டும் என்பதை, புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், தன் வாழ்வில் உணர்ந்து, செயல்பட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் கொண்டிருந்த செபம், மக்களுடன் கொண்டிருந்த நெருக்கம், இரக்கம் நிறைந்த நீதி ஆகிய மூன்று குணங்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 18, இத்திங்கள் காலை நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார்.

2ம் ஜான் பால் பிறந்த நாளின் 100ம் ஆண்டு

புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் பிறந்ததன் 100ம் ஆண்டு நிறைவு மே 18ம் தேதி சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அப்புனிதத் திருத்தந்தை, புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை 7 மணிக்கு, சிறப்புத் திருப்பலியொன்றை  நிறைவேற்றினார்.

இத்திருப்பலியின் பதிலுரைப்பாடல் பல்லவியில் கூறப்பட்டுள்ள “ஆண்டவர் தம் மக்கள் மீது அன்பு கொள்கின்றார்” என்ற சொற்களுடன் தன் மறையுரையைத் துவக்கியத் திருத்தந்தை, இறைவன் தன்மக்கள் மீது கொண்டிருந்த அன்பால், இத்திருத்தந்தையை திருஅவைக்கு வழங்கினார் என்றும், இத்திருத்தந்தையோ, செபத்தின் மீதும், இறைமக்கள் மீதும், நீதியின் மீதும் அன்புகொண்டவராகச் செயல்பட்டார் என்றும் கூறினார்.

செபம், அருகாமை, சமுதாய நீதியும் இரக்கமும் 

ஓர் ஆயரின் முதல் பணி,  செபம் என்பதை முழுமையாக உணர்ந்திருந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், அதிக நேரத்தை செபத்தில் செலவிட்டார் என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்க விரும்பிய திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தன்  மந்தைகளை தேடிச் சென்றார் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் தன் மக்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதுபோல் ஒவ்வொரு மேய்ப்பரும் தன் மக்களோடு நெருங்கியிருக்க வேண்டும் என்பதை, புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், தன் வாழ்வில் உணர்ந்து, செயல்பட்டார், ஏனெனில், மக்களுக்கு நெருக்கமாக இல்லாத ஒரு மேய்ப்பர் வெறும் நிர்வாகியாக மட்டுமே செயல்படுவார் என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

நமக்கு பக்கத்தில் இருப்போருடனும், தூரத்தில் இருப்போருடனும் நாம் நெருக்கமாக செயல்படவேண்டும் என்பதை வாழ்வில் எடுத்துக்காட்டிய திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், நீதியின் மனிதராகவும் செயல்பட்டார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கமும், நீதியும் பிரிக்கமுடியாதவை

நீதிக்கான தன் ஏக்கத்தில், இரக்கத்தின் தேவை குறித்து அதிகம் அதிகமாக வலியுறுத்திய நம் புனிதத் திருத்தந்தை, இரக்கமின்றி நீதி இருக்கமுடியாது, ஏனெனில், அவையிரண்டும் ஒன்றிணைந்து செல்பவை என்பதையும், தெய்வீக இரக்கத்தின் முக்கியத்துவத்தையும் நமக்குக் கற்பித்துச் சென்றுள்ளார் என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

இத்திங்கள் காலை இடம்பெற்ற புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டத் திருப்பலியில், வத்திக்கான் நகரில் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்திரி, திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாளரான கர்தினால் Konrad Krajewski, புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கு 18 ஆண்டுகள் பொறுப்பாளராகச் செயல்பட்ட பேராயர் பியெரோ மரினி, மற்றும்,  திருப்பீடச் செயலகத்தில் பணியாற்றும் போலந்து பேராயர் Jan Romeo Pawłowski, ஆகியோர் திருத்தந்தையுடன் இணைந்து நிறைவேற்றினர்.

நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்படும்

கோவிட்-19 தொற்றுநோய் அச்சத்தின் காரணமாக, இறைமக்கள், கோவில் வழிபாடுகளில் சென்று பங்கேற்பது தடுக்கப்பட்டிருந்த நிலையில், திருத்தந்தையின் சாந்தா மார்த்தா சிற்றாலயத் தினசரி காலைத் திருப்பலி, மார்ச்  9ம் தேதி முதல் சமுகத்தொடர்பு சாதனங்கள் வழியாக வழங்கப்பட்டுவந்த நிலையில், இந்த நேரடி ஒளிபரப்பு, இச்செவ்வாய் முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 18 இத்திங்கள் முதல், திருவழிபாட்டுக்கொண்டாட்டங்களில் மக்கள் நேரடியாக பங்கேற்க, சில வழிகாட்டுதல்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றி வந்த திருப்பலிகளின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

18 May 2020, 10:22
அனைத்தையும் படிக்கவும் >