தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 160520 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 160520 

கோவிட்-19 காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்பவர்களுக்காக...

சிலுவையின் மடமையே, கிறிஸ்துவின் வெற்றியும், நமது வெற்றியும் ஆகும். உலகியல்தன்மை எது, நற்செய்தி எது என்பதை தேர்ந்து தெளிய தூய ஆவியாரிடம் மன்றாடுவோம், அப்போது நாம் ஏமாற்றப்படமாட்டோம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த கொள்ளைநோய் காலத்தில் இறந்தவர்களை அடக்கம்செய்யும் பணியாளர்களுக்காகச் செபிப்போம், ஏனெனில், இறந்தவர்களை அடக்கம் செய்வது, இரக்கத்தின் பணிகளில் ஒன்றாகும், இந்தப் பணி, உண்மையில் மனதிற்கு மகிழ்வு அளிப்பதல்ல என்ற கருத்தை வெளியிட்டு  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 16, இச்சனிக்கிழமை காலையில் திருப்பலியைத் துவக்கினார்.

கோவிட்-19 காலத்தில், இறந்தவர்களை அடக்கம்செய்யும் பணியாளர்கள், அந்நோய்க் கிருமியால் தாக்கப்படக்கூடும் என்ற ஆபத்திலும், தங்கள் வாழ்வை பணயம் வைத்து இப்பணியை ஆற்றுகின்றனர், எனவே இவர்களுக்காக இறைவனிடம் வேண்டுவோம் என்று கூறி, திருப்பலியை ஆரம்பித்தார் திருத்தந்தை.

இச்சனிக்கிழமை உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு, சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இன்றைய திருப்பலியின் யோவான் நற்செய்திப் பகுதியை (யோவா.15,18-21) மையப்படுத்தி உலகம்சார்ந்த உணர்வுகள் பற்றிய சிந்தனைகளை மறையுரையில் வழங்கினார்.

“உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது (யோவா.15,18-19)  என்று, இயேசு தம் திருத்தூதர்களிடம் கூறியதை மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்..

உலகம்சார்ந்த உணர்வு

உலகம் பற்றியும், அது தனக்கும், தன் சீடர்களுக்கும் எதிராகக் கொண்டிருக்கும் வெறுப்பு பற்றியும், இயேசு பலநேரங்களில் பேசியிருக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, தன் சீடர்களை இந்த உலகிலிருந்து எடுத்துவிடவேண்டாம் என்றும், மாறாக, அவர்களை உலகுசார்ந்த உணர்வுகளிலிருந்து காப்பாற்றுமாறும், இயேசு, தன் தந்தையிடம் மன்றாடினார் என்று கூறினார்.

உலகம்சார்ந்த போக்கு, திருஅவையை அழிக்கவும், ஊழல்படுத்தவும் விரும்புகின்றது என்றும், இது, வாழ்வு பற்றிய உறுதியான தகவல்களைப் பரிந்துரைப்பதாகத் தோற்றமளிக்கிறது என்றும், இது மேலெழுந்தவாரியான மதிப்பீடுகளுடன் காட்சியளிக்கும் நிலையற்ற வாழ்வின் கலாச்சாரம் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தகைய கலாச்சாரத்தில் பிரமாணிக்கம் என்பதே கிடையாது என்பதை அது அறிந்திருக்கின்றது, ஏனெனில், பச்சோந்திபோல, அது தன்னை சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்கிறது மற்றும், எல்லாவற்றையும் பேரம்பேசுகிறது என்று திருத்தந்தை கூறினார்.

வசதிக்கேற்ப புறக்கணிக்கும் கலாச்சாரம்

உலகம்சார்ந்த தன்மைகளிலிருந்து, நம்மைக் காப்பாற்றுமாறு, இயேசு தன் தந்தையிடம் செபித்தார், இந்த உலகியல்தன்மை, வசதிக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கின்ற புறக்கணிக்கும் கலாச்சாரம் என்று விளக்கிக் கூறிய திருத்தந்தை, தங்களை கிறிஸ்தவர்கள் என அழைத்துக்கொண்டு, உலகியல்தன்மையோடு வாழ்ந்துவரும்  பலர் உள்ளனர் என்று குறிப்பிட்டார்.

இத்தைகய வாழ்வு, நம்பிக்கையை உறிஞ்சிவிடுகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகம்சார்ந்த வாழ்வியல், திருஅவையின் தீமைகளில் மிக மோசமானது என்று, 20ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இயேசு சபை இறையியலாளரான கர்தினால் Henri de Lubac அவர்கள் விளக்கியுள்ளார் என்று கூறினார்.

ஆன்மீக உலகியல்போக்கு, கிறிஸ்தவத்தின் வாழ்வுமுறையாக இருக்கும்போது, அது நம்பிக்கையை அழித்துவிடுகிறது என்றும், உலகியல்தன்மை, எல்லா இடங்களிலும், ஏன் திருஅவையிலும் நுழைந்து, வேஷம் போடுகிறது என்றும் மறையுரையில் கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவ நம்பிக்கை வெறுக்கப்பட்டதால், மறைசாட்சிகள் கொல்லப்பட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இயேசுவில் நம்பிக்கை

பவுலடிகளார் ஏதென்சு நகரில் அரேயோப்பாகு என்னும் மன்றத்தில் உரையாற்றியோது (தி.ப.17,19-34), "அறியாத தெய்வம்" பற்றி கவனத்துக்குக் கொண்டுவந்து, நற்செய்தியைப் போதித்தார், ஆனால் அவர் சிலுவை மற்றும், உயிர்ப்பு பற்றி பேசத் தொடங்கியபோது,  அங்கிருந்தவர்கள் அவரைக் கிண்டல் செய்தனர் மற்றும் அங்கிருந்து சென்றனர் என்று திருத்தந்தை கூறினார்.

உலகியல்தன்மை, மேலெழுந்தவாரியானது, ஆயினும் இது ஆழமான வேர்களைக் கொண்டிருக்கிறது என்று எச்சரித்த திருத்தந்தை, உலகம்சார்ந்த உணர்வால், அவமானத்தின் அடையாளமான சிலுவையை சகித்துக்கொள்ள முடியாது, இந்த உணர்வுக்கு எதிரான ஒரே மருந்து, நமக்காக சிலுவையில் இறந்து உயிர்த்த கிறிஸ்துவே என்பதை வலியுறுத்திக் கூறினார். 

சிலுவையின் மடமையே, கிறிஸ்துவின் வெற்றியும் நமது வெற்றியும் ஆகும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகியல்தன்மை எது, நற்செய்தி எது என்பதைத் தேர்ந்து தெளிய தூய ஆவியாரின் வரத்திற்காக மன்றாடுவோம், அப்போது நாம் ஏமாற்றப்படமாட்டோம் என்று கூறி, மறையுரையை நிறைவு செய்தார்.

இத்திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனை நடைபெற்றது. இறுதியில் திருத்தந்தை திருநற்கருணை ஆசீர் வழங்கினார். 

16 May 2020, 10:25
அனைத்தையும் படிக்கவும் >