தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனை  (Vatican Media)

குடும்பங்களில் அன்பு வளர கடவுளை மன்றாடுவோம்

இயேசு மீது வைக்கும் நம்பிக்கை, நம்மை மகிழ்வு மற்றும் சுதந்திர வாழ்வுக்கு இட்டுச்செல்கின்றது, அதேநேரம், இறுக்கமான மனநிலை, பிரிவினைக்குக் காரணமாகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இன்று, குடும்பங்களின் உலக நாள், எனவே குடும்பங்களுக்காக கடவுளை மன்றாடுவோம், அதன் வழியாக, குடும்பங்களில், ஆண்டவரின் ஆவி, அன்புணர்வு, நன்மதிப்பு மற்றும் சுதந்திரம் வளரும் என்று கூறி, மே 15, இவ்வெள்ளி காலையில், வத்திக்கானில் சாந்தா மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் திருப்பலியை ஆரம்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம், மே 15, இவ்வெள்ளியன்று குடும்பங்களின் உலக நாளைச் சிறப்பித்ததை முன்னிட்டு, குடும்பங்களுக்காக திருப்பலியை ஒப்புக்கொடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு மீது கொள்ளும் நம்பிக்கை, நம்மை, மகிழ்வு மற்றும் சுதந்திர வாழ்வுக்கு இட்டுச்செல்கின்றது, அதேநேரம், இறுக்கமான மனநிலை, பிரிவினைக்குக் காரணமாகிறது என்று, மறையுரையில் எடுத்துரைத்தார்.

துவக்ககால திருஅவை

எந்த பொறுப்பும் இல்லாத சிலர் தங்களுடைய பேச்சால், அந்தியோக்கியாவில், கிறிஸ்தவத்தைத் தழுவிய மக்களது மனத்தைக் குழப்பி, அவர்களைக் கலக்கமுறச் செய்தது பற்றிக் கேள்விப்பட்டு, திருத்தூதர்கள், சீடர்களை அம்மக்களிடம் அனுப்பியது குறித்துக் கூறும், இத்திருப்பலியின் முதல் வாசகத்தின் (தி.ப.15:22-31) அடிப்படையில் தன் மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

திருஅவையின் ஆரம்ப நாள்கள், அமைதியிலும், அதேவேளை, அடக்குமுறை, குழப்பம் ஆகியவற்றாலும் நிறைந்திருந்தன என்றும், அமைதி நிலவிய காலங்களில் திருஅவை வளர்ந்தது மற்றும், இறைவார்த்தை பரவியது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஸ்தேவான், மற்றும் அவரைத் துன்புறுத்துவோராகச் செயல்பட்டு, பின்னர் துன்பங்களுக்கு உள்ளான பவுல் தொடங்கி, துவக்ககாலத் திருஅவையில் அடக்குமுறைகள் இருந்தன என்றும், எடுத்துரைத்தார்,.

அந்தியோக்கியா, சிரியா மற்றும், சிலிசியாவில் புதிதாக மனந்திரும்பிய கிறிஸ்தவர்கள், இயேசுவில் நம்பிக்கை வைத்து, திருமுழுக்குப் பெற்றனர் மற்றும், இடைநிலையாளர் எவருமின்றி தூய ஆவியைப் பெற்றனர், எனினும், கிறிஸ்தவர்களாக மனம் மாறுவதற்குமுன், சில யூதர்கள் செய்துகொண்டதுபோல, அந்தியோக்கியாவில், புதிதாக மனம்மாறிய கிறிஸ்தவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர் என்று கூறினார்.

இந்நிலையால் அக்கிறிஸ்தவர்கள் குழம்பி கலக்கமுற்றிருந்தனர், தங்களின் நிலை பற்றி கேள்வி எழுப்பினர் மற்றும், தாங்கள் இரண்டாம்தர கிறிஸ்தவர்களாக நடத்தப்படுவதாக உணர்ந்தனர் என்றுரைத்த திருத்தந்தை, இக்காரணத்தினால், திருத்தூதர்கள், அந்தியோக்கியா, சிரியா மற்றும், சிலிசியாவில் வாழ்ந்த புதிய கிறிஸ்தவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பினர் என்று கூறினார்.

இறுக்கமான மனநிலையால் வரும் ஆபத்து

துவக்ககாலக் கிறிஸ்தவப் போதகர்களின் மனநிலை பற்றி மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, இறுக்கமான மனநிலை, கடவுளின் ஆவியிடமிருந்து பிறப்பதல்ல, அம்மனநிலை, இலவசமாக வழங்கப்படும் மீட்பு மற்றும், கிறிஸ்துவின் உயிர்ப்பை கேள்விக்கு உள்ளாக்குகின்றது என்று கூறினார்.

மோசேயின் சட்டங்களைக் கடைப்பிடித்தால்தான் மீட்கப்படுவார்கள் என்று போதித்த,  புதிதாக கிறிஸ்தவத்தைத் தழுவிய யூதர்கள், தங்களின் இறுக்கமான மனநிலைக்கு, இறையியல், மேய்ப்புப்பணியியல் மற்றும், அறநெறியியல் விளக்கங்களை அளித்தவர்கள், அவர்கள், விதிமுறைகளின்படி இயங்கும் மதத்தை விரும்பினர், அவர்கள், தூய ஆவியார் வழங்கும் சுதந்திரம் மற்றும், நற்செய்தியின் மகிழ்வைப் பறித்துக்கொண்டனர் என்று திருத்தந்தை கூறினார்.  

“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள் (மத்.23:15)” என்று இயேசு, மறைநூல் அறிஞர்களின் இறுக்கமான மனநிலைக்குச் சவால்விட்டார் என்றும், சட்ட வல்லுனர்கள், மக்களின் மனச்சான்றைக் கெடுத்து, அவர்களை இறுக்கமான நிலைக்கு உள்ளாக்குகிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார். 

இறுக்கமான மனநிலை, ஏற்புடைமையிலிருந்து கிடைக்கும் சுதந்திரத்தை நாம் அனுபவிப்பதைத் தடைசெய்கின்றது என்றும், நாம் அந்த மனநிலையில் இல்லாதபோதுதான் சுதந்திரத்தின் அருளை அனுபவிக்க முடியும் என்றும் மறையுரையில் கூறிய திருத்தந்தை, ஏற்படைமை, நமக்கு இலவசமாக வழங்கப்படுகிறது, இயேசுவின் இறப்பு இலவசம், அதற்கு நாம் விலை கொடுப்பதில்லை என்று எடுத்துரைத்தார்.

நற்செய்தி வழங்கும் சுதந்திரத்தின் மகிழ்வு

திருத்தூதர்கள், அந்தியோக்கியா, சிரியா மற்றும் சிலிசியாவில் புதிய கிறிஸ்தவர்களுக்கு மடல் எழுதியதன் வழியாக, இறுக்கமான மனநிலை பிரச்சனையைத் தீர்த்துவைத்தனர் என்றுரைத்த திருத்தந்தை, இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம் என்று, அம்மடலில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர் என்று கூறினார்.

சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது என்றும் திருத்தூதர்கள் அம்மடலில் எழுதியிருந்தனர் என்று கூறிய திருத்தந்தை, இந்த பொதுவான அறநெறிப் பண்புகள், புதிதாக மனம் மாறியவர்கள், அந்நிய மதத்தோடு, கிறிஸ்தவத்தைக் குழப்பாமல் இருப்பதற்கு உதவின என்று கூறினார். 

திருத்தூதர்கள் அனுப்பியிருந்த மடலால், குழம்பியிருந்த .அக்கிறிஸ்தவர்கள் ஊக்கமடைந்து மகிழ்ச்சியுற்றார்கள் என்றுரைத்த திருத்தந்தை, நற்செய்தி வழங்கும் சுதந்திரம் எப்போதும் மகிழ்வைக் கொணரும், இந்த மகிழ்வையே, இயேசு தம் உயிர்ப்பால் கொணர்ந்தார் என்று கூறினார்.

“இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். உங்களை நான் நண்பர்கள் என்றேன்” (யோவா.15:15) என்று இயேசு கூறியபோது, சீடர்கள் இந்த மகிழ்வை அனுபவித்தனர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு இலவசமாக வழங்கப்படும் இந்தக் கனிகளைத் தேர்ந்து தெளிய ஆண்டவர் நமக்கு உதவுவாராக என்று செபித்து, மறையுரையை நிறைவு செய்தார்.

15 May 2020, 10:22
அனைத்தையும் படிக்கவும் >