தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா ஞாயிறு திருப்பலியின்போது - 260420 சாந்தா மார்த்தா ஞாயிறு திருப்பலியின்போது - 260420 

துயருற்றிருக்கும் மக்களோடு இயேசு என்றும் அருகிலிருக்கிறார்

திருத்தந்தை : நம்மீது கொண்டுள்ள தாகத்தினால், நம் அருகிலேயே நடந்துவரும் இயேசு, நம் துயரங்களை அவருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

துயருற்றிருப்போருக்காக இந்நாளில் தான் செபிக்க விரும்புவதாக தன் இஞ்ஞாயிறு காலை திருப்பலியை சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இடர்பாடுகளையும் திருப்தியற்ற நிலைகளையும் வாழ்வில் உணரும் மக்களோடு இயேசு என்றும் அருகிலிருக்கிறார் என தன் மறையுரையில் எடுத்தியம்பினார்.

வேலையின்மையாலும், போதிய நிதிஉதவியின்மையாலும், தனிமையாலும், வருங்காலம் குறித்த அச்சத்தாலும் துயர்களை அனுபவிக்கும் மக்களுக்காக இந்நாள் திருப்பலியில் தான் செபிக்க ஆவல் கொள்வதாக தன் திருப்பலியின் துவக்கத்தில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எம்மாவு செல்லும் பாதையில் இயேசுவை சந்தித்த சீடர்கள் பற்றி கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தியை (லூக். 24:13-35) மையப்படுத்தி  தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர் என்பவர், இயேசுவை தன் வாழ்வில் சந்தித்துள்ளவர், மற்றும்,இயேசு தன்னை சந்திக்க அனுமதிப்பவர் என கூறினார்.

எம்மாவு செல்லும் பாதையில் இரு சீடர்களை சந்தித்ததுபோல் நம்மையும் இயேசு சந்திக்கிறார் எனவும் தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனநிறைவற்ற நிலையில், நிறைவுக்கான ஏக்கத்துடன், பலவேளைகளில் தவறான பாதைகளில் ஓடிக்கொண்டிருக்கும் நாம், நம் உண்மையான ஏக்கம் இறைவனுடன் கூடிய சந்திப்பை நோக்கியது என்பதை உணரவேண்டும் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மீது கொண்டுள்ள தாகத்தினால், நம் அருகிலேயே நடந்துவரும் இயேசு, நம் துயரங்களை அவருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் மனநிறைவற்ற நிலையுடன் இறைவனை சந்திக்கும்போது, அருள், மற்றும், முழுமையின் வாழ்வு துவங்குகின்றது என எடுத்துரைத்தார்.

இறைவன் நம் அருகில் இருப்பதை நாம் உணரத் தவறினாலும், அவர் நம் அருகில் எப்போதும் இருந்துகொண்டு நம்முடன் உரையாடவும், நம் துயர்களை பகிர்ந்து உதவவும் காத்திருக்கிறார் என மேலும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

27 April 2020, 14:07
அனைத்தையும் படிக்கவும் >