தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா சிற்றாலய திருப்பலி - 210420 சாந்தா மார்த்தா சிற்றாலய திருப்பலி - 210420 

இக்காலத்தின் அமைதி, செவிமடுக்கும் திறனில் வளர உதவுவதாக

தூய ஆவியார் நம்மில் செயல்பட அனுமதித்தால், அவருக்குப் பணிந்து நடந்தால், பணம், வீண்பெருமை, புறங்கூறுதல் ஆகிய மூன்று சோதனைகளை முறியடிக்கலாம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த கொள்ளை நோய் காலத்தில் நிலவும் மிகுந்த அமைதிச் சூழல், நமக்குச் சற்று புதியதாக இருந்தாலும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாம் செவிசாய்ப்பதில் வளரும் திறனுக்காக ஆண்டவரை மன்றாடுவோம் என்று, இச்செவ்வாய் காலை திருப்பலியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஏப்ரல் 21, இச்செவ்வாய் காலை ஏழு மணிக்கு, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், பாஸ்கா காலத்தின் இரண்டாவது வாரச் செவ்வாய் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, முதல் கிறிஸ்தவ குழுமத்தில் மேலோங்கியிருந்த நல்லிணக்கம் பற்றி மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்த, முதல் கிறிஸ்தவ குழுமமாகிய, ஆண்டவரில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும், தங்கள் உடைமைகள் அனைத்தையும் பொதுவானதாகக் கருதியது பற்றிக் கூறும் இத்திருப்பலியின் முதல் வாசகம் (தி.ப.4:32-37) பற்றிய சிந்தனைகளை மறையுரையில் வழங்கிய திருத்தந்தை, முதல் கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவிய நல்லிணக்கம், இன்றையத் திருஅவைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.

இக்கிறிஸ்தவர்கள் இவ்வாறு வாழ்வதற்கு அவர்களுக்குச் சக்தியைக் கொடுத்தவர், தூய ஆவியாரே என்றும், நாமும், நம் குழுமங்களைப் பிரிக்கின்ற, பணம், வீண்பெருமை,  புறங்கூறுதல் ஆகிய மூன்று சோதனைகளை வெல்வதற்கு, தூய ஆவியார் நம்மில் செயல்பட அனுமதித்தால், நம்மிலும் அவர் வியத்தகு செயல்களை ஆற்றுவார் என்றும், திருத்தந்தை கூறினார்.

தூய ஆவியாருக்குப் பணிவு

தூய ஆவியார் இவ்வுலகைச் சார்ந்தவர் அல்ல என்பதால், பணம், வீண்பெருமை, புறணிபேசுதல் ஆகிய உலகப்போக்குகளிலிருந்து நம்மைக் காப்பாற்ற, தம் வல்லமையோடு அவர் எப்போதும் வருகிறார், அவர், இத்தகைய மாபெரும் செயல்களை ஆற்ற வல்லவர் என்று, திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

“மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என” இயேசு நிக்கதேமிடம் கூறியது பற்றிய இன்றைய நற்செய்தி வாசகம் (யோவா.3:7-15) பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, நம் சொந்த முயற்சிகளால் அல்லாமல், தூய ஆவியாரால் நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று கூறினார்.

நம் பணிவு, தூய ஆவியாருக்குத் கதவைத் திறந்து வைக்கின்றது, அவரே, மாற்றத்தை, தோற்ற மாற்றத்தை, மறுபடியும் பிறப்பதை ஆக்குபவர், தூய ஆவியாரை அனுப்புவது இயேசுவின் வாக்குறுதியாகும், அவர், நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத காரியங்களில்கூட, வியப்புக்களை ஆற்றும் சக்தி படைத்தவர் என்று திருத்தந்தை கூறினார்

தூய ஆவியார் ஆற்றும் செயலுக்கு நாம் பணிந்து இருந்தால், முதல் கிறிஸ்தவ சமுதாயம், ஒரு சிறந்த எடுத்துக்காட்டான அடையாளமாக உள்ளது போன்று, நாமும் விளங்கலாம் என்றும், தூய ஆவியார் நல்லிணக்கத்தை உருவாக்குவார் என்றும் திருத்தந்தை கூறினார்.

பிரிவினைக்குக் காரணங்கள்

பங்குத்தளங்கள், மறைமாவட்டங்கள், அருள்பணியாளர் குழுமங்கள், துறவு சபைகள் ஆகியவை மத்தியில் பல காரியங்கள் பிரிவினையை ஏற்படுத்துகின்றன, அவற்றில் பணம், வீண்பெருமை, பயனற்ற பேச்சுகள் ஆகிய மூன்றும் முக்கியமானவை என்று கூறிய திருத்தந்தை, பணம், குழுமத்தைப் பிரிக்கின்றது, இதனாலேயே ஏழ்மை, குழுமத்தின் அன்னையாக நோக்கப்படுகிறது என்றும் கூறினார்.

குழுமத்தைக் காவல்காக்கும் சுவர் ஏழ்மையாகும் என்றும், குடும்பங்களையும் பணம் பிரிக்கின்றது, சொத்துப்பிரச்சனையால் எத்தனை குடும்பங்கள் பிரிகின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு குழுமத்தைப் பிரிக்கும் மற்றொரு காரியம் வீண்பெருமை, இது, மற்றவரைவிட உயர்ந்தவராக நோக்கப்பட வேண்டும் என்பதிலிருந்து எழுகின்ற ஆசையாகும் என்று கூறினார்.

ஆண்டவரே நான் மற்றவர்போல் இல்லாமல் இருப்பதற்கு நன்றி என்ற பரிசேயரின் செபம் தற்பெருமையாகும், இதனை, தங்களிடமுள்ள சிறந்த ஆடைகளோடு அருள்சாதனக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வோரிடமும் காணலாம் என்றார் திருத்தந்தை.

வீண்பெருமை, தன்னழகைக் காட்டும் பகட்டுடன் வாழ்வதற்கும் இட்டுச்செல்லக்கூடும், பகட்டு இருக்குமிடத்தில் எப்போதும் பிரிவினை இருக்கும் என்றுரைத்த திருத்தந்தை, ஒரு குழுமத்தைப் பிரிக்கும் மற்றொரு காரியம், வீணான பேச்சுக்களைப் பேசுவதாகும் என்றும், மற்றவர் பற்றி குறை பேசுவதன் தேவையை, சாத்தான் நம்மில் வைக்கின்றது என்றும் கூறினார்.

எனினும், தூய ஆவியாரின் உதவியால், நாம் இந்தச் சோதனைகளை வெல்லலாம் என்றும், அவருக்குப் பணிந்து நடக்க ஆண்டவரிடம் இத்திருப்பலியில் மன்றாடுவோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரையில் கூறினார்.

இத்திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.

 

21 April 2020, 10:40
அனைத்தையும் படிக்கவும் >