தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருப்பலி 250420 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 250420  

கோவிட்-19ஆல் இறப்பவர்களை நல்லடக்கம் செய்யும் பணியாளர்களுக்காக

நம்பிக்கையை அறிவிப்பது என்பது, தூய ஆவியார் மக்களில் செயல்படும்படியாக, சாட்சியம் மற்றும், பணிகள் வழியாக, கடவுளை வெளிப்படுத்துவதாகும். பணியாற்றுவது, ஒரு வாழ்வு முறையாகும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளை நோயால் இறப்பவர்களை அடக்கம் செய்யும் பணி மிகவும் வேதனையானது மற்றும், வருத்தம் தருவது, இந்தப் பணியை ஆற்றுபவர்கள் இந்தக் கொள்ளை நோயின் வேதனையை மிக நெருக்கமாக அனுபவிப்பவர்கள், எனவே இந்தப் பணியாளர்களுக்காகச் செபிப்போம் என்று, இச்சனிக்கிழமை காலை திருப்பலியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

நற்செய்தியாளர் புனித மாற்குவின் திருநாளான ஏப்ரல் 25, இச்சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இப்புனிதரின் நினைவு திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் நம்பிக்கையைப் போதிப்பது, நற்செய்திக்குச் சான்றுபகர்வதற்கு இன்றியமையாதது என்று கூறினார்.

இயேசு, தம் தந்தையிடம் செல்வதற்குமுன், தம் திருத்தூதர்களிடம், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற்.16,.15-20)” என்று கூறிய நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, நம்பிக்கையின் மறைப்பணி இயல்பு பற்றி வலியுறுத்திக் கூறினார்.

தன்னிலிருந்து அடுத்தவருக்கு

ஒருவர் நம்பிக்கையில் வளர்கையில், அது இயல்பிலே, தன்னிலிருந்து அடுத்தவருக்கு வழங்குவதற்கு ஒருவரை இட்டுச் செல்வதாகும், அனுப்புதல் என்பதும் இதுதான் என்று திருத்தந்தை விளக்கினார்.   

நம்பிக்கை அறிவிக்கப்பட வேண்டும்

நம்பிக்கை எல்லாவற்றுக்கும் மேலாக, சான்று பகரும் வாழ்வால் பறைசாற்றப்பட வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, ஒரு கிறிஸ்தவரின் அல்லது ஒரு கத்தோலிக்கரின் அடையாள அட்டை, தன்னைப்பற்றிய குறிப்புகளை மட்டும் கொண்டிருப்பதல்ல, அது ஏதோ ஒரு கலாச்சார அட்டை அல்ல, மாறாக, நம்பிக்கை என்பது, அடுத்தவருக்கு அளிப்பதற்கு ஒருவரை வழிநடத்துவதாகும், அது அமைதியாக இருக்காது என்று எடுத்துரைத்தார்.

மறைப்பணியாளராக இருப்பது, தொலைதூர இடங்களுக்குச் செல்வதில் மட்டும் அல்ல, மாறாக, ஒருவரிடம் நம்பிக்கை இருந்தால், அது தன்னைவிட்டு வெளியேறி, சமுதாய நம்பிக்கையாக மாறும் என்றுரைத்த திருத்தந்தை, இது, ஒருவரை மதம் மாற்றுவது அல்ல, கால்பந்து விளையாட்டு அணிக்கோ அல்லது பிறரன்பு அமைப்பிற்கோ ஆள் சேர்ப்பது போன்றதும் அல்ல என்றும் கூறினார்.

மற்றவர் நம்பும் முறையில் சான்று வாழ்வு

நம்பிக்கையை அறிவிப்பது என்பது, தூய ஆவியார் மக்களில் செயல்படும்படியாக, சாட்சியம் மற்றும், பணிகள் வழியாக, கடவுளை வெளிப்படுத்துவதாகும் என்றும், பணியாற்றுவது, ஒரு வாழ்வு முறையாகும் என்றும், விவரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருவர், நான் ஒரு கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொண்டு, வேறு கடவுளை வணங்குவோர் போல் வாழ்ந்து வந்தால், எவரும் அவரை நம்ப மாட்டார், மாறாக, ஒருவர் கிறிஸ்தவராக இருந்தால், கிறிஸ்தவர்போல் வாழ வேண்டும், அப்போது அவரைப் பார்த்து மக்கள் கவரப்படுவர், இதுவே சான்று பகர்தலாகும் என்றும், திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

மனத்தாழ்மை

இந்தச் சான்று பகர்தலை மனத்தாழ்மையுடன் ஆற்றவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதையே புனித பேதுரு இன்றைய முதல் வாசகத்தில், ”ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள் (1 பேதுரு5:5)” என்று கூற்றில் வலியுறுத்துகிறார் என்பதைச் சுட்டிக்காட்டினார்

திருஅவையில், வரலாற்றில், இயக்கங்களில், மற்றும் குழுக்களில், மதம் மாற்றுபவர் போல் செயல்பட்ட மனிதரின் வாழ்வு, இறுதியில் ஊழலில் முடிவுற்றதற்கு சான்றாக எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன என்று கூறினார், திருத்தந்தை.

நாம் நம்மைவிட்டு வெளியேறி, ஆண்டவருக்குச் சான்று பகர்ந்தால், நாம் பலனுள்ளவர்களாகவும், வியப்புக்குரிய பணிகளை ஆற்றுபவர்களாகவும் இருப்போம் என்பதற்கு ஆண்டவர் உறுதியளிக்கிறார் என்று, மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கருத்தியல்களைப் பரப்புகிறவர்களில் போதகர்கள் இருப்பார்கள், ஆனால், நம்பிக்கையைப் பறைசாற்றுகிறவர்களில் ஆண்டவர் இருக்கிறார், நம் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் மற்றும், உலக முடிவுவரை நமக்குத் துணை வருகிறார் என்றும், திருத்தந்தை கூறினார்.

டுவிட்டர்கள்

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்சனிக்கிழமையன்று நிறைவேற்றிய திருப்பலி மற்றும் மறையுரையை மையப்படுத்தி, டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை வெளியிட்டுள்ள, இரண்டாவது டுவிட்டர் செய்தியில், இன்று திருஅவை, புனித மாற்குவின் திருவிழாவைச் சிறப்பிக்கின்றது, நான்கு நற்செய்தியாளர்களில் ஒருவரான இவர், நற்செய்தியை முதலில் எழுதியவர். இந்த நற்செய்தி மிகவும் எளிமையான நடையைக் கொண்டிருக்கின்றது. உங்களுக்கு நேரம் இருந்தால், அதை வாசித்துப் பாருங்கள். ஆண்டவரின் வாழ்வை மிக எளிமையாக அவர் விவரித்துள்ளது, நம்மை இரசித்து வாசிக்க வைக்கும் என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

25 April 2020, 13:43
அனைத்தையும் படிக்கவும் >