தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 070420 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 070420  (Vatican Media)

அநீதியான தீர்ப்புகளால் துன்புறுவோருக்காக செபிப்போம்

பிரமாணிக்கமுள்ள ஊழியராக விளங்கிய இயேசுவை நினைத்துப் பார்ப்போம், நம் அழைப்பே பணியாற்றுவதாகும், நாம் தவறி வீழ்கையில் பேதுரு போன்று, மனம் நொந்து அழுவதற்கு ஆண்டவரிடம் மன்றாடுவோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அநீதியான தீர்ப்புக்களால் துன்புறும் மக்கள் அனைவருக்காகவும் இன்று செபிக்க விரும்புகிறேன், இயேசு குற்றமற்றவராய் இருந்தபோதிலும், சட்ட அறிஞர்களால் அவர் கடுமையாய்த் துன்புறுத்தப்பட்டார் என்று, ஏப்ரல் 07, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்

இன்றைய திருப்பலியில் வாசிக்கப்பட்ட இறைவாக்கினர் எசாயா நூல் பகுதி (எசா.49:1-6), மெசியாவுக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் தொடர்பு உள்ளதைக் காட்டுகின்றது, கடவுள், இறைவாக்கினரை, அவர் பிறப்பதற்கு முன்னரே தேர்ந்தெடுக்கிறார் என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, அதேபோல், நாம் ஒவ்வொருவரும், நம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

இந்த உலகில், நம்மில் எவரும் எந்தவித நோக்கமுமின்றி படைக்கப்படவில்லை என்றும், கடவுள் நம்மைத் தேர்ந்தெடுத்தது பணியாற்றுவதற்காகவே என்றும் கூறிய திருத்தந்தை, கடவுளின் ஊழியனாக நான் பிறப்பிலே தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று கூறினார். 

பணியாற்ற அழைப்பு

பணியாற்றுவது என்பது, பணியாற்றுவதைவிட வேறு ஆதாயமும் நமக்கு உள்ளது என்பது அல்ல, இதற்கு, கடவுளின் ஊழியராகிய இயேசு, நமக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்  என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவின் மகிமை, அவர் மரணம் வரை பணியாற்றினார் என்பதே என்றும், அது தோல்வியாகத் தெரிந்தாலும், அதுவே, பணியாற்றும் வழியாக அமைந்திருந்தது என்று எடுத்துரைத்தார்.

இறைமக்கள், பணிபுரியும் மனநிலையிலிருந்து தங்களை விலக்கியவேளை, அம்மக்கள்தான், தங்களின் மதக்கொள்கைகளை எதிர்த்தவர்கள் என்று மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, இந்நிலை, அவர்களைப் பலநேரங்களில் சிலைவழிபாட்டிற்கும், தங்கள் அழைப்பை இழப்பதற்கும் இட்டுச்சென்றது என்று கூறினார்.  

மனம்வருந்தும் மனநிலை

தம் ஊழியராக, நம்மைத் தேர்ந்தெடுத்து, திருப்பொழிவு செய்த கடவுள்முன் நாம் எந்த மனநிலையில் உள்ளோம் என்பதே மிக முக்கியம் என்றும், இயேசுவை மறுதலித்த போதும், சேவல் கூவியபோதும், மனம் நொந்து அழுத (மத்.26:75). மற்றும், மனம் வருந்திய, பேதுருவின் எடுத்துக்காட்டு, நமக்குத் தூண்டுதலின் ஊற்றாக உள்ளது என்றும், திருத்தந்தை கூறினார்.

தவறிழைத்து சரிக்கி விழுகையில் மன்னிப்பை இறைஞ்சுவதே ஊழியனின் பாதை என்றும், தான் பாவத்தில் வீழ்ந்தேன் என்பதை உணரத் திறனற்ற ஊழியனின் மற்றொரு பாதை, சிலைவழிபாட்டின் உணர்ச்சிகளுக்கு இட்டுச்செல்லும், யூதாஸ் போன்று, அத்தகையோரின் இதயம் சாத்தானுக்குத் திறந்ததாய் மாறுகிறது என்றும், திருத்தந்தை கூறினார். 

திருத்தந்தையின் செபம்

பிரமாணிக்கமுள்ள ஊழியராக விளங்கிய இயேசுவை நினைத்துப் பார்ப்பதற்கு, மறையுரையின் இறுதியில் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் நம் அழைப்பு, பதவிகளைக் கொண்டிருந்து ஆதாயம் தேடுவது அல்ல, மாறாக, நம் அழைப்பே பணியாற்றுவதாகும் என்றும், நாம் தவறி வீழ்கையில் பேதுரு போன்று மனம் நொந்து அழுவதற்கு ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்றும் கூறினார்.

07 April 2020, 14:01
அனைத்தையும் படிக்கவும் >