தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனை   (ANSA)

பெண் துறவியருக்காக திருத்தந்தையின் திருப்பலி

உலக மக்கள் வாழ்ந்துவரும் நெருக்கடி நிறைந்த இன்றையச் சூழலில், நோயுற்றோரையும், வறியோரையும் பராமரிக்க தங்கள் வாழ்வையே வழங்கும் பெண் துறவியருக்காக திருப்பலியை ஒப்புக்கொடுத்த திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக மக்கள் வாழ்ந்துவரும் நெருக்கடி நிறைந்த இன்றையச் சூழலில், நோயுற்றோரையும், வறியோரையும் பராமரிக்க தங்கள் வாழ்வையே வழங்கும் பெண் துறவியருக்காக தான் இத்திருப்பலியை ஒப்புக்கொடுப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 25, இப்புதனன்று நிறைவேற்றிய திருப்பலியின் ஆரம்பத்தில் கூறினார்.

மார்ச் 25 சிறப்பிக்கப்பட்ட ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு பெருவிழா சிறப்புத் திருப்பலியை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை, இத்திருப்பலியில் தங்கள் துறவற வாக்குறுதிகளைப் புதுப்பித்துக்கொண்ட புனித வின்சென்ட் தே பால் பிறரன்பு சகோதரிகளுக்காக சிறப்பாக செபித்தார்.

கடந்த 98 ஆண்டுகளாக நற்பணியாற்றும் இத்துறவு சபையைச் சேர்ந்தவர்கள், சாந்தா மார்த்தா இல்லத்தில் இயங்கிவரும் மருத்துவ மையத்தை நடத்தி வருகின்றனர் என்பதை, இத்திருப்பலியின் துவக்கத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை, அவர்களைப்போல், நலப்பணிகளில் ஈடுபடும் அனைத்து பெண் துறவியருக்கும் தன் செபங்களை ஒப்புக்கொடுத்தார்.

இந்தப் பெருவிழாவுக்கென வழங்கப்பட்ட லூக்கா நற்செய்தி வாசகம் வாசிக்கப்பட்டபின், மறையுரையைத் துவங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளம்பெண் மரியாவுக்கு நிகழ்ந்த இந்த தனிப்பட்ட அனுபவம், நற்செய்தியாளர் லூக்காவை அடைவதற்கு ஒரே காரணம், இந்நிகழ்வை, அன்னை மரியா அவருக்கு கூறினார் என்று எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து, நாமும், அன்னை மரியா, இந்நிகழ்வை இன்று நமக்குக் கூறுவதாக கற்பனை செய்துகொண்டு, மறையுண்மை நிறைந்த இந்நிகழ்வுக்கு செவிமடுப்போம் என்று கூறியத் திருத்தந்தை, இவ்விழாவின் நற்செய்தியை (லூக்கா1:26-38), மீண்டும் ஒருமுறை வாசித்தார்.

கடந்த சில நாள்களாக திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனையையும், ஆசீரையும் முன்னின்று நடத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 25, இப்புதன் திருப்பலியின் இறுதியிலும், நற்கருணை ஆசீரை வழங்கினார்.

25 March 2020, 16:04
அனைத்தையும் படிக்கவும் >