தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 120320 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 120320 

COVID-19 - முடிவெடுக்கும் அதிகாரிகளுக்காக செபிப்போம்

செல்வரும், இலாசரும் உவமை, வெறும் இருவரைப்பற்றிய கதை அல்ல, மாறாக, இன்றைய உலகில் நிலவும் வேற்றுமை நிலையை எடுத்துரைக்கும் நிகழ்காலக் கதை – திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 12, இவ்வியாழன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியின் துவக்கத்தில், உலகெங்கும் பரவியிருக்கும் கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியை எதிர்கொள்ள, ஒவ்வொரு நாட்டிலும் பொறுப்பில் உள்ளோர் சரியான முடிவுகளை எடுக்க, அவர்களுக்காக வேண்டிக்கொள்வோம் என்ற கருத்தை முன்வைத்து, திருப்பலியைத் துவக்கினார்.

வத்திக்கான் ஊடகத்தின் வழியே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இத்திருப்பலியில், இந்த நோய் உருவாக்கியுள்ள நெருக்கடியால், புறந்தள்ளப்பட்டுள்ள போர்ச் சூழல்களை மறவாமல், இப்போர்களால் துயருறும் வறியோரையும், குழந்தைகளையும் நினைவுகூர்ந்து செபிப்போம் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

தனித்து விடப்படும் அரசு அதிகாரிகளுக்காக செபிக்க...

நெருக்கடி நேரங்களில், பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தனித்து விடப்படுவதைப் போல் உணர வாய்ப்புண்டு என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கொரோனா நெருக்கடி நேரத்தில், அரசு அதிகாரிகள் தனித்து விடப்படுவதில்லை, மாறாக, அவர்களுடன் நம் செபங்கள் இணைகின்றன என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்துவோம் என்று கேட்டுக்கொண்டார்.

செல்வரும், இலாசரும் உவமையை மையப்படுத்தி...

மேலும், இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள செல்வரும், இலாசரும் உவமையை மையப்படுத்தி, தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உவமை, வெறும் இருவரைப்பற்றிய கதை அல்ல, மாறாக, இன்றைய உலகில் நிலவும் வேற்றுமை நிலையை எடுத்துரைக்கும் நிகழ்காலக் கதை என்று எடுத்துரைத்தார்.

தன் வீட்டு வாசலில் வறியவர் ஒருவர் வாழ்கிறார், அவர் பெயர் இலாசர் என்பதெல்லாம் அறிந்திருந்த செல்வர், அவரைப்பற்றிய அக்கறை ஏதுமின்றி, தன் சொந்த சுகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ்ந்துவந்தார் என்பதை, திருத்தந்தை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

இரு உலகங்களுக்கிடையே பெரும் பிளவு

வேறுபாடு ஏதுமின்றி, அனைத்து மனிதருக்கும் வகுக்கப்பட்டுள்ள ஒரே முடிவான சாவை, செல்வரும், இலாசரும் அடைந்தனர் என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்விருவரும் மறு உலகில் பெற்ற இரு உலகங்களுக்கிடையே ‘பெரும் பிளவு ஒன்று உள்ளது’ என்று ஆபிரகாம் கூறுவது, நம் கவனத்தில் பதிகிறது என்று கூறினார்.

இவ்விரு உலகங்களுக்கும் இடையே உள்ள பெரும் பிளவு, மறுவாழ்வில் தானாகவே உருவாவது கிடையாது, மாறாக, இவ்வுலகிலேயே, மனிதர்களால் உருவாக்கப்படுகிறது என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

விவரங்களை அறிவது மட்டும் போதாது

தன் வாசலில் கிடந்த ஏழை இலாசரைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் செல்வர் அறிந்திருந்தாலும், அவற்றின் அடிப்படையில் அவர் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகிலும், வறியோரைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் நமக்குத் தெரிந்திருந்தும், அவற்றின் அடிப்படையில், நாம் எவ்வித முயற்சியும் எடுக்காமல் அக்கறையற்றிருப்பதைக் குறித்து சிந்திக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தன் பெயரை இழந்த செல்வர்

ஏழை இலாசருக்கு பெயர் வழங்கப்பட்டிருப்பதும், செல்வருக்கு பெயர் வழங்கப்படாமல் இருப்பதும், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, செல்வர், அவரது செல்வத்தால், அவர் வாழ்ந்த சுகவாழ்வால், தன் உண்மையான அடையாளத்தை இழந்துவிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டவே, அவருக்கு பெயர் வழங்கப்படவில்லை என்று கூறினார்.

மனித துன்பங்களைக் கண்டும் காணாமல் அக்கறையற்று வாழ்வதை விடுத்து, அத்துன்பங்களை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளும் வரத்தை வேண்டுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

12 March 2020, 14:29
அனைத்தையும் படிக்கவும் >