தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்ல திருப்பலியில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்ல திருப்பலியில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

சிறைப்பட்டோருக்காக, திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலி

இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிறைவேற்றியத் திருப்பலியின் துவக்கத்தில், கடினமான இந்நெருக்கடி நேரத்தில், சிறையில் அடைக்கப்பட்டிருப்போருக்கு, இறைவன் ஆறுதல் வழங்கவேண்டுமென்று செபித்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 11, இப்புதன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லத்தில் நிறைவேற்றியத் திருப்பலியின் துவக்கத்தில், கடினமான இந்நெருக்கடி நேரத்தில், சிறையில் அடைக்கப்பட்டிருப்போருக்கு, இறைவன் ஆறுதல் வழங்கவேண்டுமென்று, தனிப்பட்ட முறையில் செபித்தார்.

வத்திக்கான் ஊடகத்தின் வழியே, YouTubeல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இத்திருப்பலியில், இன்றைய வழிபாட்டின் இரு வாசகங்களை மையப்படுத்தி, தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை.

இறைத் திட்டங்களுக்கு எதிராக அலகை

இறைவன் வகுக்கும் திட்டங்களை நிராகரிப்பதற்கு அலகை பலவழிகளில் நம்மைத் தூண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியாவின் வாழ்வில், அலகை, பல்வேறு தடைகளை உருவாக்கியதையும், அவரை அவமானப்படுத்தியதையும் எடுத்துக்காட்டுகளாக வழங்கினார்.

அலகை பயன்படுத்தும் இரு வழிகள்

நம்மைச் சோதிக்கும் அலகை, இரு வழிகளைப் பயன்படுத்துகிறது என்பதை குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, முதல் வழியில், நாம், இறைவனிடமிருந்து விலகிச் செல்வதற்கு, இவ்வுலகக் கவர்ச்சிகளை நம்முன் வைக்கிறது என்று கூறினார்.

இந்த வழியில் நாம் ஈர்க்கப்படவில்லை என்று அலகை அறிந்தால், தன் இரண்டாவது வழியாக, நம்மை முற்றிலும் அழிப்பதற்கு முயல்கிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வழியில், அலகை, இறைவனின் சீடர்களை, விரைவில் அழித்துவிடாமல், அவர்களை, படிப்படியாக கொல்கிறது என்று கூறினார்.

சிலுவையில் ஏளனப்படுத்தப்பட்ட இயேசு

அலகை ஒருவரை எவ்விதம் அவமானத்தால் கொல்கிறது என்பதற்கு, சிலுவையில் அறையப்பட்ட இயேசு ஓர் எடுத்துக்காட்டு என்று கூறியத் திருத்தந்தை, அவரது இருபுறமும் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளை யாரும் கேலி செய்யவோ, அவமானப்படுத்தவோ இல்லை என்றும், சிலுவையைச் சூழ்ந்திருந்த அனைவரும், இயேசுவை ஏளனம் செய்வதிலேயே குறியாய் இருந்தனர் என்றும் எடுத்துரைத்தார்.

இவ்வுலக வழிகளையும், இறைவனின் வழிகளையும் உய்த்துணரும் வரத்திற்காகவும், இறைவனின் வழியை தெளிவாக அறிந்து, அதைப் பின்பற்றும் வரத்திற்காகவும் செபிப்போம் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை, தன் மறையுரையை நிறைவுசெய்தார்.

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

தன் மறையுரையில் பகிர்ந்துகொண்ட கருத்தை, டுவிட்டர் செய்தியாக வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை மக்கள் காணும்வகையில், YouTube வலைத்தள தொடர்பை, தன் டுவிட்டர் செய்தியில் https://www.youtube.com/watch?v=lVM5QK4icY0 வெளியிட்டுள்ளார்.

"இவ்வுலகக் கவர்ச்சிகளின் மகிமை, கிறிஸ்துவின் சிலுவையிலிருந்து நம்மை விலகிச் செல்வதற்கு அலகை வழங்கும் வழி. கவர்ச்சியான இவ்வுலகப் பாதையிலிருந்து விலகி, ஆண்டவரின் பாதையாம் சிலுவைப் பாதையை தெரிந்து தெளியும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம்" என்று சொற்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியிட்டார்.

11 March 2020, 14:53
அனைத்தையும் படிக்கவும் >