தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா சிற்றாலய திருப்பலியின்போது - 260320 சாந்தா மார்த்தா சிற்றாலய திருப்பலியின்போது - 260320 

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் பொய் தெய்வ வழிபாடு

பொய் தெய்வ வழிபாடு, இறைவன் நமக்கு வழங்கிய அனைத்து கொடைகளையும் பறித்துவிடும் என்ற எச்சரிக்கையை திருத்தந்தை விடுத்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தாலும், வேறு ஆபத்துக்களாலும் சூழப்பட்டுள்ள மக்களை, பல்வேறு அச்சங்களிலிருந்து இறைவன் விடுவிக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில் வேண்டிக்கொண்டார்.

பல்வேறு அச்சங்களில் வாழ்வோருக்காக...

மக்களிடையே நிலவும் அச்சங்களைக் குறித்து திருப்பலியின் துவக்கத்தில் பேசிய திருத்தந்தை, என்ன நேருமோ என்ற அச்சத்தில், மருத்துவமனைகளிலும், இல்லங்களிலும், வாழும் முதியோர், நிரந்தரமான வேலையில்லாததால், தங்கள் குடும்பங்களை காப்பாற்றுவது எப்படி என்று தெரியாமல் தவிப்போர், இந்தப் பொதுவான நெருக்கடி நேரத்தில் பொதுநலப்பணிகளில் ஈடுபட்டிருப்போர் ஆகியோரை, தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுப் பேசினார்.

பொறுமை இழந்ததால் உருவான பொய் தெய்வங்கள்

இன்றைய திருப்பலியில் வாசிக்கப்பட்ட விடுதலைப்பயண நூல் (வி.ப. 32:7-14) பகுதியை மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் பொய் தெய்வ வழிபாடு எவ்வாறு தாக்கங்களை உருவாக்குகின்றன என்பதை விளக்கிக் கூறினார்.

மலை மீது சென்ற மோசே திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டதும், இஸ்ரயேல் மக்கள் பொறுமை இழந்தனர், மற்றும், எகிப்து நாட்டில் அவர்கள் வழிபட்ட தெய்வங்களின் நினைவுகள் அவர்களை ஆக்கிரமித்தன என்று, திருத்தந்தை, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

விடுதலை என்ற கனவை நோக்கி துவங்கிய இஸ்ரயேல் மக்களின் பயணம், பாலை நிலம், தாகம், பசி என்ற எதார்த்தங்களால் தடுமாற்றம் அடைந்தது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகையக் குறைபாடுகள், வாழும் இறைவனிடமிருந்து, அவர்கள் கவனத்தை, பொய் தெய்வங்களை நோக்கித் திருப்பின என்று கூறினார்.

அனைத்தையும் பறித்துக்கொள்ளும் பொய் தெய்வங்கள்

பொய் தெய்வமான உலோகக் கன்றுக்குட்டியைச் செய்வதற்கு, அம்மக்கள் தங்களிடமிருந்த பொன், வெள்ளி அனைத்தையும் தரவேண்டியதாயிற்று என்பதை, தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, பொய் தெய்வ வழிபாடு, இறைவன் நமக்கு வழங்கிய அனைத்து கொடைகளையும் பறித்துவிடும் என்ற எச்சரிக்கையை விடுத்தார்.

இறைவன் மனிதருக்கு வழங்கியுள்ள அறிவுத்திறன், அன்பு, ஆகிய அனைத்துக் கொடைகளையும் பயன்படுத்தி, பொய் தெய்வங்களை உருவாக்கிக்கொள்கிறோம் என்றும், நாம் உருவாக்கிய தெய்வங்கள் மீது கொள்ளும் பற்றினால், உண்மை இறைவனை விட்டு விலகிச் செல்கிறோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

26 March 2020, 14:52
அனைத்தையும் படிக்கவும் >