தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 220320 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 220320 

இயேசு கடந்து செல்கையில் அவரைக் கண்டுகொள்ள

இயேசு நம்மைக் கடந்துசெல்கையில் என்ன நடக்கின்றது என்பதை உண்மையிலேயே புரிந்துகொள்வதற்கு, இன்று வீட்டில், நற்செய்தி நூலை எடுத்து, யோவான் நற்செய்தி பிரிவு 9 ஐ, ஒன்று அல்லது இரண்டு முறைகள் அமைதியாக வாசியுங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியால் பலர் இறக்கின்றனர், தங்களின் அன்புக்குரியவர்கள் அருகில் இல்லாமலே தனிமையில் இறக்கின்றனர் போன்ற செய்திகளை இந்நாள்களில் நாம் கேட்டு வருகின்றோம், இவர்களையும், இவர்களின் குடும்பங்களையும், இன்று சிறப்பாக நினைத்து செபிப்போம் என்று, மார்ச் 22, இஞ்ஞாயிறு காலை உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

யோவான் நற்செய்தி பிரிவு 9, இயேசு கிறிஸ்துவின் அறிவிப்பு மற்றும், ஒரு மறைக்கல்வியாக இருக்கின்றது என்று, இத்திருப்பலியின் மறையுரையை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவர் என்னைக் கடந்து செல்கையில்

“ஆண்டவர் என்னைக் கடந்து செல்கையில் நான் அஞ்சுகிறேன், ஏனெனில், அவர் கடந்து செல்கையில் நான் அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவேனோ என்று பயப்படுகிறேன்” என்ற புனித அகுஸ்தீனாரின் வார்த்தைகள், எனது இதயத்தை எப்போதும் தொடுகின்றன என்று மறையுரையின் ஆரம்பத்திலே சொல்லி, அச்சொற்கள் பற்றிய சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை.

இயேசுவின் பிரசன்னத்தில், இதயத்தின் உண்மையான உணர்வுகள் வருகின்றன என்பது உண்மை, அவரின் பிரசன்னத்தில் நம் உண்மையான எண்ணங்கள் வெளியாகின்றன, இது ஓர் அருளாகும், ஏனெனில், இதனாலேயே புனித அகுஸ்தீனார், ஆண்டவர் கடந்துசெல்வதை உணராமல் அவரைக் கடந்துபோகவிடுவேனோ என்று அஞ்சுகிறார் என்று திருத்தந்தை கூறினார்.

இயேசு சிறந்ததை வெளிக்கொணர்கிறார்

இயேசு சென்றுகொண்டிருந்தபோது, பார்வையற்றவரைக் குணப்படுத்துகிறார் மற்றும், அவதூறை உருவாக்குகிறார் என்றும், இந்நிகழ்வு மக்களில் சிறந்ததையும், மோசமானதையும் கொணர்கிறது என்றும், இது, பார்வையற்ற மனிதரில் சிறந்ததை வெளிக்கொணர்ந்தது என்றும் திருத்தந்தை கூறினார்.

பார்வையற்றவர் பகிர்ந்துகொண்ட முறையில், அவரின் ஞானம் வியக்க வைக்கின்றது, அவரின் விவாதங்கள், தெளிவாகவும், துல்லியமாகவும் இருந்தன, அவர், வஞ்சகப்புகழ்ச்சியைக்கூட பயன்படுத்துகிறார் என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இப்புதுமை நிகழ்வு, திருச்சட்ட அறிஞர்களிடம் இருந்த மோசமானதை வெளிப்படுத்தியது என்று கூறினார்.   

திருச்சட்ட அறிஞர்கள், எல்லாச் சட்டங்களையும் அறிந்திருந்தனர், அதிலே அவர்கள் ஊன்றியிருந்தனர், ஆனால் கடவுள் அவர்களைக் கடந்துசெல்லும்போது அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றும், அவர்கள் தங்களின் பழக்கவழக்கங்களில் பற்றுகொண்டு அதிலே உறுதியாய் இருந்தனர், அதனால் அநீதி இழைக்கும்போதுகூட அது அவர்களுக்குப் பிரச்சனையாகத் தெரியவில்லை என்றும் திருத்தந்தை கூறினார்.

யோவான் நற்செய்தி பிரிவு 9

இயேசுவின் பிரசன்னம், இறுக்கமான உணர்வுகளிலிருந்து வெளிவரச் செய்கின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம்மைக் கடந்துசெல்கையில் என்ன நடக்கின்றது என்பதை உண்மையிலேயே புரிந்துகொள்வதற்கு, இன்று வீட்டில், நற்செய்தி நூலை எடுத்து, யோவான் நற்செய்தி பிரிவு 9 ஐ, ஒன்று அல்லது இரண்டு முறைகள் அமைதியாக வாசியுங்கள், இதன் வழியாக புனித அகுஸ்தீனாரின் வார்த்தைகளை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்று கூறினார்.

22 March 2020, 10:54
அனைத்தையும் படிக்கவும் >