தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 230320 சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 230320 

நம் விசுவாசத்தை மேலும் அதிகரிக்கும்படி இறைவனை மன்றாடுவோம்

நம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், துணிச்சலுடனும் நாம் செபிக்கும்போது, இறைவன் நமக்கு பதிலுரைக்க காலம் தாழ்த்தினாலும், நம்மை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உண்மை செபத்தின் மூன்று முக்கியக் கூறுகள் குறித்து இத்திங்கள் காலை சாந்தா மார்த்தா இல்லத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் மகனை குணமாக்கும்படி விண்ணப்பித்த தந்தைக்கும், இயேசுவுக்குமிடையே இடம்பெற்ற உரையாடல் குறித்த, இத்திங்கள் திருப்பலி வாசகம் குறித்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மை செபம் என்பது, விசுவாசத்தில் செயல்படுவது, அவ்விசுவாசத்தில் நிலைத்திருப்பது, மற்றும், அவ்விசுவாசத்தில் மனவுறுதியுடன் இருப்பது என்பது குறித்து, தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

தீய ஆவி ஆட்கொள்ளப்பட்ட, அந்த மகனின் தந்தை உரைப்பதுபோல், நம் விசுவாசத்தை மேலும் அதிகரிக்கும்படி இறைவனை நோக்கி மன்றாடுவோம், ஏனெனில், வாயிலிருந்தல்ல, மாறாக, இதயத்தின் விசுவாசத்திலிருந்து செபம் பிறக்கிறது என்றார் திருத்தந்தை.

நாம் செபிக்கும்போது இறைவன் நம் அருகிலேயே இருக்கிறார், நம் பிரச்சனைகளுக்கு அவர் தீர்வை வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் செபிப்பதே உண்மை செபம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செபத்தின் இரண்டாவது முக்கியக் கூறாக, விசுவாசத்தில் நிலைத்திருப்பதைப்ப பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நடுஇரவில் கதவை விடாமல் தட்டி தன் நண்பரிடமிருந்து உதவியைப் பெற்றவர், மற்றும், அநீதியான நீதிபதியை பலமுறை தொந்தரைசெய்து நீதியைப் பெற்ற கைம்பெண் என்ற உவமைகளை முன்வைத்து, செபத்தில் விடாப்பிடியுடன் நிலைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். இறைவனிடம் வேண்டுவது கிட்டவில்லையெனில், அவரை நோக்கி மீண்டும் மீண்டும் தட்டுவோம், ஏனெனில் கிளிப்பிள்ளைப்போல் வார்த்தைகளை திருப்பி திருப்பிச் சொல்வதல்ல செபம்  என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செபத்தின் மூன்றாவது கூறாக, நாம் மனஉறுதியுடன் செபத்தில் செயல்படவேண்டும் என இறைவன் விரும்புகிறார் என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோசேயும் ஆபிரகாமும் மக்களுக்காக இறைவனுடன் துணிச்சலாக உரையாடியதை எடுத்துரைத்தார். செபத்தில் இறைவன் முன்னால் துணிச்சலுடன் எழுந்து நிற்பது என்பது, தேவநிந்தனை அல்ல, மாறாக, அது நற்பண்பேயாகும் எனவும் கூறிய திருத்தந்தை, இத்துணிச்சல் என்பது, அப்போஸ்தலிக்க நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, செபத்திற்கும் தேவையான ஒன்றாகும் என கூறினார்.

நம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், துணிச்சலுடனும் நாம் செபிக்கும்போது, இறைவன் நமக்கு பதிலுரைக்க காலம் தாழ்த்தினாலும், நம்மை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை என்ற உறுதியுடன், செபத்தில் தொடர்வோம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொரோனா தொற்றுநோயால் வேலை வாய்ப்புகளை இழந்துவரும், மற்றும், பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிவரும் மக்களுக்காக சிறப்பான விதத்தில் செபிப்பதாகக் கூறி, இத்திங்கள் திருப்பலியை துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆசீர்வாதத்தை வழங்கி, ஒரு செபத்தையும் செபித்தார்.

23 March 2020, 15:33
அனைத்தையும் படிக்கவும் >