தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லத்தில் திருப்பலி 140220 சாந்தா மார்த்தா இல்லத்தில் திருப்பலி 140220  (� Vatican Media)

வாழ்வில் உடன்பயணித்தவர்களை நன்றியோடு நினையுங்கள்

நம் வாழ்வு முழுவதும் நம்முடன் பயணித்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உடன்பணியாளர்கள்... போன்ற எல்லாரையும் நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்வது, நன்மையை நல்கும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒரு குடும்ப உணர்வைத் தந்து, நம் வாழ்வுப் பாதையில் நம்முடன் பயணித்த அனைவரையும் மறக்காமல், அவர்களை எப்போதும் நம் இதயங்களில் வைத்திருப்போம் என்று, இவ்வெள்ளி காலையில் வழங்கிய மறையுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்,

குடும்பம் என்ற தலைப்பில் தன் மறையுரைச் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, குடும்பம் என்பது, தந்தை, தாய், உடன்பிறப்புகள், தாத்தா பாட்டிகள் ஆகியோரைக் கொண்டது மட்டுமல்ல, பணியிடங்களில், அல்லது பள்ளிகளில் என நம் வாழ்வுப் பாதையில், நம்முடன் சில காலம் பயணித்த பெரிய குடும்பமும் உள்ளது என்று கூறினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், நாற்பது ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறும் பத்ரீசியா என்ற பெண்ணுக்காக, அந்த இல்லத்தின் சிற்றாலயத்தில், பிப்ரவரி 14, இவ்வெள்ளி காலையில் நன்றி திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, சாந்தா மார்த்தா இல்லம், வாழ்வுப் பாதையில் எம்மோடு உடன்வரும் மக்களைக் கொண்ட பெரிய குடும்பம் என்று கூறினார்.

இந்த இல்லத்தில் ஒருவர் நோயாய் இருந்தால் அவருக்கு உதவுகின்றனர், அங்கு தங்கியிருப்பவர்களில் ஒருவர் அங்கிருந்து சென்றால் வருத்தம் அடைகின்றனர், இவ்வாறு அவர்கள், ஒவ்வொரு நாளும், அர்ப்பணம் மற்றும், அக்கறையுடன் பணியாற்றுகின்றனர் என்று திருத்தந்தை கூறினார்.

பணியாற்றுவோரின் முகங்கள், புன்னகைகள், மற்றும், வாழ்த்துக்கள், ஒவ்வொருவரின் இதயத்தில் விதைக்கப்பட்ட விதைகள் போன்றவை, அவர்களுக்குப் பிரியாவிடை அளிக்கையில், அவர்களுக்கு நன்றி சொல்வது அல்லது, நம் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்பது நல்லது என்று திருத்தந்தை கூறினார்.    

தன்னலம் ஒரு பாவம்

சாந்தா மார்த்தா இல்லத்தில், நாற்பது ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறும் பத்ரீசியா அவர்களை நினைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் பயணிக்கும் அனைவரையும் நன்றியோடு இதயத்தில் இருத்த வேண்டும் என்றும், ஆண்டவர் நம்மைத் தனியே விட விரும்பாமல், நமக்குத் தோள்கொடுக்கிறார், நாம், தன்னலமாக இருப்பதை அவர் விரும்பவில்லை, தன்னலம் ஒரு பாவம் என்று கூறினார்.

டுவிட்டர்

மேலும், சாந்தா மார்த்தா இல்லத்தில் இவ்வெள்ளியன்று நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி, #HomilySantaMarta என்ற 'ஹாஷ்டாக்'குடன் தன் டுவிட்டர் செய்தியை திருத்தந்தை வெளியிட்டார்.

“நம் வாழ்வு முழுவதும் நம்முடன் பயணித்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உடன்பணியாளர்கள்... போன்ற எல்லாரையும் நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்வது, நமக்கு நன்மை பயக்கும். மக்களாக, நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து இருக்க வேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். எம்மை ஒருபோதும் தனியே விடாமல் இருப்பதற்கு, ஆண்டவரே, உமக்கு நன்றி!”  என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

14 February 2020, 14:54
அனைத்தையும் படிக்கவும் >