தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை  (Vatican Media)

அதிகாரம் என்பது ஆணையிடுவது அல்ல, சான்று பகர்தலாகும்

ஆண்டவரின் அதிகாரம், அவரின் போதனைகள் மற்றும், செயல்களுக்கு இடையே ஒத்திணங்கிச் செல்வதில் வெளிப்படுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அதிகாரம் என்பது ஆணையிடுவது அல்ல, மாறாக ஒத்திணங்கிச் செல்வது மற்றும், சான்று பகர்தலாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 14, இச்செவ்வாய் காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையில் கூறினார்.

செய்யும் செயல்களில் ஆண்டவரின் வழியைப் பின்பற்றாமல், அவரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்தி, அவருக்குச் சான்று பகராமல் வாழ்கின்ற மேய்ப்பர்கள் மற்றும் ஒத்திணங்கிச் செல்லாத கிறிஸ்தவர்களால் ஏற்படும் தீங்குகள் பற்றி, திருத்தந்தை விளக்கினார்.

"அதிகாரம் கொண்டவராக இயேசு போதித்தார்" என்பதைக் கூறும் இச்செவ்வாய் திருப்பலியின் மாற்கு நற்செய்தி பகுதியை (மாற்.1,21b-28) அடிப்படையாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தொழுகைக்கூடத்தில் போதித்தபோது, மறைநூல் அறிஞர் போலன்றி, அதிகாரம் கொண்டவராகச் செயல்பட்டதைக் கண்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்ததை நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார் என்று கூறினார்.

இயேசு கொண்டிருந்த அதிகாரம் அல்லது அக அதிகாரத்திற்கும், அதிகாரமின்றி அதைச் செயல்படுத்திய மறைநூல் அறிஞர்களின் அதிகாரத்திற்கும் இடையே நிலவும் வேறுபாட்டை விளக்கிய திருத்தந்தை, மறைநூல் அறிஞர்கள், சட்டத்தைப் போதிப்பதிலும், மக்கள் அதை கேட்க வைப்பதிலும் வல்லுனர்களாக விளங்கியபோதிலும், அவர்கள் நம்பகத்தன்மையற்றவர்களாய் இருந்தனர் என்றும் கூறினார்.  

இயேசுவின் அதிகாரம்

ஆண்டவரின் அதிகாரம், அவரின் மேலான ஆட்சியுரிமையில் ஒன்றாகும், இதோடு அவர் எல்லா இடங்களுக்கும் சென்றார், போதித்தார், குணப்படுத்தினார், மக்கள் சொல்வதைக் கேட்டார் என்றும், இது, அவரின் போதனைகள் மற்றும், செயல்களுக்கு இடையே ஒத்திணங்கிச் செல்வதை வெளிப்படுத்துகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

பரிசேயத்தனம் என்பது, மேய்ப்புப்பணிக்குப் பொறுப்புள்ளவர்களின் போதனைகளும், செயல்களும் ஒத்திணங்கிச் செல்லாததாகும், அதாவது பேசுவது ஒன்று, செய்வது வேறொன்றாக இருப்பதாகும் என்று கூறியத் திருத்தந்தை, இவர்கள் அதிகாரம் கொண்டவர்கள் அல்ல என்று கூறினார்.

அதேநேரம், இத்தகைய பல மேய்ப்பர்களை இறைமக்கள் சகித்துக்கொள்கின்றனர் மற்றும், தாழ்ச்சியோடு உள்ளனர் என்று மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட இறைமக்கள், அருளின் வல்லமையைப் புரிந்து கொள்வர் என்றும் கூறினார்.

திருமுழுக்குப் பெற்ற அனைவரும் ஆணையிடும் அதிகாரம் கொண்டவர்களாய் இல்லாமல், சான்று பகரக்கூடியவர்களாய், தங்களின் சொல்லும் செயலும் ஒத்திணங்கி வாழக்கூடியவர்களாய், ஆண்டவரின் வழியில் தோழர்களாய் இருப்பார்களாக என்று, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

டுவிட்டர் செய்தி

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலையில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, #HomilySantaMarta என்ற ஹாஸ்டாக்குடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“இயேசு போதித்தவை, ஆற்றியவை, வாழ்ந்தவை ஆகியவற்றுக்கிடையே ஒத்திசைவு இருந்ததால், அவர் அதிகாரம் கொண்டிருந்தார். அதிகாரம், ஒத்திசைவு மற்றும், சான்று பகர்தலில் நோக்கப்படுகின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இச்செவ்வாயன்று வெளியாயின.

14 January 2020, 15:59
அனைத்தையும் படிக்கவும் >