தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 310120 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 310120  (Vatican Media)

பாவ உணர்வை இழந்துவிடச் செய்யும் உலகப்போக்கு

நேர்மையான மனிதரான தாவீது, அரசராக மாறியதும், அரண்மையின் சுக வாழ்வில் மூழ்கி, தான் இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதை மறந்து தவறுகள் செய்யத் துணிந்தார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாவம் என்ற உணர்வை நாம் இழந்துவருவது, இன்றைய காலத்தின் தீமைகளில் ஒன்று என்ற எச்சரிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 31, இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய தன் மறையுரையில் கூறினார்.

சோதனைகளில் வீழ்ந்த தாவீது

தாவீது போன்ற ஒரு புனிதர், சோதனைகளில் வீழ்ந்ததைக் கூறும் இன்றைய முதல் வாசகத்தை மையப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, நாம் இவ்வுலகின் போக்கிற்கு நம்மையே உட்படுத்துகிறோமா என்ற கேள்வியை அடிக்கடி கேட்டுக்கொள்வது அவசியம் என்று கூறினார்.

நேர்மையான மனிதரான தாவீது, அரசராக மாறியதும், அரண்மனையின் சுக வாழ்வில் மூழ்கி, தான் இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதை மறந்து தவறுகள் செய்யத் துணிந்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து குற்றங்களைச் செய்த தாவீது

உரியாவின் மனைவியான பத்சேபாவைக் கருவுறச் செய்தல், பின்னர், உரியாவைக் கொல்லுதல் என்று தொடர்ந்து குற்றங்களைச் செய்த தாவீது, ஒன்றும் நிகழாததுபோல், தன் தினசரி வாழவைத் தொடர்ந்த வேளையில், அவரது இதயம் சலனமற்றிருந்தது, அவரது பெரும் குறையாக மாறியது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

தாவீது இவ்வாறு மாறியது, ஓரிரவில் நிகழ்ந்தது அல்ல என்றும், உன்னத மனிதரான தாவீது, சிறிது சிறிதாக தன் உயர் நிலையிலிருந்து தவறினார் என்றும், வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகப் போக்கிற்கு இடம்தரும் மனநிலை, நம்மை, இவ்வாறு நிலைகுலையச் செய்துவிடும் என்று எச்சரித்தார்.

பாவம் என்ற உணர்வை இழந்து...

"நாங்கள், உண்மையான கிறிஸ்தவர்களாக, ஒவ்வொரு ஞாயிறன்றும் திருப்பலிக்குச் செல்கிறோம்" என்று கூறும் பலர், பாவம் என்ற உணர்வை இழந்துவிடுவதையும் காண்கிறோம் என்று, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் கூறியுள்ளதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் நினைவுறுத்தினார்.

தாவீதுக்கு நிகழ்ந்தது பழைய வரலாறு அல்ல என்பதற்கு, இன்றைய பல நிகழ்வுகள் நமக்கு எச்சரிக்கைகளாக அமைந்துள்ளன என்று கூறியத் திருத்தந்தை, அர்ஜென்டீனா நாட்டின் 'இரக்பி' விளையாட்டு வீரர்கள், தங்கள் நண்பர்களில் ஒருவரைக் கொலை செய்த நிகழ்வை தன் மறையுரையில் பகிர்ந்துகொண்டதோடு, இளையோருக்கு பாவத்தைக் குறித்த சரியான பாடங்கள் புகட்டப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தாவீதின் நண்பரான நாத்தான்

தவறிழைத்த தாவீது, தன் தவறை உணர்வதற்கு, அவரது நண்பரான நாத்தான் உதவி செய்ததுபோல, நம்முடைய வாழ்விலும் ஒருவரை அனுப்பி, நம் குறைகளைக் களைவதற்கு இறைவன் உதவி செய்யவேண்டுமென அவரை மன்றாடுவோம் என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

டுவிட்டர் செய்தி

மேலும், சனவரி 31, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட புனித ஜான் போஸ்கோ விழாவை மையப்படுத்தி, #JohnBosco என்ற ஹாஷ்டாக்குடன் தன் டிவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்று புனித ஜான் போஸ்கோவை, இளைஞர்களுக்கு தந்தையாகவும், ஆசிரியராகவும் நாம் நினைவுகூருகிறோம். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வகுத்துள்ள திட்டத்தை வரவேற்கையில், குறிப்பாக, அன்பு இளைஞர்களே, நீங்கள் உங்களின் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றுவதில், இப்புனிதரின் புனிதமான வாழ்வு வழிகாட்டியாக அமைவதாக என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இவ்வெள்ளியன்று  இடம்பெற்றிருந்தன.

31 January 2020, 14:33
அனைத்தையும் படிக்கவும் >