தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி  (Vatican Media)

வெதுவெதுப்பான நிலையில் வாழும் கிறிஸ்தவர்கள்

திருத்தந்தை : கிறிஸ்தவர்களும் இறைவனை ஒரு மூலையில் ஒதுக்கிவைத்துவிட்டு, தங்கள் கைகளைக் கழுவிவிடுவது ஆபத்தானது மட்டுமல்ல, இறைவனுக்கு சவால் விடுவதாகவும் உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ விசுவாசத்தில், அக்கறையற்று, வெதுவெதுப்பான நிலையில் வாழும் கிறிஸ்தவர்களின் இருவேறு மனப்பான்மைகள் குறித்து, டிசம்பர் 16, இத்திங்கள் காலைத் திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவை கோவிலில் சந்தித்து, அவரது அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்களின் செயல், இறைவனை ஒரு மூலைக்குத் தள்ளியதாகவும், அவர்களின் பொறுப்புணர்வு குறித்து, கைகளைக் கழுவியதாகவும் இருந்தது என, இக்காலை சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இத்தகைய செயல்பாடுகளை, கடவுளும் நம் விடயத்தில் செய்தால் எப்படியிருக்கும் என்ற கேள்வியை முன்வைத்தார்.

கிறிஸ்தவர்களும் இறைவனை ஒரு மூலையில் ஒதுக்கிவைத்துவிட்டு,  தங்கள் கைகளை கழுவிவிடுவது ஆபத்தானது மட்டுமல்ல, இறைவனுக்கு சவால் விடுவதாகவும் உள்ளது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, இறைவனும் நம்மை மூலையில் ஒதுக்கிவைத்தால் நம்மால் விண்ணுலகை அடைய முடியாது, மற்றும், அவர் நம்மைக் குறித்து தம் கைகளைக் கழுவிவிட்டால், நமக்கு அது ஐயோ கேடு என்று கூறினார்.

எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறீர் என கேள்வி கேட்ட குருக்களிடம், மற்றொரு கேள்வியைக் கேட்ட இயேசுவுக்கு, அவர்கள், புத்திசாலித்தனமாக, எங்களுக்குத் தெரியாது எனக் கூறி தப்பிக்க முயன்றதுபோல், சில கிறிஸ்தவர்களும், மனித வரலாற்றில் புகாமல், பிரச்னைகளைத் தொடாமல், நன்மைக்காகவும் குணப்படுத்தலுக்காகவும் போராடாமல், தங்கள் கைகளைக் கழுவி, பிலாத்துக்களாய் வாழ்வது ஏற்புடையதல்ல என்றார் திருத்தந்தை.

இக்கால கலாச்சாரத்தின், வரலாற்றின், மக்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது தங்கள் கைகளைக் கழுவி, பட்டும் படாமல் வாழும் கிறிஸ்தவர்களைப் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில், பசியால் கையேந்தும் வறியோருக்கு எதுவும் அளிக்காமல், நான் காசு கொடுத்தால் அதனை குடிப்பதற்கு பயன்படுத்தப் போகிறார் என, தனக்குத் தானே சமாதானம் கூறிக்கொள்ளும் மனப்பான்மையைக் குறைகூறினார்.

பிறருக்கு உதவாததற்கு நியாயம் கற்பிக்கும், மற்றும், பிறரின் தேவைகள் குறித்து நம் கைகளைக் கழுவும் இத்தகைய கிறிஸ்தவர்களின் போக்குகள், இறைவன் நம்மில் பிறப்பதற்கு தடையாக உள்ளன என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், அக்கறையற்ற, வெதுவெதுப்பான நிலையில் வாழும் கிறிஸ்தவர்களைக் குறித்து இத்திங்கள் வழங்கிய மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வெண்ணத்தை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"அக்கறையற்ற, வெதுவெதுப்பான நிலையில் வாழும் கிறிஸ்தவர்களின் இரு மனப்பான்மைகள் இவை: நீர் எனக்கு இதைச் செய்வீராக, இல்லையேல் நான் கோவிலுக்கு இனி போகமாட்டேன் என்று கூறி, இறைவனை ஓர் ஓரத்தில் வைப்பது, தேவையில் இருப்போரைக் குறித்த அக்கறையேதுமின்றி கரங்களைக் கழுவுதல் ஆகியவை. இவ்விரு மனநிலைகளைக் களைந்து, ஆண்டவரின் வரவுக்கு நாம் இடம் தயாரிப்போமாக" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2019, 15:26
அனைத்தையும் படிக்கவும் >