தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருத்தந்தை திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி   (ANSA)

கிறிஸ்துவின் அன்பு, சின்னத்திரை அன்பைப்போன்றது அல்ல

இறைவனோடு நாம் கொள்ளும் அன்பு, நம்மை, கண்ணீரில் ஆழ்த்தினாலும், திருத்தூதர் பவுல் அடியாரைப் போல நாமும், "கடவுளின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்கவே முடியாது" என்ற உறுதியைப் பெறுவதற்கு செபிப்போம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்துவின் அன்பு, சின்னத்திரையில் காட்டப்படும் அன்பைப்போன்றது அல்ல என்றும், இயேசுவில் வெளிப்பட்ட இறைவனின் மென்மையைப் புரிந்துகொள்வது வாழ்வில் இன்றியமையாதது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் கூறினார்.

திருத்தூதர் பவுல் கொண்ட அன்பு

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலியாற்றிய திருத்தந்தை, உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில், "கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? ... எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?" என்று திருத்தூதர் பவுல் கூறும் சொற்களை மையமாகக் கொண்டு, தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தமஸ்கு செல்லும் வழியில், தன்னைத் தடுத்தாட்கொண்ட கிறிஸ்துவின் மீது, திருத்தூதர் பவுல் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு, திரைப்படங்களில் காட்டப்படும் சுகமான அன்பைப்போன்று இல்லாமல், பவுலை பல்வேறு துன்பங்களில் ஆழ்த்தும் அன்பாக அமைந்தது என்று, திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தாய்க்குரிய பொறுமையான அன்பு

எருசலேம் நகரை நோக்கி வேதனையுடன் பேசும் இயேசுவை, லூக்கா நற்செய்தியில் சந்திக்கிறோம் என்று, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகரின் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு, அவரை கண்ணீர்விட வைத்தது என்பதை, சிறப்பாகக் குறிப்பிட்டார்.

தாய்ப் பறவையான கோழி, தன் குஞ்சுகளை அரவணைப்பதை நினைவுறுத்தும் இயேசு, ஒரு தாய்க்குரிய பொறுமையான அன்பை, நம் ஒவ்வொருவர் மீதும் இறைவன் காட்டுகிறார் என்பதை உணர்த்துகிறார் என்று கூறினார்.

இறைவனோடு நாம் கொள்ளும் அன்பு, நம்மை, துன்பத்திலும், கண்ணீரிலும் ஆழ்த்தினாலும், திருத்தூதர் பவுல் அடியாரைப் போல நாமும், "கடவுளின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை" என்ற உறுதியைப் பெறுவதற்கு செபிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

31 October 2019, 13:59
அனைத்தையும் படிக்கவும் >