தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 170919 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 170919  (Vatican Media)

திருத்தந்தை பிரான்சிஸ் - கடவுளின் மொழி பரிவன்பு

திருத்தந்தை பிரான்சிஸ் - "ஆண்டவர் பரிவுகொண்டார்" (லூக்.7:13). நம் கடவுள் பரிவன்பின் கடவுள். பரிவன்பு என்பது, கடவுளின் பலவீனம், அதேநேரம், அதுவே அவரின் பலம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

பரிவன்பு, இதயத்தின் கண்ணாடிவில்லை (lens) போன்றது, இது, எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளச் செய்கின்றது மற்றும், இது, கடவுளின் மொழி போன்றதும் ஆகும் என்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 17, இச்செவ்வாய் காலையில் மறையுரையாற்றினார்.

நயீன் என்னும் ஊரில், இறந்த தனது ஒரே மகனைத் தூக்கிச் செல்கையில், அழுதுகொண்டே சென்ற கைம்பெண் மீது பரிவுகொண்டு (லூக்.7,11-17), இயேசு அம்மகனை உயிர்பெற்றெழச்செய்த நிகழ்வை விளக்கும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல நேரங்களில் மனிதரின் மொழி புறக்கணிப்பாக இருக்கின்றவேளை, பரிவன்பு என்பது, கடவுளின் மொழியாகவும் உள்ளது என்றும் கூறினார்.

உங்கள் இதயங்களை பரிவன்புக்குத் திறந்து வையுங்கள், மற்றும், அவற்றைப் புறக்கணிப்பால் மூடிவிடாதீர்கள் என்று, திருப்பலியில் பங்கெடுத்த விசுவாசிகளிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையில், பரிவன்பு நம்மை உண்மையான நீதியின் பாதையில் வழிநடத்துகின்றது, அதன் வழியாக, நாம் நமக்குள்ளே முடங்கிவிடாமல் இருப்பதிலிருந்து காப்பாற்றுகின்றது என்று கூறினார்.

இயேசுவிடம் பரிவு இருந்தது என்று சொல்லாமல், ஆண்டவர், அந்த கைம்பெண் தாய் மீது பரிவு கொண்டார் என்று, நற்செய்தியாளர் கூறுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, இயேசு, பரிவு என்ற கண்ணாடிவில்லை வழியாகப் பார்த்ததால், அந்தப் பெண்ணின் எதார்த்த நிலையைப் பார்த்தார் மற்றும், புரிந்துகொண்டார் என்று கூறினார்.

எனவே, பரிவு, எதார்த்தத்தைப் பார்க்கச் செய்கின்றது, இது, இதயத்தின் கண்ணாடிவில்லை போன்றது என்ற திருத்தந்தை, கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடவுள் பரிவுள்ளவராய் இருந்தார் என்பதை விவிலியத்தில் காண்கிறோம் எனவும், புதிய ஏற்பாட்டில் அப்பம் பலுகிய புதுமையிலும், இயேசு பசியாய்க் களைத்திருந்த மக்கள் மீது பரிவு கொண்டார் எனவும் கூறினார்.

பரிவு, நீதியின் பாதையில் நம்மை நடத்திச் செல்கிறது, பிறருக்குச் சரியானதை எப்போதும் ஆற்ற வேண்டும், அதுவே, தன்னலம், புறக்கணிப்பு, தனக்குள்ளே முடங்கிவிடுதல் போன்றவற்றினின்று நம்மை எப்போதும் காப்பாற்றும் எனவும் திருத்தந்தை கூறினார்.

டுவிட்டர் செய்தி

மேலும், இச்செவ்வாயன்று, இத்திருப்பலி மறையுரையை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#SantaMarta) குடன், தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "ஆண்டவர் பரிவுகொண்டார்" (லூக்.7:13). நம் கடவுள் பரிவன்பின் கடவுள். பரிவன்பு என்பது, கடவுளின் பலவீனம், அதேநேரம் அதுவே அவரின் பலம் என்ற வார்த்தைகளைப் பதிவுசெய்துள்ளார்.

17 September 2019, 15:56
அனைத்தையும் படிக்கவும் >