தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இதுவரை நாம் அடைந்த நல்லவற்றைக் குறித்து சிந்தியுங்கள்

குறை கூறுதலும், மனநிறைவற்ற நிலைகளும் ஏற்படும்போது, அதுவே தீயோன் தன் விதைகளை விதைக்க உகந்த நிலமாக மாறிவிடும் – திருத்தந்தையின் மறையுரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -  வத்திக்கான் செய்திகள்

குறைகூறுதலுக்கும், மனநிறைவற்ற நிலைகளுக்கும் இட்டுச் செல்லும் தோல்விகளை நாம் தேர்ந்தெடுக்கும்போது நம்மிக்கை நம்மைவிட்டு அகன்று விடுகிறது என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க்கிழமை காலையில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் பயணத்தில் இஸ்ராயேல் மக்கள் சோர்வடைந்தபோது, நம்பிக்கையிழந்து மோசேக்கு எதிராக முணுமுணுத்தது குறித்த இந்நாளின் முதல் வாசகத்தையொட்டி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அடிமைத்தனத்திலிருந்து வெளியேறியபோது இருந்த ஆர்வமும், நம்பிக்கையும், கடற்கரையிலும், பின்னர், பாலநிலத்திலும், அவர்கள் நடந்தபோது, சிறிது சிறிதாக குறையத் துவங்கியது என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, குறை கூறுதலும், மனநிறைவற்ற நிலைகளும் ஏற்படும்போது, அதுவே, தீயோன் தன் விதைகளை விதைக்க உகந்த நிலமாக மாறிவிடும் என்று கூறினார்.

நாம் சோர்வடையும்போது, அந்நேரத்தின் தீய நிலைகளை மட்டும் உற்று நோக்கி, இதுவரை நாம் அடைந்த நல்லவற்றைக் குறித்து சிந்திக்கத் தவறிவிடுகிறோம் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலகப் பயணத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் சோர்வடையும்போது, நம்பிக்கையைக் கண்டும், ஆறுதலைக் கண்டும், இறைவனின் அரவணைப்பைக் கண்டும் அச்சம் கொள்கிறோம், இத்தகைய ஒரு நோயிலிருந்து நமக்கு விடுதலையளிப்பவர் இறைவனே என மேலும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

09 April 2019, 16:50
அனைத்தையும் படிக்கவும் >