தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 080319 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 080319  (ANSA)

தவக்காலம், எளிமையாக, உண்மையாக வாழ்வதற்கு வாய்ப்பு

வெளித்தோற்றத்தில் கவனம் செலுத்துகின்றவர்கள், தங்களைப் பாவிகள் என ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்த தவக்காலத்தில், நோன்பு, செபம், தர்மம் செய்தல் ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் வழியாக, வாழ்வின் எளிமையான தோற்றத்தைக் கண்டுபிடிப்பதற்கு, முயற்சி எடுக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை திருப்பலியில் கேட்டுக்கொண்டார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், மார்ச் 08, இவ்வெள்ளி காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் வெளிவேடத்தை கலைத்து, உண்மையாக வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இத்திருப்பலியின் முதல் வாசகத்தை (எச.58,1-9a) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, எதார்த்தமான வாழ்வுக்கும், வெளிவேட வாழ்வுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை விளக்கி, எல்லா வகையான வெளிவேடங்களுக்கு எதிரான தன் கண்டனத்தைத் தெரிவித்தார்.

தவம், தர்மம், செபம்

கிறிஸ்தவர்கள், தவச் செயல்களைச் செய்கையில், மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்றும், தேவையில் இருப்போருக்கு உதவுகையில், தம்பட்டம் அடிக்காமல், தாராள மனதுடன் ஆற்ற வேண்டும் என்றும், செபிக்கையில், மற்றவரின் பாராட்டைத் தேடாமல், இறைத்தந்தையிடம் உள்ளார்ந்த முறையில் ஒன்றித்துச் செபிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.    

இயேசுவின் காலத்தில், இத்தகைய வெளிவேட நடத்தை, பரிசேயர் மற்றும் சதுசேயர்களிடம் தெளிவாகத் தெரிந்தது என்றும், இந்தக் கழகத்தில் உறுப்பினராக உள்ளேன் அல்லது, ஞாயிறு திருப்பலிக்குத் தவறாமல் செல்கிறேன் போன்ற காரணங்களால், இன்றும்கூட கத்தோலிக்கர், தங்களை நீதிமான்களாகவும்,  ஏனையோரைவிட சிறந்தவர்கள் எனக் கருதுகின்றனர் என்றும், திருத்தந்தை கூறினார்.    

வெளித்தோற்றத்தைத் தேடுகின்றவர்கள், தங்களைப் பாவிகள் என ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்றுரைத்த திருத்தந்தை, ஒவ்வொரு நாள் வாழ்வின் வெளிவேடத் தன்மை குறித்தும் மறையுரையாற்றினார்.

வாழ்வின் வெளிவேடம்

ஒவ்வொருவரும் வெளிவேடம் போடுவதற்கு சோதிக்கப்படுகிறோம் எனவும், உண்மையாக வாழாதவர், இளையோரிடம் நல்தாக்கம் ஏற்படுத்துவதில்லை எனவும் உரைத்த திருத்தந்தை, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கிய இக்காலம், இந்த முரண்பாடுகளைக் கண்டறிவதற்கு ஏற்றது எனவும் கூறினார்.

எளிமையாக வாழ்வதன் அழகையும், எதார்த்தமான வாழ்வு, வெளித்தோற்றத்தோடு ஒன்றிணைந்து செல்ல வேண்டுமென்பதையும், இந்த தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டுமென்று அழைப்பு விடுத்த திருத்தந்தை, நம்மால் இயன்ற அளவில், தாழ்மையுடன் முன்னேறிச் செல்வதற்கு ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் என்று கூறினார்.

08 March 2019, 10:09
அனைத்தையும் படிக்கவும் >