தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை 

ஆறுதலற்று தவிக்கும் நேரங்களில் ஆண்டவரில் நிலைத்திருக்க..

முழுவதும் ஆறுதலற்ற நிலையில், வாழ்வின் அழகான தருணங்களையும், ஆண்டவரோடு சந்திப்பு நடத்திய மகிழ்வான நாள்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

முழுவதும் கைவிடப்பட்டு, ஆறுதலற்று தவிக்கும் நிலையில், மன உறுதியுடன் விசுவாசத்தைக் காத்து ஆண்டவருக்குப் பணியாற்றுவதில் நிலைத்து இருக்குமாறும், சோதனை வேளைகளில் ஆண்டவரை நோக்குமாறும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை திருப்பலியில் கேட்டுக்கொண்டார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலையில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இத்திருப்பலியின் முதல் வாசகமான, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து (எபி.10:32-39), மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.

வாழ்வில் எல்லாமே அர்த்தமற்றதாய்த் தெரிகின்ற இருளான மற்றும் முற்றிலும் ஆறுதலற்ற நேரங்களை, நாம் அனைவருமே கடந்துசெல்கிறோம், ஆனால், அந்த நேரங்களில்தான் கிறிஸ்தவர்கள், ஆண்டவருக்கு அளித்த வாக்குறுதியைக் காக்க வேண்டும் என்று, திருத்தந்தை கூறினார்.

வாழ்வுப் பயணத்தில் மனஉறுதியுடன் இருப்பது குறித்து விளக்கிய திருத்தந்தை, முழுவதும் ஆறுதலற்ற நிலையில், ஒருவர், தன் வாழ்வின் அழகான தருணங்களையும்,  ஆண்டவரோடு சந்திப்பு நடத்திய மகிழ்வான நாள்களை, அவரின் அன்பை அனுபவித்த நேரங்களை, நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

அடுத்து, அந்த ஆறுதலற்ற நேரங்களில் நம்பிக்கையை கைவிடக் கூடாது என்றுரைத்த திருத்தந்தை, நமக்கு வாக்குறுதியளிக்கப்பட்டவைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், ஆறுதலற்று கைவிடப்பட்ட நேரங்களில் முதலில் ஆண்டவரால் உறுதியளிக்கப்பட்ட ஆறுதலைத் தேட வேண்டும் என்றும் கூறினார்.

மறையுரையின் இறுதியில், 2018ம் ஆண்டு செப்டம்பரில் லித்துவேனியா நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் பற்றியும் நினைவுக்குக் கொணர்ந்த திருத்தந்தை, அந்நாட்டின், ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும், மறைசாட்சிகளின் துணிச்சலான விசுவாச வாழ்வு தன்னை மிகவும் தொட்டது என்றார்.

இன்றும் எத்தனையோ ஆண்களும் பெண்களும் விசுவாசத்திற்காகத் துன்புறுகின்றனர், ஆனால், துன்புறும் வேளைகளில் இயேசுவோடு நடத்திய முதல் சந்திப்பை நினைவில் இருத்தி, நம்பிக்கையோடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறையுரையில் கூறினார்.

மேலும், நம் வாழ்வுப் பயணத்தில் மனஉறுதியுடன் முன்னோக்கி நடப்பதற்கு, நினைவு மற்றும் நம்பிக்கை எனும் அருளை ஆண்டவர் நமக்கு வழங்குவாராக என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று வெளியாகியிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2019, 14:44
அனைத்தையும் படிக்கவும் >