தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருப்பலி -031218 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி -031218  (Vatican Media)

இறை மகனுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள...

கிறிஸ்மஸ் என்பது, 2000 ஆண்டுகளுக்கு முன் உலகிற்கு வந்த கிறிஸ்துவின் நினைவைக் கொண்டாடுவது மட்டுமல்ல, மாறாக, ஒவ்வொரு நாளும் நம்மைச் சந்திக்கவரும் கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொள்வதிலும் அடங்கியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெத்லகேமில் இயேசு பிறந்ததை முழுவதுமாகப் புரிந்துகொள்வதற்கும், இறை மகனுடன் ஒரு தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வதற்கும், திருவருகைக் காலம் நல்லதொரு வாய்ப்பு என்ற கருத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலையில் தன் மறையுரையை வழங்கினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, நூற்றுவர் தலைவரின் மகனை இயேசு குணமாக்கிய நிகழ்வைக் கூறும் இன்றைய நற்செய்தியை (மத்தேயு 8:5-11) மையப்படுத்தித் தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

திருவருகைக் காலம், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று பரிமாணங்களைக் கொண்டது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த காலம் என்ற பரிமாணத்தின் வழியே நம் நினைவுகளை நாம் புனிதப்படுத்துகிறோம் என்று குறிப்பிட்டார்.

கிறிஸ்மஸ் திருவிழா உலகு சார்ந்த ஒரு திருவிழாவாக, வெறும் வெளிப்புறமான செயல்பாடுகளிலேயே ஆழ்ந்துவிடும் ஆபத்து உள்ளது என்பதை, தன் மறையுரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, இதற்கு ஒரு மாற்றாக, நாம் திருவருகைக் காலம் முழுவதும், இறைவார்த்தையை, ஒவ்வொரு நாளும் தியானிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்மஸ் என்பது, 2000 ஆண்டுகளுக்கு முன் உலகிற்கு வந்த கிறிஸ்துவின் நினைவைக் கொண்டாடுவது மட்டுமல்ல, மாறாக, ஒவ்வொரு நாளும் நம்மைச் சந்திக்கவரும் கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொள்வதிலும் அடங்கியுள்ளது என்று தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

03 December 2018, 10:56
அனைத்தையும் படிக்கவும் >