தேடுதல்

சாந்தா மார்த்தா திருப்பலி 231018 சாந்தா மார்த்தா திருப்பலி 231018  (Vatican Media)

இயேசுவைச் சந்திக்கத் தேவையான 'எதிர்நோக்கு'

குழந்தையை கருவில் சுமக்கும் தாய், அதன் வருகைக்காக எவ்விதம் ஆவலோடு காத்திருப்பாரோ, அத்தகையது, இறைவனைச் சந்திக்க நாம் காத்திருக்கும் ஆவல்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வில் 'எதிர்நோக்கு' என்பது, திட்டவட்டமான ஒன்று என்றும், அது, இயேசுவுடன் நாம் கொள்ளும் நேர்முக சந்திப்பிற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றும், இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும், சாந்தா மார்த்தா இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வில் நாம் இறைவனோடு மேற்கொள்ளும் சின்ன சின்ன சந்திப்புக்களில் கூட, எவ்வாறு பெருமகிழ்ச்சியை அடையமுடியும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

குழந்தையை கருவில் சுமந்து கொண்டிருக்கும் தாய், அதன் வருகைக்காகக் காத்திருப்பதைப் போன்றது, இறைவனைச் சந்திக்க நாம் காத்திருப்பது என்ற உருவகத்தைப் பயன்படுத்திய திருத்தந்தை, குடியுரிமை, மற்றும், மரபுரிமை என்ற இரு சொற்களை மையமாக வைத்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

உரிமையுடைய குடிமக்களாக நம்மைப் படைத்த இறைவன், இயேசுவின் வழியாக பகை உணர்வுகளை ஒழித்து, ஒப்புரவை உருவாக்கி, புனிதர்களுடன் நம்மை உடன் குடிமக்களாக மாற்றியுள்ளார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன் குடிமக்களாக நாம் எதை நோக்கி நடைபோடுகிறோமோ, அங்கு கிடைக்க உள்ளதே நம் மரபுரிமைச் சொத்து என்றார்.

நாம் நம் வாழ்க்கைப்பாதையில் ஒவ்வொரு நாளும் தேடி, இறுதியில் கண்டடைவதே அந்த எதிர்நோக்கு எனும் மரபுரிமைச் சொத்து எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசம், எதிர்நோக்கு, மற்றும், பிறரன்பு என்ற மூன்றும் நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகள் என மேலும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2018, 12:20
அனைத்தையும் படிக்கவும் >