தேடுதல்

சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி   (� Vatican Media)

தூய ஆவியா? தீய ஆவியா? சுய ஆய்வு தேவை

இருவேறு நேரெதிர் எண்ணங்களைச் சந்திக்கும் நம் மனம், ஒரு போர்க்களமாகவே இருக்கிறது. இதில் வெற்றியடைந்து தூய ஆவியாரின் துணையோடு இயேசுவை நோக்கி வழி நடப்போம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தீய ஆவி, தூய ஆவி என இரு வேறு ஆவிகள் சந்திக்கும் நம் மனதை அவ்வப்போது ஆய்வுசெய்து, தூய ஆவிக்குரிய இடத்தை உருவாக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவி, தீய ஆவி எனும் இரண்டு ஆவிகள் நேருக்கு நேராக சந்திக்கும் நம் மனங்கள் போர்க்களமாக உள்ளன என்றும், இயேசுவை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லும் தூய ஆவிக்குரிய இடத்தை நம் மனங்களில் உறுதி செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தூய ஆவியோ நம்மை நல்செயல்கள் நோக்கியும், பிறரன்பு மற்றும் உடன்பிறப்பு உணர்வு நோக்கியும் வழிநடத்திச் செல்லும் அதேவேளையில், இவ்வுலகம் சார்ந்த ஆவியோ, தற்பெருமை, வீண்பெருமை, புறங்கூறுதல் போன்றவைகளை நோக்கி அழைத்துச் செல்கிறது எனவும், தன் மறையுரையில் எடுத்தியம்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் சக்தியை மட்டுமே நம்பியிருப்பவர், தூய ஆவியின் செயல்கள் குறித்து புரிந்து கொள்வதில்லை என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் இரு விதமான எண்ணப்போக்குகள் உள்ளன, ஒன்று, இறைவனின் ஆவி நோக்கி இட்டுச்செல்லும் உணர்வும் செயல்பாடும், ஏனையது, இவ்வுலகுச் சார்ந்த ஆவி குறித்தது என்றார்.

இந்த ஆவிகளின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு, நம் மனதை ஆய்வு செய்வதன் வழியாக, நம் சோதனைகளை இனம் கண்டு, இரு ஆவிகளுக்கும் இடையேயான மனப்போரில் நாம் இயேசுவைப்போல் வெற்றியடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.

ஒவ்வொரு நாள் மாலையிலும் நம் இதயத்தில் சுய ஆய்வு நடத்தி, நாம் எந்த ஆவியின் வழியில் சென்றுகொண்டிருக்கிறோம் எனபதை, அறியவேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2018, 15:55
அனைத்தையும் படிக்கவும் >