தேடுதல்

ஆண்டவரின் குருக்களை படுகொலை செய்யும் தோயேகு ஆண்டவரின் குருக்களை படுகொலை செய்யும் தோயேகு  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 52-1, தன்வினை தன்னைச் சுடும்!

கெடுவான் கேடுநினைப்பான் என்பதை உணர்ந்து, இறையச்சம் கொண்டவர்களாக பிறருக்குத் தீமை செய்வதைத் தவிர்ப்போம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 52-1, தன்வினை தன்னைச்சுடும்

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘நொறுங்கிய உள்ளம் பெறுவோம்!’ என்ற தலைப்பில் 51-வது திருப்பப்பாடலில் 16 முதல் 19 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இவ்வாரம் 52-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'இறைவனின் தீர்ப்பும் திருவருளும்' என்ற தலைப்பில் அமைந்த இத்திருப்பாடல் மொத்தம் ஒன்பது இறைவசனங்களைக் கொண்டுள்ளது.

இத்திருப்பாடலின் துணைத் தலைப்பாக, 'பாடகர் தலைவர்க்கு: அகிமெலக்கின் வீட்டுக்குத் தாவீது போனாரென்று ஏதோமியன் தோயேகு சவுலுக்கு அறிவித்த போது தாவீது பாடிய அறப்பாடல்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இத்திருப்பாடல் எந்தக் காரணத்திற்காக எழுதப்பட்டது என்பதை இந்த ஒற்றைவரிச் செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. ஆக, இத்திருப்பாடலின் இறைவசனங்களை நாம் தியானிப்பதற்கு முன்னதாக, இது எழுதப்பட்டதன் பின்னணியை நாம் அறிந்துகொள்வது மிகவும் நல்லது. தாவீது கோலியாத்தை கொன்றொழித்த பிறகு அவரது புகழ் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் பரவுகிறது. இதனால் தாவீதுமீது காழ்ப்புணர்ச்சிக் கொண்ட மன்னர் சவுல் அவரக் கொல்லத் தேடுகிறார். முதல்முறை தப்பித்துக்கொள்கிறார். ஆனாலும் சவுல் தொடர்ந்து அவரைக் கொல்ல முயல்வதால் தாவீது அவர் பார்வையில் படாதிருக்கக் காட்டிற்குள் ஓடி ஒளிந்துகொள்கிறார் தாவீது ஆனாலும் மன்னர் சவுல் அங்கும் அவரை விடாது துரத்திச் செல்கின்றார். இதன்பிறகு வரும் நிகழ்வுதான் இன்றைய திருப்பாடலின் பின்னணியாக அமைகின்றது.

இந்நிலையில் தாவீது நோபில் இருந்த குரு அகிமெலக்கிடம் செல்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத அகிமெலக்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், “நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையா?”  என்று கேட்கிறார். அதற்கு தாவீது, குரு அகிமெலக்கிடம், “அரசர் எனக்கு ஒரு பணியைக் கட்டளையிட்டுள்ளார். ‘நான் உன்னை அனுப்பிய நோக்கத்தையும் உனக்கு அளித்த கட்டளையையும் ஒருவரும் அறியக்கூடாது’ என்று அரசர் கூறியுள்ளார். எனவே, ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோழர்களுக்குச் சொல்லியுள்ளேன் என்று கூறி, ஒருவழியாக அந்தச் சூழலை சமாளிகிக்கிறார். அதன்பிறகு, அவரிடம் தனக்கும் தனது நண்பர்களுக்கும் அப்பம் வாங்கிக்கொள்கிறார் தாவீது. அந்நேரத்தில் சவுல் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்ற ஏதோமியன் இவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிடுகிறான். அப்பொழுது இதனை பெரிதாகக் கண்டுகொள்ளாத தாவீது, அகிமெலக்கிடம், “இங்கு ஈட்டியோ வாளோ உம்மிடம் உள்ளதா? அரசரின் கட்டளை அவசரமானதாய் இருந்ததால் என் வாளையோ என் படைக்கலன்களையோ கையோடு கொண்டுவரவில்லை,” என்கிறார். அதற்கு குரு அகிமெலக்கு அவரிடம், “ஏலா பள்ளத்தாக்கில் நீ கொன்ற பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள், அதோ, ஏபாத்துக்குப் பின்னால் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. நீ விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு வாள் இங்கு இல்லை” என்று கூறுகிறார். உடனே தாவீது, “அதற்கு நிகரானது வேறில்லை, அதை எனக்குத் தாரும்”  என்று கேட்டு வாங்கிக்கொண்டு, அங்கிருந்து தப்பியோடி காத்தின் மன்னன்  ஆக்கிசிடம் செல்கிறார். தாவீது யார் என்பதை அம்மன்னரும் கண்டுகொள்வதால், ஒரு பைத்திக்காரரைப் போல் நடித்துக்கொண்டு அங்கிருந்தும் தப்பிச்சென்று அதுல்லாம் என்ற குகையை அடைகிறார்.

பின்னர் அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்பேக்குச் சென்று, அங்கே மோவாபு மன்னரிடம்,  “கடவுள் எனக்கு என்ன செய்யவிருக்கிறார் என்பதை நான் அறியுமட்டும் என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்க எனக்கு அனுமதி தாரும்,” என்று வேண்டுகிறார். பின்பு, அவர் அவர்களை மோவாபு மன்னன் பொறுப்பில் விட்டுச் செல்கிறார். தாவீது குகையில் இருந்த நாளெல்லாம் அவர்கள் மன்னனின் பாதுகாப்பில் தங்கியிருந்தனர். பின்பு, இறைவாக்கினர் காது தாவீதைக் கண்டு, “நீ குகையில் தங்காதே! யூதா நாட்டுக்குப் புறப்பட்டுப்போ!” என்று கூற, தாவீது புறப்பட்டு எரேத்து என்ற காட்டிற்குச் செல்கின்றார். இந்தக் காட்சிகளை எல்லாம் நாம் பார்க்கும்போது ஓர் இளைஞனாக, தாவீது எத்தனைத் துயரங்களை அனுபவித்திருக்கிறார் என்பதை நம்மால் அறிய முடிகிறது. அதுமட்டுமன்றி, அவரின் இந்தச் சூழல் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. நாம் இன்னும் கிளைமாக்ஸ் கட்சிக்கு வரவில்லை. இப்போதுதான் அதனை நெருங்குகின்றோம்.

அப்போது தாவீதும் அவருடன் இருந்த வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டதை  கேள்வியுற்ற மன்னர் சவுல், கிபயாவிலிருந்த மலைமீது தமாரிஸ்கு மரத்தின் கீழ் கையில் தன் ஈட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அவருடைய எல்லா அலுவலர்களும் அவரைச் சூழ்ந்து நிற்கின்றனர். சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, “பென்யமின் புதல்வர்களே! கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் ஒவாவொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ? அவனால் உங்கள் அனைவரையும் ஆயிரவர் தலைவர்களாகவும் நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியுமா? பின், எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்தபோது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை; என்மேல் மனமிரங்கி அதை எனக்குத் தெரிவிக்க உங்களில் ஒருவனும் முன்வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கெதிராகத் தூண்டிவிட்டான்” என்று கர்ச்சிக்கின்றார். இநேரத்தில்தான் சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, “நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்; அகிமெலக்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுளத்தைக் கேட்டறிந்தார். மேலும், அவர் அவனுக்கு வழியுணவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார்” என்ற உண்மையை மன்னர் சவுலிடம் போட்டுக்கொடுக்கின்றான்.

அப்போது வெகுண்டெழுந்து கோபத்தின் உச்சிக்கே செல்லும் மன்னர் சவுல், “அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும்  உடனே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூற, அவர்கள் அனைவரும் கொண்டுவரப்டுகின்றனர். இதன்பிறகு நடப்பதுதான் சோகத்தின் உச்சம்! உடனே அஙகே விசாரணை நடைபெறுகிறது. அப்போது எதையும் மறைக்காமல் நடந்தது எல்லாவற்றையும் அப்படியே ஒப்புக்கொள்கிறார் குரு அகிமெலக். மன்னர் சவுல் அவரிடம் “அகிமெலக்கு, நீயும் உம் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும்” என்று கூறியவாறு, தம்மைச் சூழ்ந்து நின்ற காவலர்களிடம், “நீங்கள் சென்று ஆண்டவரின் குருக்களை கொன்று விடுங்கள்; ஏனெனில், அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் எனக்குத் தெரிவிக்கவில்லை”  என்று கட்டளைப் பிறப்பிக்கிறார். ஆனால், அரசனின் பணியாளர் ஆண்டவரின் குருக்களை கொல்ல முன்வராத காரணத்தினால், மன்னர் சவுல் தோயேகிடம், “நீ சென்று தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து”, என்று கட்டளையிடுகிறார். உடனே ஏதோமியன் தோயேகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்துகிறான். அன்று மட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரையும் அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றையும் வாளுக்கு இரையாக்குக்கிறான். அந்நேரத்தில் அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடிச் சென்று தாவீதிடம் நடந்த கொடூரத்தை விவரிக்கின்றார். அப்போது தாவீது அபியத்தாரிடம், நான் குரு அகிமெலக்கை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது, ஏதோமியன் தோயேகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிந்திருந்தேன்; உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்! என்று கூறி மிகவும் மனம் வருந்துகின்றார் தாவீதி (காண்க. 1 சாமு 22,23 அதிகாரங்கள்). இந்தத் துயரம் மற்றும் சோகத்தின் பின்னணியில்தான் தாவீது இந்தத் திருப்பாடலை எழுதுகிறார். அதுமட்டுமன்றி, இத்திருப்பாடல் முழுவதும் தோயேகுவைக் குறித்ததுதான் ஆண்டவரிடம் முறையிடுகின்றார். காரணம், தாவீதைப் பொறுத்தமட்டில், இது அவருக்குத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு துயரம்!

இங்கே நாம் இன்னொரு விடயத்தையும் நம் மனதில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது என்னவென்றால் மன்னர் சவுல் இளைஞன் தாவீதுமீது கொண்டிருந்தது வெறும் காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும், கோபமும் மட்டுமல்ல, மாறாக, தீராத கொலைவெறி என்பதுதான். மன்னர் சவுல் தாவீதுமீது எந்தளவுக்குக் கொலைவெறி கொண்டிருந்தால், கடவுளுக்கு அர்ப்பணமான இத்தனை குருக்களைக் கொன்றிருக்க வேண்டும். மேலும் சவுல் தனது அறியணையின் மீது எந்தளவுக்குப் பற்றுக்கொண்டிருக்கிறார் என்பதையும் இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. இந்த அறியணையும் அதிகாரமும் கடவுள் தனக்கு அளித்தது என்பதைக் கூட எண்ணமுடியாத அளவிற்கு அவை அவரது கண்களை மறைந்துள்ளது. இதையெல்லாம் மனதில்கொண்டு நாம் சிந்திக்கும்போது, சவுல் பெலிஸ்தியருக்கு எதிரான போரில் படுதோல்வியடைந்து தன்னைத்தானே மாய்த்துக்கொண்டது தாவீதுமீது கொண்ட காழ்ப்புணர்வு மட்டும் காரணமல்ல, மாறாக, கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாசற்ற குருக்களைக் கொன்றொழித்ததும்தான் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.

அன்று மன்னர் சவுல் செய்ததைப்போலத்தானே இன்றைய நாட்டு அரசத் தலைவர்களும் செய்கிறார்கள். இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு எதிரானவர்களைக் கொன்றொழிக்கிறார் என்ற செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. அதற்கொரு எடுத்துக்காட்டாக ஊடங்கள் முன்வைப்பது அண்மையில் சிறைச்சாலையில் இறந்த அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny). அவ்வாறே, மிகப்பெரும் மக்களாட்சி நாடான நமது இந்தியாவில் என்ன நிகழ்ந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். தன்னை எதிர்த்து யாரும் கேள்விக்கேட்கக் கூடாது என்று நினைக்கின்றார் பிரதமர் மோடி. அப்படி எதிர்த்துக் கேட்பவர்கள் எவ்வாறெல்லாம், எந்தெந்த வழிகளிலெல்லாம் அடக்கப்படுகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அதற்கொரு எடுத்துக்காட்டுதான் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது! ஆக, இத்தகைய சர்வாதிகாரமும் எதேச்சதிகாரமும் பிற்காலத்தில் அதனை கையாளுகின்றவர்களுக்கே பெரும்கேடாய் முடியும் என்பதை மன்னர் சவுலுக்கு நிகழ்ந்த கொடும் மரணம் எடுத்துக்காட்டுகின்றது. ஆகவே, ‘கெடுவான் கேடுநினைப்பான்’ என்பதைப்போல, நாம் பிறருக்குச் செய்யும் தீமைகள் பிற்காலத்தில் நமக்கே பெரும்கேடாய் முடியும் என்பதை உணர்ந்து, இறையச்சம் கொண்டவர்களாக, பிறருக்குத் தீமை செய்வதைத் தவிர்ப்போம். இவ்வருளுக்காக இறைவனிடம் இறையருள்வேண்டி மன்றாடுவோம். அடுத்த வார நமது விவிலியத் தேடலில் இத்திருப்பாடலின் இறைவார்த்தைகள் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடர்வோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2024, 12:08