தேடுதல்

சிலுவை சிலுவை 

தடம் தந்த தகைமை - ஏன் என்னைக் கைவிட்டீர்?

தந்தையாம் கடவுளை மிக ஆழமாக நம்பியவர் இயேசு. அவரில் ஆழ்ந்த அன்புகொண்டு வாழ்ந்தவர். எச்செயலையும் தந்தையின் விருப்பப்படி செய்து நிறைவு கண்டவர்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

“என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?” என உரக்கக் கத்துகிறார் இயேசு.

தம்மை மண்ணில் அனுப்பி, பணிவாழ்விற்கெனத் தேர்ந்து, பயிற்றுவித்து உடனிருந்து, வழிகாட்டி, ஈடுபடுத்தி, சோர்வில் பாராட்டிய தந்தையாம் கடவுளை மிக ஆழமாக நம்பியவர் இயேசு. அவரில் ஆழ்ந்த அன்புகொண்டு வாழ்ந்தவர். எச்செயலையும் தந்தையின் விருப்பப்படி செய்து நிறைவு கண்டவர். தந்தை தம்முடன் இருப்பதால் செயற்கரிய பணிகளைத் துணிந்து செய்தவர். தந்தை தந்த பணிகளை நிறைவேற்றுவதையே தம் உணவாகக் கொண்டவர். இப்போது நிந்தைக்குள்ளாக்கப்பட்டு,

நிர்வாணமாக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, பட்ட மரத்துண்டுகளின் மேல் ஆணிகளால் அறையப்பட்டு, உயிர் ஊசலாடும் நிலையில்... இயேசுவினால் எழுப்பப்பட்ட இக்கேள்வி இன்னும் சில கேள்விகளை நமக்குள் எழுப்புகின்றன.

இயேசு அனுபவித்த மிகக் கொடூரமான வேதனையின் உச்சத்தில் தந்தை அவரைக் கைவிட்டு விட்டாரா? இயேசுவின் வாழ்வும் பணிகளும் தந்தைக்குப் பிடிக்காமல் போனதா? இப்படி ஒரு சாவு தேவையில்லை எனத் தந்தையும் நினைத்துவிட்டாரா?

எதுவுமே இல்லை. ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு பணியிலும் தந்தையை வேண்டித் தொடரும் பண்புடையவர் இயேசு. தம் சாவிலும் திருப்பாடல் 22-ஐ எடுத்துச் சொல்லி மன்றாடினார். இது ஓர் ஓலக் குரலோ, அவலக் குரலோ, அலறலோ, புலம்பலோ அல்ல. ஆழ்ந்த நம்பிக்கையின் அகப் பிரகடனம். சிலுவையில் தொங்கிய இயேசுவின் வேண்டல் உலகில் அநியாயமாகத் துன்புறுவோரின் பிரதிபலிப்பு.

இறைவா! ஒட்டுமொத்த உலகும் என்னைக் கைவிட்டாலும் நீர் கைவிடமாட்டீர் என்ற நம்பிக்கையில் உம்மிடமே என்னைக் கையளிக்கும் மனம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2024, 13:46