தேடுதல்

இயேசுவே உண்மையான திராட்சைச் செடி இயேசுவே உண்மையான திராட்சைச் செடி  

பாஸ்கா காலம் 5-ஆம் ஞாயிறு : இயேசுவில் இணைந்து கனி தருவோம்!

இயேசுவின் கட்டளைகளைக் கருத்துடன் கடைபிடித்து அவருடன் இணைந்த நிலையில் மிகுந்த கனிதரும் செயல்பாடுள்ள சீடர்களாக வாழ்வோம்.
பாஸ்கா காலம் 5-ஆம் ஞாயிறு : இயேசுவில் இணைந்து கனி தருவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.   திப 9:26-31     II. 1 யோவா 3:18-24     III.  யோவா  15:1-8)

ஒரு சிவப்பு நிற பட்டமும் வெள்ளை நிற பட்டமும் வானத்தில் பறந்துகொண்டிருந்தன. அப்போது ஆனந்தத்தில் குதூகளித்தவாறு, "எவ்வளவு உயரத்தில் நாம் பறந்துகொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் நான்தான், என் ஆளுமைதான், கண்கவரும் என் நிறம்தான்" என்று கூறி சிவப்பு நிற பட்டம் பெருமைபட்டுக்கொண்டதாம். அப்போது, “இதற்குக்  காரணம் நீ அல்ல, கீழே நின்றுகொண்டு நம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றானே அந்த மனிதன்தான். அவன் கையில் வைத்திருக்கும் நூல் வழியாக நம்மைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றான். நாம் அவனோடு இணைந்திருக்கும் வரையில்தான் நமக்குப் பாதுகாப்பு, இந்த மகிழ்ச்சி பெருமையெல்லாம். அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து நாம் கொஞ்சம் பிசகினாலும் அவ்வளவுதான் அழிந்துபோவோம். நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. இதை நினைவில் கொள்" என்று அந்த வெள்ளைநிற பட்டம்  அமைதியாகக் கூறியதாம். ஆனாலும், "எனக்கும் அந்த மனிதனுக்கும் துளிகூட சம்மந்தமே இல்லை என்று கூறிக்கொண்டே ஆணவத்தால் ஆட்டம்போட்ட அந்தச் சிவப்பு நிற பட்டம் காற்றால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டு அறுபட்டு கீழே விழுந்து முற்களில் மாட்டி அடையாளம் தெரியாமல் கிழிந்து அழிந்து போனதாம்.

இன்று நாம் பாஸ்கா காலத்தின் 5-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இயேசுவுடன் இணைந்த நிலையில் நாம் கனிதரவேண்டுமென நமக்கு அழைப்பு விடுகின்றன. இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் இந்தத் திராட்சைச்செடி, கொடி, பழங்கள் எல்லாமே முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, அவர்தம் சமூக விழாக்களில் இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகம் போற்றப்படுகிறது. கானாவில் நிகழ்ந்த திருமண விழாவில் என்ன நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம் (காண்க யோவா 2:1-12). இயேசு கூறும் இந்தத் திராட்சைச்செடி உவமை யோவான் நற்செய்தியில் மட்டுமே எடுத்துக்காட்டப்படுகிறது. நமது தமிழகச் சூழலிலும் இந்த உவமையின் பொருளை நன்கு அறிந்துகொள்ள முடியும். காரணம், நம்மில் பலர் இந்தச் திராட்சைச்செடி விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். பொதுவாக, திராட்சைச் செடி மிகவும் விரைவாக வளரக்கூடியது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு அதனைக் காய்க்க விடமாட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் அது காய்த்துவிடாதபடி அதன் கொடிகளைத் தறித்து விடுவர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், திராட்சைச் செடியில் இரண்டு வகையான கொடிகள் தோன்றும். அதில் ஒருவகை நன்றாகக் காய்க்கக் கூடியவை. மற்றொருவகை, காய்க்காதவை. ஆகவேதான், தோட்டக்காரர்கள் இந்தக் காய்க்காத அதாவது, பலன்தராத கொடிகளைத் தரித்துவிட்டுக்கொண்டே இருப்பர். அதுமட்டுமன்றி, இவைகளை வளரவிட்டோமென்றால், மொத்த திராட்சைச் செடியும் காய்க்காமல்போய்விடும், மேலும் நாம் தரும் உரங்களையெல்லாம் இந்தக் காய்க்காத கொடிகளே எடுத்துக்கொண்டு விடும். இயேசு இதனையெல்லாம் நன்கு அறிந்திருப்படியால்தான் இந்த உவமையை எளிய வடிவில் மக்களுக்கு எடுத்துக்கூறி, இறையாட்சியில் மிகுந்த கனிதரும் சீடர்களாக வாழ்வதற்கு அவர்களுக்கு அழைப்புவிடுகின்றார்.

கனிதரும் திராட்சைச் செடிகள்

முதலில், பழைய ஏற்பாட்டின் பின்னணியில் இதனைப் புரிந்துகொள்வோம். "அந்நாளில் ஒரு கனிமிகு திராட்சைத் தோட்டம் இருக்கும்; அதைப்பற்றிப் பாடுங்கள். ஆண்டவராகிய நானே அதன் பாதுகாவலர்; இடையறாது அதற்கு நான் நீர் பாய்ச்சுகின்றேன்; எவரும் அதற்குத் தீங்கு விளைவிக்காதவாறு இரவும் பகலும் அதற்குக் காவலாய் இருக்கின்றேன்" (காண்க. எசா 27:2-3) என்றும், “இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக்கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது” (ஒசே 10:1) என்றும்,  “திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும்" (14:7) என்றும் வாசிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் இயேசு, “உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்" என்றும்,  "நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்" என்றும் கூறுகின்றார். இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இறைத்தந்தையே திராட்சைச் செடியை நட்டு வளர்பவரும் அதன் உரிமையாளருமாக இருக்கின்றார் என்ற உண்மை நமக்குப் புலப்படுகிறது.

கனிகொடா திராட்சைச் செடிகள்

மீண்டும் பழைய ஏற்பாட்டின் பின்னணியில் பார்க்கும்போது, இஸ்ரேல் என்னும் இந்தத் திராட்சைச் செடி அதனை நட்டு வளர்த்த அதன் உரிமையாளராகிய இறைத்தந்தையின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை. அவரை மறந்து, பிரமாணிக்கமற்ற நிலையில் அவருக்கு விருப்பமில்லாத காரியங்களை எல்லாம் செய்யத் தொடங்கினர் இஸ்ரயேல் மக்கள். அதனால் நிகழ்ந்தது என்ன? களையெடுப்பு அல்லவா? “முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன்; நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட காட்டுத் திராட்சைச் செடியாய் மாறியது எப்படி? (காண்க. எரே 2:21) என்றும், “கிளைபரப்பிக் கனிகொடுக்கும் சிறந்த ஒரு திராட்சைக் கொடியாய் விளங்கும் பொருட்டன்றோ செழிப்பு நிலத்தில் இது நடப்பட்டது!” (காண்க. எசே 17:8) என்றும் கேள்வி எழுப்பும் ஆண்டவராம் கடவுள், “திராட்சைத் தோட்டச் சுவர்கள் மீது ஏறி அழியுங்கள்; எனினும் முற்றிலும் அழிக்க வேண்டாம். அதன் படர்கொடிகளை ஒடித்தெறியுங்கள். அவை ஆண்டவருடையவை அல்ல” (காண்க எரே 5:10) என்று கூறி தீர்ப்பு வழங்குவதைப் பார்க்கின்றோம். நற்செய்தியில் இயேசு, "என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார்" என்றும், "என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்" என்றும் உரைக்கின்றார். இதனைத்தான் திருமுழுக்கு யோவான் வாழ்விலும் பார்க்கின்றோம், தம்மிடம் திருமுழுக்குப் பெற புறப்பட்டு வந்த கூட்டத்தைக் கண்டு, “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்; ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தரா மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்” (காண்க லூக் 3: 7-9) என்று எச்சரிப்பதைப் பார்க்கின்றோம்.

மிகுந்த கனிதரும் திராட்சைச் செடிகள் யார்?

அப்படியென்றால், இயேசுவுடன் இணைந்திருந்தால்தான் நாம் கனிதரமுடியும். தாயோடு இணைந்திருக்கும் பிள்ளைதான் நிறைந்த வளர்ச்சிக் காண முடியும். ஆசிரியரோடு இணைந்திருக்கும் மாணவன்தான் நிறைந்த ஒழுக்கமுடையனாக வாழ்வில் செழிக்க முடியும். ஒரு குடும்பத்திலுள்ள கணவனும் மனைவியும் அன்பிலும், பக்தியிலும், நம்பிக்கையிலும் இணைந்திருந்தால்தான் அவர்தம் பிள்ளைகளுக்கும் இச்சமுதாயத்திற்கும் நற்கனிகள் கொடுக்க முடியும். கிறிஸ்துவின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்  பெயரளவில் வெறும் கிறித்தவர்களாக வாழ்பவர்கள் அனைவருமே கனிகொடா கிறித்தவர்கள்தாம். அவ்வாறே, அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட துறவிகள், தங்கள் அழைக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து, சாதி, பணம், பதவி, அதிகாரம், செல்வாக்கு என்று இவ்வுலகின் மதிப்பீடுகளிலும், மாயைகளிலும் சிக்குண்டு வாழும்போது அவர்களும் கனிகொடாத இயேசுவின் சீடர்களாக வெறும் பெயரளவுக்கு மட்டுமே துறவிகளாக வாழ்கின்றனர் என்பதும் கண்கூடு.

ஆக, இயேசுவுடன் இணைந்த நிலையில் கனிதர வேண்டுமெனில் நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும். "நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்" என்கின்றார் இயேசு. இதனைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில், "கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்" என்று கூறுகின்றார் திருத்தூதரான புனித யோவான். தனது தவறான நடவடிக்கைகளால் பாவத்தில் வீழ்ந்த பவுலடியார் மனமாற்றம் பெற்று இயேசுவுக்காகத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்ததன் வழியாக மிகுந்த கனிதரும் சீடராக மாறினார். இருளிலிருந்து ஒளிக்கு அதாவது, கனிகொடா நிலையிலிருந்து கனிதரும் நிலைக்குக் கடந்து சென்றார் அவர். "நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது" என்று இயேசு கூறியது பவுலடியாரின் வாழ்வில் நிறைவுறுவதைக் காண்கின்றோம். அவ்வாறே தொடக்ககால இயேசுவின் சீடர்கள் அனைவரும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடன் இறுக்கமாகவும் நெருக்கமாகவும்  இணைந்திருந்தனர். அதனால்தான், யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது என்று இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது.

பிலிப்பீன்ஸ் நாட்டில் மறைக்கல்வி கற்பிப்பதற்காகத், தனது அரசு வேலையையைத் துறப்பு செய்த பொதுநிலையினரான இறைஊழியர் Laureana Franco அவர்களுக்குப் புனிதர் பட்டம் கோரும் தலத் திருஅவையின் பணிகள் தொடங்கவிருப்பதாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியிருந்தது. இந்தச் செய்தியை வாசித்தபோது, அது என் மனதை மிகவும் வருடியது. இறைஊழியர் Franco-வின் வாழ்வை வாசிக்கும்போது அவர் எப்படி இயேசுவுடன் இணைந்த நிலையில் மிகுந்த கனிதரும் சீராக இருந்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகின்றது. 1936-ஆம் ஆண்டு பிறந்த பிராங்கோ, பிலிப்பீன்ஸ் விமானப்படையில் தொலைபேசி மின்தொடர் பிணைப்புப்பலகை இயக்குபவராகவும் (telephone switchboard operator) கணக்கியல் எழுத்தராகவும் பணியாற்றினார். Pasig மறைமாவட்டத்தின் Taguig நகரிலுள்ள புனித அன்னாள் பங்கில் தன்னார்வ மறைக்கல்வி ஆசிரியராகப் பணிபுரிவதற்காக அவர் தனது வேலையைத் துறந்தார். அவர் 10 ஆண்டுகள் மறைக்கல்வி ஆசிரியையாகப் பணிபுரிந்தார். கல்வி வழியாக இறைநம்பிக்கையை பரப்புரை செய்ய முடியுமென்று அவர் இளையோரைத் தூண்டியெழுப்பினார். பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கெல்லாம் அவர் உதவி செய்திருக்கிறார்.

தலத்திருஅவையின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த இறைஊழியர் பிராங்கோ அவர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட முற்றிலும் தகுதியானவர் என்று கூறியுள்ள அம்மறைமாவட்டத்தின் ஆயர் Mylo Hubert Vergara அவர்கள், “ஏழைகளுக்குப் பணியாற்றுவதில் அவர் ஒருபோதும் சோர்வடைந்ததில்லை” என்றும், “ஆனால் குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்பித்தல் வழியாக இறைநம்பிக்கையை எளிய வழியில் ஏற்படுத்தினார்” என்றும் புகழாரம் சூட்டினார். மேலும் “இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பதன் வழியாக, ஒருவர் இயேசுவைப் போல் மாறுகிறார்” என்றும்,  “இறைஊழியர் பிராங்கோவின் வாழ்க்கையில் புனிதம் இப்படித்தான் பிரதிபலிக்கிறது” என்றும் பெருமிதத்துடன் சொல்லியிருந்தார் ஆயர், இவை எல்லாவற்றிக்கும் மேலாக திருவிவிலியத்தை உணர்ந்து பேரார்வத்துடன் கற்பித்திருக்கிறார். எவ்வித ஊழியமும் பெறாமல் தன் வாழ்வின் பெரும்பகுதியை மறைக்கல்விக் கற்பித்தலில் செலவிட்டிருக்கிறார். இவர் ஓர் அறிவற்றவர், பிழைக்கத் தெரியாதவர், உலகம் புரியாதவர் என்றெல்லாம் இவரைக் குறித்து மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்தபோதெல்லாம் சிரித்துக்கொண்டே அவர் அதை கண்டுகொள்ளாமல் போய்விடுவாராம். காரணம், இயேசு தனது அர்ப்பணம் நிறைந்த பணிக்குப் பரிசாக நிலைவாழ்வு என்னும் அழியாத கொடையை ஊதியமாகக் கொடுப்பார் என்பது அவருக்குத் தெரியும். அதனாலே அவர் இதனைக் குறித்தெல்லாம் கவலைப்படாமல் இருந்திருக்கின்றார். இன்று அவரிடம் மறைக்கல்விக் கற்றுக்கொண்ட மாணவர்கள் எல்லாம் ஆழமான இறைநம்பிக்கை கொண்டவர்களாகத் தங்களின் கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். இறைஊழியர் Franco கிறிஸ்து என்னும் திராட்சைக் கொடியுடன் இணைந்திருந்தனால் அவர் மட்டும் கனிகொடுக்கவில்லை, மாறாக, தான் கற்பித்த மறைக்கல்வி படிப்பினைகள் வழியாகப் பெரும்பாலானோரை மிகுந்த கனிதரும்படி வளர்த்திருக்கிறார். நாம் எளிய வாழ்க்கை வாழ்ந்து இயேசுவின் அன்புக் கட்டளையை கடைபிடுக்கும்போதுதான், நாம் அவருடன் இணைந்து கனிதர முடியும். இல்லையென்றால், கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு கனிகொடா நிலையில் உலர்ந்து போவோம்.

ஒரு காரியத்தில் நாம் வெற்றியடைய வேண்டுமெனில் முதலில் இணைந்து வருவது மிகவும் முக்கியம். இரண்டாவது, இணைந்திருந்தால் மட்டும் போதாது, செயல்படவும் வேண்டும். செயல்பாடு இல்லையெனில் இணைந்திருப்பதில் பயனொன்றும் இருக்காது. அதனால்தான், "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்” என்றும் அறிவுறுத்துகின்றார் திருத்தூதர் யோவான். ஆகவே, இயேசுவின் கட்டளைகளைக் கருத்துடன் கடைபிடித்து அவருடன் இணைந்த நிலையில் மிகுந்த கனிதரும் செயல்பாடுள்ள சீடர்களாக வாழ்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2024, 16:42