தேடுதல்

நல்லாயன் இயேசு நல்லாயன் இயேசு  

பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு : அனைவருக்குமானத் தலைவர் இயேசு!

ஒரு தலைவர் என்பவர், மதம், இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு கடந்து அனைவருக்குமானவராகத் திகழவேண்டும்.
பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு : அனைவருக்குமானத் தலைவர் இயேசு!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. திப 4:8-12     II. 1 யோவா 3:1-2     III.  யோவா  10:11-18)

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறை இன்றும் நாம் சிறப்பிக்கின்றோம். நம் அன்னையாம் திருஅவை இந்நாளை நல்லாயன் ஞாயிறாகவும், இறையழைத்தல் ஞாயிறாகவும் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவை நல்ல ஆயர், மேய்ப்பர், தலைவர் என்று வரையறை செய்கிறது. "கொடி என்ற தோளும், முடி என்ற தலையும் மட்டுமன்றி, இடித்தாங்கும் நெஞ்சம் இருந்தால் அவனே தலைவன், பூவின் அழகை இரசிக்கவும் தெரிந்து, பூகம்ப அதிர்வைத் தாங்கவும் முடிந்தால் அவனே தலைவன்" என்று தலைமைத்துவத்துக்கான இலக்கணமாக வரையறை செய்கின்றார் சுப. வீரபாண்டியன். "ஒரு தலைவருக்குரிய முக்கிய அடையாளமே அவர் கொண்டிருக்கும் அணுகுமுறைதான்" என்கின்றார் தியோடர் கெஸ்பர்க். "தலைமைத்துவம் என்பது முடி சூட்டிக்கொள்வது மட்டுமல்ல, தழும்புகளைத் தாங்குவதும்தான்" என்கின்றார் ஆல்பர்ட் ஸ்வைட்சர். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சிந்திக்கும்போது என் நினைவுக்கு அடிக்கடி வருவது கறுப்பின மக்களின் தலைவரான மறைந்த மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். அதற்கு முக்கிய காரணம் இயேசுவின் வழியில்  அவரொரு நல்ல ஆயராகத் திகழ்ந்தார் என்பதுதான்.

1963-ஆம் ஆண்டு லிங்கன் சதுக்க்கத்தில் அவர் நிகழ்த்திய ஓர் உரை ஒட்டுமொத்த கருப்பின மக்களின் இரத்தத்தில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் பாய்ச்சியது. தங்களின் உரிமைக்காக அவர்களை அறவழியில் போராடத் தூண்டியது. தங்கள் விடுதலைக்காகக் கனவு காணத் தூண்டியது. அமெரிக்காவில் நடந்த இனப்போராட்டத்தின் முடிவைத் தொடங்கிவைத்ததில் அவ்வுரைக்கும் அதைப் பேசிய அம்மனிதருக்கும் மிகப்பெரிய பங்குண்டு. தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அதைத் தேடிச் சென்று அரவணைத்துக்கொண்டு தனது போராட்டத்தில் வெற்றி கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மனிதர்தான் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு அடிமைகளாக இருந்த கருப்பர் இனத்தவரின் விடிவெள்ளியாய், நம்பிக்கை நாயகனாய், நல்லாயனாய்த் திகழ்ந்தவர் மார்டின் லூத்தர் கிங். அவரிடம் இருந்து புறப்பட்டவையெல்லாம் வெறும் சொற்கள் அல்ல. அவை  சமத்துவ சமுதாயத்தைப் படைக்கத் தூண்டிய அம்புகள். அச்சொற்கள் உறையும் குளிரில் இரத்ததைக் கொதிக்க வைக்கும் தீப்பிழம்புகள். ஆனால் அமைதியை மட்டுமே வலியுறுத்தியவை. இன்றும் உலக வரலாற்றின் தலைசிறந்த உரைகளில் அவர் ஆற்றிய 'எனக்கொரு கனவுண்டு'  அதாவது, ‘I Have a Dream’ என்ற உரை முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. இவ்வுரை, ஒவ்வொரு கறுப்பின அமெரிக்கரையும் தனது சுதந்திரத்திற்காக வெகுண்டெழுந்துப் போராடத் தூண்டியது என்றால், அது மிகையாகாது.  

 “100 ஆண்டுகள் கடந்த பின்னும் கறுப்பினத்தவராகிய நாம் இங்கு அடிமைகளாகவே இருக்கின்றோம். நியாயம் என்னும் கருவூலம் இங்கு இன்னும் காலியாகவே இருக்கிறது. நமக்கு இங்குச் சமத்துவம் கிடைக்கும்வரை நாம் ஓயப்போவதுமில்லை அமைதியடையப் போவதுமில்லை. ஆனால் அதேவேளையில், இந்தப் போராட்டம் தீவிரவாதமாக மாறப் போவதில்லை. இந்தப் போராட்டம் வெறும் தொடக்கம் தான். கருப்பினத்தவருக்கு எதிரான வன்முறைகள் அடங்கும் வரை, போராடி சளைத்த நமது உடல் ஓய்வெடுக்கப் போவதில்லை. மிசிசிப்பியின் மூளையில் இருக்கும் ஒரு  கறுப்பின மனிதருக்கு ஓட்டுப்போடும் உரிமை கிடைக்கும் வரை நாம் திருப்தி அடையப்போவதில்லை” என்று முழங்கினார்  மார்டின். அவருடைய பேச்சின் ஒவ்வொரு வரிக்கும் இடையே எழுந்த கரவொலிகளும், ஆரவாரமுமே அந்த வார்த்தைகளின் வலிமையை எடுத்துக்காட்டின. இவரது பேச்சு கறுப்பர்களை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான வெள்ளையர்களையும் ஈர்த்தது. அவர்களும் கறுப்பர்களின் வாழ்வாதாராத்திற்காகப் போராட முன்வந்தனர். மேலும் அவரின் இந்த உரை ஒவ்வொரு கறுப்பின மனிதரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கெடுத்து ஓடச்செய்தது. “ஒருநாள் ஜார்ஜியாவில் முன்னாள் அடிமைகளும், அவர்களை அடிமைப்படுத்தியவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எனது நான்கு குழந்தைகளும் நிறத்தால் வேறுபாடு காட்டாத ஒரு நாட்டில் வாழ்வார்கள் என்ற கனவு எனக்குள்ளது. ஆம். எனக்கொரு கனவுண்டு. ஒருநாள் பள்ளத்தாக்குகள் மேன்மையடையும். மலைச்சிகரங்களின் உயரம் தாழும். சமத்துவம் நிச்சயம் தலைத்தோங்கும்” என்று அவர் சொல்லி முடிக்கையில் அத்தனை  கறுப்பினனத்தவரின் மனங்களிலும் அசைக்க முடியாத ஒரு கனவு நாயகனாக மாறிப்போனார் மார்டின் லூதர் கிங்.

உரையாற்றும் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர்
உரையாற்றும் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர்

அவரது மனம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கறுப்பினத்தவரின் உரிமைகளுக்காகவே துடித்தது. தான் கடைசியாக மிசிசிப்பியில் உரையாற்ற வருகையில், அவருக்குக் கொலைமிரட்டல் இருந்தது. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் அக்கூட்டத்தில் பங்கேற்றார். “வெள்ளையினத்து  சகோதரர்களால் எனக்கு என்ன வந்துவிடப்போகிறது. கடவுளின் ஆணைக்கிணங்க என் பயணம் தொடரும். நான் மலையின் உச்சியை நோக்கிப் பயணிக்கிறேன். நான் எதற்கும் பயப்படவில்லை. நடப்பது நடக்கும்” என்று துணிவுடன் அக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார் மார்டின். ஆனால் அதுவே அவரது கடைசி உரையானதுதான் பெரும் சோகம்! அவர் வெறும் பேச்சாளர் மட்டுமல்ல. மாபெரும் செயல் வீரர். கறுப்பினத்தவரின் உரிமைக்காகவே தனது மூச்சையும் விட்டவர் (ஏப்ரல் 4, 1968). இவரது உயிர்த்தியாகம் கறுப்பர்களின் மனதில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்காவின் வரலாற்றிலும் அழிக்க முடியாத ஒன்றாக மாறிப்போனது. அமைதிக்கான நோபல் பரிசை இவர் வென்றது வெற்றியல்ல. ஆனால், அவர் கண்ட கனவைப் போல அந்நாடு கறுப்பர் இனத்தைச் சார்ந்தவரால் அதாவது, பராக் ஒபாமாவால் ஆளப்படும் மாற்றத்தைச் சந்தித்ததே, அதுதான் அவரின் போராட்டத்திற்கும் உயிர்த்தியாகதிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.

இயேசுவே நல்ல ஆயர் 

இன்றைய நற்செய்தியில், இயேசு, தானே ஒரு நல்ல ஆயர் என்பதையும், ஓர் ஆயருக்கு இருக்கவேண்டிய உன்னதமான பண்புகளையும் எடுத்துக்காட்டுகிறார். முதலில், "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்" என்று கூறும் இயேசு, "நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்" என்று மீண்டும் அதே வார்த்தைகளையே கூறி, ஆடுகளாகிய நமக்காக அவர் ஏற்கவிருக்கும் தியாக மரணத்தை உறுதிப்படுத்துகிறார். இயேசு தனது சாவை மூன்று முறை அறிவித்து அதனைக் கல்வாரியில் வாழ்வாக்கிக் காட்டியது, அவர் சொன்னதை செய்த உன்னதத் தலைவர் என்பதை உலகுக்குக் காட்டுகிறது. "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவா 12:24) என்று மொழிந்ததை கல்வாரியில் வாழ்வாக்கியபோது, அவர் ஒரு சிறந்த தலைவர் என்பதை நமக்குப் புலப்படுத்தியது. "மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (காண்க. மாற் 10:45) என்று கூறியதை அவர் கல்வாரியில் வாழ்வாகியபோது, அவர் இலட்சியம் கொண்ட ஒரு மாபெரும் தலைவர் என்பதை உணர்த்தியது. மேலும், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடித் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன்” என்றும் “நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக்கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன்” (காண்க. எசேக் 34:11-12, 15-16) என்றும் இஸ்ரயேல் மக்களின் உண்மைமிகு ஆயராகத் தன்னை வெளிப்படுத்தும் இறைத்தந்தையையின் தலைமைத்துவத்தைப் பார்க்கின்றோம்.

பொறுப்பற்ற ஆயர்கள் 

இரண்டாவதாக, பொறுப்பற்ற ஆயர்களின் செயல்பாடுகளையும் எடுத்துக்காட்டுகின்றார் இயேசு. அவர்களைக் கூலிக்கு மேய்ப்பவர்கள் என்றும் வரையறை செய்கின்றார். "கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில், அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை" என்று அவர் கூறும் வார்த்தைகள் பொறுப்பற்ற ஆயர்களின் அல்லது தலைவர்களின் பண்புநலன்களை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. நமது அன்றாடப் பணிகளிலும் இதனைப் பார்க்கின்றோம். ஒருவரிடம் கொடுக்கப்பட்ட வேலையை அவர் சரியாக செய்து முடிக்காததை நாம் காணும்போது, அவரை எப்படி அழைப்போம்? “கூலிக்கு மாரடிக்கிறவன்தானே... அதான் இப்படி அரைகுறையா, ஏனோதானோன்னு செய்திட்டு போயிருக்கான்" என்று கூறுவோமல்லவா? அப்படிதான் இங்கே இயேசுவும் குறிப்பிடுகின்றார். இஸ்ரயேல் மக்களை ஆண்ட பொறுப்பற்ற ஆயர்களை இப்படித்தான் இறைத்தந்தையும் கடிந்துகொள்கின்றார். “தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்! நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை. நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழிதப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள். ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின" (காண்க. எசேக் 34:2b -5).

நமது தலைவர்கள்

இந்தியா சுதந்திர போராட்ட காலங்களில் இருந்து பல சிறந்த தலைவர்களை நாட்டுக்கு வழங்கியுள்ளது. 1946-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி, இந்தியா சுதந்திரத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த நேரம் அது. கூடவே இந்தியா பாகிஸ்தான் பிரிவினை காரணமாக, இப்பொழுது இருக்கும் பங்களாதேஷ் அன்றைய வங்காள மாநிலத்தில் Noakhali மற்றும் Tipperah என்ற இடங்களில் கலவரம் வெடித்து இரத்த ஆறு ஓடியது. இதை கேட்ட நம் தேச தந்தை அண்ணல் மகாத்மா காந்தி துடிதுடித்துப்போனார். அவர் அன்று இந்தியாவின் பிரதமரும் அல்ல, ஒரு கட்சியின் தலைவரும் அல்ல. ஆனாலும்  அனைவரும் தடுத்தும் கூட, என் மக்கள் சண்டையிட்டு மடிகிறார்கள் என்று கூறி அங்குச் சென்று மக்களைச் சந்தித்தார். மேலும் கலவரம் தொடர்ந்து நடக்காமல் இருக்க மக்களை வேண்டினார். ஊடங்கங்களுக்குத் தகவல் கொடுத்து முழு இராணுவம் மற்றும் காவல் துணையோடு செல்லாமல் நான்கு மாதம் கலவரம் நடந்த பூமியில் தங்கி அந்த மக்களுடன் மக்களாக வாழ்ந்தார்! அவர்தான் உண்மையான தேசத்தலைவர். ஆனால் இன்று, அரசியல் தலைவர்கள் போட்டி பொறாமையால் அரசியலை கையில் எடுத்து கொண்டு நாட்டையும் நாட்டு மக்களையும் ஏமாற்றி  ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களிடையே பிரிவுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்த விரும்புகின்றனர். உரோமை பற்றி எரிந்துகொண்டிருந்தபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல, மணிப்பூர் இனக்கலவரத்தால் பற்றியெரிந்துகொண்டிருந்தபோதும், இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்டதைக கண்டபோதும், அதுகுறித்து சிறிதும் அக்கறைகொள்ளாது இருக்கத்தானே செய்தார் நமது பாரதப் பிரதமர் மோடி. ஆனால் இன்று, நாட்டின் பொதுத் தேர்தலின்போது அவர் எத்தனை வேடங்களைப் போட்டுக்கொண்டு நாடகமாடினார் என்பதை செய்தித்தாள்களில் பார்த்தோம். மேலும் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் துயரத்தின் பிடியில் தள்ளிவிட்டு இப்போது தான் எதையுமே செய்யாததுபோல் காட்டிக்கொள்கின்றார் மோடி.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள் துயரத்தில் அழும் காட்சி
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள் துயரத்தில் அழும் காட்சி

அனைவருக்குமான ஆயர் (தலைவர்)

மூன்றாவதாக, இயேசு தன்னை அனைவருக்குமானத் தலைவராக முன்னிருத்துகிறார். "இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்" அவர் தனது பணிவாழ்வின்போது யாரிடமும் எவ்வித வேறுபாடும் காட்டவில்லை. எல்லா மக்களுக்கும் தன்னை உரியவராக்கிக்கொண்டார் அவர். எல்லாரிடமும் சமத்துவத்தைப் பேணினார். யாரையும் அவர் வேறுபடுத்தவில்லை. குறிப்பாக நலிந்தவர்களையும், நோயாளர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும் ஓரணியில் கொண்டுவரப் போராடினார். எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். "இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்" (காண்க. லூக் 13:29) என்று கூறி அவரது இறையாட்சியில் எல்லாருக்கும் இடமுண்டு என்று தெளிவுபடுத்துகின்றார். ஆக, ஒரு தலைவர் என்பவர், மதம், இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு கடந்து அனைவருக்குமானத் தலைவராகத் திகழவேண்டும். ஆகவே, எல்லைகடந்து எல்லா மக்களின் தலைவர்களாக, அனைவரின் நலன்களுக்காகவும் உழைக்கும், தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்ய முன்வரும் உண்மைத் தலைவர்களாக நமது தலைவர்களும் சிறந்து விளங்கிட இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2024, 13:50