தேடுதல்

சிங்கப்பூர் புனித யோசேப்பு ஆலயம் சிங்கப்பூர் புனித யோசேப்பு ஆலயம் 

சிங்கப்பூர் திருப்பயண நிகழ்வுகள் தொடர்புடைய எச்சரிக்கை

திருத்தந்தையின் சிங்கப்பூர் பயண நிகழ்வுகளில் பங்கேற்பது தொடர்புடைய அனுமதிச் சீட்டுகளுக்கு திருஅவையின் அதிகாரப்பூர்வத் தளத்தை மட்டுமே நம்புமாறு அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சிங்கப்பூர் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் 11 முதல் 13 வரை திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், திருத்தந்தையின் பயண நிகழ்வுகளில் பங்கேற்பது தொடர்புடைய அனுமதிச் சீட்டுகளுக்கு திருஅவையின் அதிகாரப்பூர்வத் தளத்தை மட்டுமே நம்புமாறு விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது தலத்திருஅவை.

சிங்கப்பூர் மக்களுக்கு இத்தகவலைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் தலத்திருஅவை, திருத்தந்தையின் திருப்பயணத்தோடு தொடர்புடையவர்கள் என காட்டிக்கொண்டு ஏமாற்ற முயலும் தனியார்கள் மற்றும் அமைப்புக்கள் குறித்து கவனமாக செயல்படவேண்டும் எனவும், எந்த ஒரு தகவலுக்கும் திருஅவையின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களையே அணுகுமாறும் விண்ணப்பித்துள்ளது.

திருத்தந்தையின் திருப்பலியில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு உதவுவதாகக் கூறி அவர்களிடமிருந்து தனிப்பட்ட விவரங்களை சில அமைப்புக்கள் சேகரிப்பதைக் குறித்து கேள்விப்பட்டதால் இத்தகைய ஓர் எச்சரிக்கையை விடவேண்டியிருந்தது எனவும் தெரிவித்துள்ளது சிங்கப்பூர் பெருமறைமாவட்ட அலுவலகம்.

தவறான நபர்களால் சேகரிக்கப்படும் இந்த விவரங்கள் பின்னர் தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து இருப்பதையும் சிங்கப்பூர் பேராயரின் தகவல் தொடர்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

திருத்தந்தையின் திருப்பலியில் பங்கேற்க விரும்புபவர்களுக்கான அனுமதிச் சீட்டு அனைத்தும் இலவசமே எனக்கூறும் தலத்திருஅவை அலுவலகம், 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலுக்குப்பின் தற்போதுதான் திருத்தந்தை ஒருவரின் திருப்பயணம் அந்நாட்டில் இடம்பெறுகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2024, 15:53