தேடுதல்

இரத்தப்பழிக்கு ஆளான தாவீது அரசர் இரத்தப்பழிக்கு ஆளான தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-8, இரத்தப்பழி தவிர்ப்போம்!

ஆண்டவரின் நீதியான செயல்களை முன்னிட்டு யாருடைய இரத்தப்பழிக்கும் நாம் ஆளாகாமல் இருப்போம்!
விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-8, இரத்தப்பழி தவிர்ப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘மீட்பின் மகிழ்ச்சியைப் பெறுவோம்!’ என்ற தலைப்பில் 51-வது திருப்பாடலில் 12, 13 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். அதில் தன்னார்வ மனம் கொண்டு, பாவங்களிலிருந்து விடுதலைப்பெற்று இறைவன் அருளும் மீட்பின் மகிழ்ச்சியை சுவைக்க இறையருள் வேண்டினோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 14 முதல் 19 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்பொழுது அவ்வார்த்தைகளை இறைபிரசன்னத்தில் வாசிக்கக் கேட்போம். “கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். (வச. 14-15)

நாம் தியானிக்கும் இன்றைய இறைவார்த்தைகளில் மூன்று முக்கியமான கருத்துக்களை முன்வைக்கின்றார் தாவீது அரசர். முதலாவதாக, "இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்" என்று கதறுகின்றார். இங்கே இரத்தப் பழி என்று எதனைக் குறிப்பிடுகின்றார்? பத்சேபாவின் கணவர் உரியாவைக் கொன்றதைத்தான் இங்கே ‘இரத்தப்பழி’ என்று சுட்டிக்காட்டுகின்றார் தாவீது. தான் நினைத்தபடி, அதாவது, உரியா தனது வீட்டிற்குச் சென்று அவரது மனைவியுடன் உறவுகொள்ளவில்லை என்பதை அறிந்த தாவீது, எங்கே அந்தக் குற்றப்பழி தன்மீது விழுந்துவிடுமோ என்றஞ்சியவராக உரியாவைக் கொன்றுவிடத் திட்டமிடுகிறார். தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி, அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார். அம்மடலில் அவர், “உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டுப் பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார் (காண்க. 2 சாமு 11:14-15) என்று வாசிக்கின்றோம். மேலும் உரியாவின் இறப்பு, தான் செய்த பாவம் யாருக்கும் தெரியாது போய்விட்டது என்றெண்ணியதுடன், தாவீது நினைத்தபடியே பத்சேபாவை அவரது மனைவியாக்கிக்கொள்ளவும் வழிகோலியது. அதுமட்டுமன்றி, தான் செய்த இந்தப் பாவம் கடவுளுக்குக் கண்டிப்பாகத் தெரியும் என்பதை அவர் மறந்துவிட்டார். ஆனால் எல்லாவற்றையும் ஆய்ந்தறியும் கடவுள், இறைவாக்கினர் நாத்தானை தாவித்திடம் அனுப்பி, அவரது குற்றத்தை கடுமையாகக் கடிந்துகொள்கின்றார். 'ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீயது செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இரையாக்கி, அவன் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்; அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்! இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது; ஏனெனில், நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்.’ (12:9-10). ஆக, மேற்கண்ட யாவும் தாவீதின் இரத்தப்பழிக்குக் காரணங்களாக அமைந்ததனால்தான், "இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்" என்று புலம்பி அழுகிறார் தாவீது.

'இரத்தப்பழி' என்பது மிகவும் முக்கியமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 'அவனுடைய இரத்தத்தப்பழி உன்னை சும்மாவிடாது' என்று கூறி பாதிக்கப்பட்ட பலர் குரலெழுப்பி கண்ணீர்விட்டுக் கதறியழுத்ததைப் பார்த்திருக்கின்றோம். இதற்கொரு எடுத்துக்காட்டை நாம் கூறலாம். இலங்கையில் நம் தமிழ் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்பட்டபோது, ஒரு வயதான அன்னை அவ்வழியே சென்ற ஒரு இராணுவ வண்டியைப் பார்த்து இரண்டு கரங்களாலும் மண்ணைவாரி இறைத்துக் கதறியழுத புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி இருந்தது. இந்தப் புகைப்படம் உலக மக்களை மிகவும் வேதனையடையச் செய்தது. 'எங்களின் மாசற்ற இரத்தம் உங்களைச் சும்மாவிடாது. ஒரு நாள் கடவுள் இதற்கு நீதி வழங்குவார்' என்ற அர்த்தம் அவரது செயல்களில் வெளிப்பட்டதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால், அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கித்தவித்தபோது, தமிழர்கள் சிந்திய இரத்தம்தான் இக்கொடிய நிலைக்குக் காரணம் என்றும் கூட பலர் தமிழகத்தில் கருத்துச் சொன்னார்கள். எது எப்படியோ, ஒருவரின் கொடிய சாவுக்கு நாம் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாகும்போது, அவரின் இரத்தப்பழி நம் வாழ்வை சீர்குலைக்கும் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது. நமது திருவிலியத்தில் பல்வேறு சம்பவங்களை இதற்கு எடுத்துக்கட்டுகளாகக் கூறலாம். அவற்றில் இரண்டை மட்டும் இங்கே காண்போம். முதலில் தொடக்கநூலில் நிகழும் ஆபேல்மீது காயின் நிகழ்த்தும் படுகொலை. காயின் தனது சகோதரன் ஆபேலை கொன்றழித்ததும் அங்கே கடவுள் உரைப்பதைப் பாருங்கள். ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான். அதற்கு ஆண்டவர், “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய் (காண்க. தொநூ 4:9-11) என்று கூறுவதைப் பார்க்கின்றோம். அதன் பிறகு காயினின் வாழ்வு எப்படி அமைந்தது என்பதை நாம் அறிவோம்.

இரண்டாவது, நாபோத்தின் படுகொலை (காண்க. 1 அர 21 :1-29; 2 அர 9:30-37). இங்கே என்ன நிகழ்கிறது? இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருக்கிறது. அதைப் பறித்துக்கொள்ள பேராசைபடுகின்றான் ஆகாபு. ஆனால் 'இது என் மூதாதையரின் உரிமைச் சொத்து' என்று கூறி அதைக் கொடுக்க மறுக்கிறான் நாபோத். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகும் ஆகாபை அவனது மனைவி ஈசபேல் தேற்றி, அந்த நிலத்தைத் தான் பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுக்கிறாள். அதன்பிறகு அவள் இழிமனிதரை இருவரை ஏவி, “நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்” என்று பொய்க்குற்றம் சுமத்தி (தெய்வநிந்தனைப் பழி) நாபோத்தை கொலைசெய்ய தூண்டுகிறாள். அவளது கொடிய திட்டத்தின்படி நாபோத்தும் படுகொலை செய்யப்படுகிறான். இதனால் கோபமுற்று வெகுண்டெழும் கடவுள் இறைவாக்கினர் எலியாவை அனுப்பி, ஆகாபிடம், "நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும்" என்ற வார்தைகளைக் கூறி நாபோத்தின் இரத்தப்பழிக்குக் கிடைக்கப்போகும் தண்டனையை உறுதிப்படுத்துகிறார். அவ்வாறே அரசன் ஆகாபு போரில் இறந்தபோது, சமாரியாக் குளத்தில் அவனது தேரையும் கவசத்தையும் கழுவினர். ஆண்டவரின் வாக்கின்படியே நாய்கள் அவனது இரத்தத்தை நக்கின (காண்க. 1 அர 22:38). இதேபோன்று, ஆகாபின் மனைவி ஈசபேலும் கொலைசெய்யப்பட்ட இறந்தபோது அவளது உடலை நாய்கள் தின்றன (காண்க 2 அர 9:30-37). ஆக, மாசற்ற மனிதரின் இரத்தம் கடவுளின் இதயத்தைத் தட்டியெழுப்பி அதற்குக் காரணமானவர்களைப் பழிவாங்கச் செய்யும் என்பது திண்ணமாய்த் தெரிகிறது.

ஆனால் இங்கே, தாவீது அரசர் உரியவைக் கொலைசெய்யத் தூண்டியதும், அவரது கொலைக்குக் காரணமானதும் வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும் கூட, கடவுளைப் பொறுத்தமட்டில் இதுவொரு மாபெரும் பாவச்செயலாகவே பார்க்கப்பட்டது. அதனால்தான் அவரின் அநீதியான செயலுக்குத் தக்க தண்டனை வழங்குகின்றார் கடவுள். இங்கே முக்கியமானதொன்றை நாம் மறந்துவிடக்கூடாது. அதுதான் ஆணவம் மற்றும் அதிகாரத் திமிர். ஆபேலை கொலை செய்த காயினிடம் ஆணவமும் திமிரும் காணப்பட்டது. “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று  கடவுள் அவனிடம் கேட்டபோது, “எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்று திமிராகப் பதிலளிக்கிறான். அவ்வாறே, ஆகாபும் அவனது மனைவி ஈசபேலும் ஆணவமுடனும் அதிகாரத் திமிருடனும் நடந்துகொள்கின்றனர். இதுதான் அவர்களுக்கு அழிவைக் கொணர்ந்தது. ஆனால், இறைவாக்கினர் நாத்தான் தாவீது அரசரிடம் சென்று, அவரது பாவத்தை எடுத்துரைத்தபோது, “நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்” (காண்க. 2 சாமு 12:13) என்று கூறி மனத்தாழ்மையுடன் மன்னிப்பு வேண்டினார் அவர். காரணம் பணிவும், மனத்தாழ்மையும் மட்டுமே, நமது பாவங்கள் மன்னிக்கப்பட காரணங்களாக அமைகின்றன.

இரண்டாவதாக, " என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்" என்று கூறுகின்றார் தாவீது. இங்கே எதை நீதி என்று அவர் குறிப்பிடுகின்றார் என்பதைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். தான் செய்த பாவம் மிகவும் கொடியது, அருவறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது மற்றும், கடவுளுக்கு முற்றிலும் எதிரானது என்பதை அவர் அறிந்திருந்தும் கூட, "என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்" என்று உரைக்கின்றார். இங்கே அவர் செய்த இந்த மாபெரும் பாவச் செயலிலிருந்து கடவுள் அவரை விடுவித்தமைக்காக மட்டுமே அவர் கடவுளின் நீதி குறித்து பேசவில்லை. மாறாக, தானொரு மிகப்பெரும் அரசராக இருந்தும் கூட, அரசரே ஆனாலும் தவறு தவறுதான் என்று, கடவுள் தன்னை தண்டித்ததை நினைவில்கொண்டுதான் இவ்வாறு தாவீது கூறுவதாக நாம் கருதலாம். தாவீது தான் கடவுளுக்கு எதிராக செய்த பாவத்தின் விளைவாக இரண்டு காரியங்கள் அவரது வாழ்வில் நிகழ்கின்றன. முதலாவது, தாவீதுக்கும் பெத்சபாவுக்கும் பிறந்த முதல் குழந்தையை நோயுற்று இறக்கச் செய்கின்றார் கடவுள். இரண்டாவதாக, அவரது மகன் அப்சலோம் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்துகொண்டு அவருக்கு எதிராக எழுந்ததன் காரணமாக, அவர் காட்டிற்குள் ஓடி ஒழியும் அகோர நிலைக்குத் தள்ளப்படுகின்றார். அதுமட்டுமன்று, தன் மகன் அப்சலோம் தனது படைவீரர்களாலேயே கொல்லப்பட்டதைக் கேள்வியுற்று பெரிதும் துயருற்று அழுகிறார்.  ஆகவே, கடவுள் நீதியுள்ளவராக, பாரபட்சம் பார்க்காது,  தனது பாவத்திற்குத் தக்க தண்டனை அளிப்பவராக செயல்பட்டதால்தான் “என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்" என்றுரைக்கின்றார்.

மூன்றாவதாக, "என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்" என்று கூறுகின்றார். இங்கே, 'என் இதழ்களைத் திறந்தருளும்' என்று தாவீது ஏன் குறிப்பிடுகின்றார் என்று சிந்திப்போம். பொதுவாக, தாவீது சிறுவனாக ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது கின்னரம் கொண்டு கடவுளைப் புகழ்ந்து பாடுவதில் மிகவும் கைதேர்ந்தவர். அவர் இயற்றிய திருப்பாடல்களையெல்லாம் படிக்கும்போதே நம்மால் அதை அறிந்துகொள்ள முடிகின்றது. தாவீது, கோலியாத்தை வீழ்த்திய பிறகும், யூதா மற்றும் எருசலேமின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட பிறகும் அவர் பாடிய பாடல்களை வாசிக்கும்போது அவைகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. இப்படி தனது நேரிய நடத்தையாலும், இறையச்சத்தாலும், கடவுளுடன் கொண்ட ஆழமான பிணைப்பாலும் தாவீது கடவுளுக்கு நேர்மையாளராகவும் நீதிமானாகவும் திகழ்ந்தார். இதனால் அவரது வாழ்வில் நிறைமகிழ்ச்சி குடிகொண்டிருந்தது. அவர் செய்த அனைத்துக் காரியங்களிலும் கடவுள் அவருக்கு வியக்கத்தக்க வெற்றிகளை அளித்தார். இதனால், மக்களிடத்தில் அவர் மிகவும் செல்வாக்குமிக்க அரசராக விளங்கினார். ஆனால், அவர் என்று பத்சேபாவுடன் பாவம் புரிந்து கடவுளின் மனதை நோகச்செய்தாரோ அன்றே, தான் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகக் கருதத் தொடங்கினார். இன்னும் சொல்லப்போனால் அவரது பாவச் செயலால் கடவுளைப் புகழ்ந்து பாடும் தகுதியை இழந்துவிட்டதாகவும் நினைத்தார் தாவீது. அவருடைய திருமுகத்தைப் பார்க்கக்கூடத் தனக்குத் தகுதி இல்லை என்றும் உணரத் தொடங்கினார். ‘இவ்வளவு நன்மைகள் செய்த இறைவனுக்கா நான் இப்படி செய்தேன்’ என்று எண்ணி எண்ணிக் கதறி அழத்தொடங்கினார். ஆக, இத்தகையதொரு பாவச் செயலால்தான் தனது இதழ்கள் கட்டுண்டு போனதாகவும், இப்போது தனது பாவங்களை மன்னித்து அவ்விதழ்களைக் கட்டவிழ்த்து விடுமாறும் புலம்பி அழுகிறார் தாவீது. ஆகவே, ஆண்டவரின் நீதியான செயல்களை முன்னிட்டு யாருடைய இரத்தப்பழிக்கும் நாம் ஆளாகாமல் இருப்போம். நமது பாவச் செயல்களால் கடவுளைப் புகழும் நம் இதழ்களைக் கட்டிபோடாமல் இருப்போம். இந்த இரண்டு வரங்களுக்காகவும் இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2024, 11:42