தேடுதல்

தனது பாவத்திற்காக மனம் வருந்தும் தாவீது அரசர் தனது பாவத்திற்காக மனம் வருந்தும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-7, மீட்பின் மகிழ்ச்சியைப் பெறுவோம்!

தன்னார்வ மனம் கொண்டு, பாவங்களிலிருந்து விடுதலைப்பெற்று இறைவன் அருளும் மீட்பின் மகிழ்ச்சியை சுவைப்போம்!
விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-7 மீட்பின் மகிழ்ச்சியைப் பெறுவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

இங்கிலாந்து நாட்டின் டார்லிங்டன் நகரில் வாழ்ந்த ஒரு திருடன் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு வீடு திரும்பினான். வீட்டுக்கு வந்த அவனை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. அவனை வெறுத்தொதுக்கினர். இதனால் அவன்  மிகவும் மனமொடிந்துபோனான். ஒருநாள் அவன் தெருவில் நடந்துசென்று கொண்டிருந்தபோது, எதிரிலே அந்நகரின் மேயர் ஜான் மோர்சல் என்பவர் வந்துகொண்டிருந்தார். அவருக்கு இவனை நன்றாகவே தெரியும். உடனே  அவன், அவரிடமிருந்து எப்படியாவது தன்னை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி  ஒளிந்து ஒளிந்து சென்றான். அப்போது திடீரென்று ஒரு கை அவன் தோள்மேல் பட்டது. சட்டெனெத் திரும்பி பார்த்த அவன் அதிர்ந்துபோனான். ஏனென்றால் அவன் எதிரே ஜான் மோர்சல் நின்றுகொண்டிருந்தார். அவர் அவன் தோள்மேல் கைபோட்டு, “என்ன சகோதரா! நன்றாக இருக்கிறாயா? என்று நலம் விசாரித்தார். இது அவனுக்கு இன்னும் அதிர்ச்சியைத் தந்தது. இந்தக் காட்சியை அவனால் நம்பமுடியவில்லை. பின்னர் சிறிது நேரம் அவர் அவனிடம் பேசிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார். ஆண்டுகள் பல சென்றன. ஒரு நாள், வேறொரு நகரில் அவன் ஜான் மோர்சலைப் பார்க்க நேர்ந்தது. உடனே அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரிடம் சென்று, “ஐயா! என்னை ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டான். ஒரு நிமிடம் அவனை அமைதியாகப் பார்த்துவிட்டு அவர் ஞாபகம் இருக்கிறது என்பதுபோல் தலையாட்டினார். அப்போது அவன் அவரிடம், “ஐயா! அன்றைக்கு மட்டும் நீங்கள் என் தோள்மேல் கைபோட்டு, அன்பாகப் பேசி இருக்காவிட்டால், இன்றைக்கு நான் எப்படியோ இருந்திருப்பேன். என் வாழ்க்கையே முடிவுக்குக் கூட வந்திருக்கும். நீங்கள்தான் எல்லாரும் வெறுத்தொதுக்கிய திருடனாகிய என்னிடம் அன்பொழுகப் பேசினீர்கள்; நீங்கள்தான் என் குற்றங்களையெல்லாம் மன்னித்து என்னை ஏற்றுக்கொண்டீர்கள்” என்றான். அன்பு ஒன்றுதான் எப்படிப்பட்ட குற்றவாளியையும் பாவியையும் மனமாற்றம் பெறச்செய்து முழுமனிதனாக மாற்றுகிறது. “We are shaped and fashioned by what we love” அதாவது, நாம் யாரால் அன்புசெய்யப்படுகிறோமோ அவரால் நமது வாழ்வு மாற்றம் பெறுகிறது, மற்றும் வடிவமைக்கப்படுகிறது என்று கூறுகின்றார் அறிஞர் Johann Wolfgang von Goethe. நாம் எவ்வளவு பாவியாக இருந்தாலும் நம்மீது கடவுளின் கடைக்கண் படும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்பெற்று நாம் புதுவாழ்வடைகின்றோம்.

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘தூய ஆவியை இழக்காதிருப்போம்!’ என்ற தலைப்பில் 51-வது திருப்பாடலில் 11-வது இறைவார்த்தையை மட்டும் குறித்துத் தியானித்தோம். அப்போது நமது பாவச் செயல்களால் நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் வழங்கியுள்ள தூய ஆவியாரை இழந்துவிடாதிருக்க இறைவேண்டல் செய்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 12, 13 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்” (வச.12-13).

நாம் தியானிக்கும் இந்த இறைவசனங்களில், “உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்" என்கின்றார் தாவீது அரசர். பாவம் மனிதரை இருளின் பிடியில் தள்ளுகிறது. ஆனால் இறைவன் அருளும் மீட்பு அம்மனிதரை பாவத்தின் பிடியிலிருந்து அதாவது, இருளின் பிடியிலிருந்து விடுவிக்கிறது. லூக்கா நற்செய்தியின் தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு நமக்கு எடுத்துக்காட்டப்படுகிறது. திருமுக்குக்கு யோவான் பிறந்த பிறகு, அவரது தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைக்கும் இறைவாக்கின் இறுதியில், "இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது” (காண்க. லூக் 1:78-79) என்று கூறுகின்றார். ஆக, பாவம் மனிதரை இருளின் கட்டுக்குள் வைத்திருந்தது என்றும், அம்மனிதரை மீட்க, கடவுள் ஒளியாகிய தன் ஒரே திருமகனை இவ்வுலகிற்கு அனுப்பினார் என்றும் அறிய வருகின்றோம். எனவே, கடவுள் அருளும் பாவ மன்னிப்பும் மீட்பும் மனிதருக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. எனவேதான், காணாமல்போன மகன் திரும்ப வந்தபோது மகிழ்ச்சியடைகின்றார் அவனது தந்தை. அவ்வாறே, காணாமல்போன ஆட்டைக் கண்டடைபவரும், காணாமல் போன திராக்மாவை கண்டடைபவரும் பெரிதும் மகிழ்கின்றனர். வரிதண்டுபவர்களான மத்தேயுவும் சக்கேயுவும் இயேசுவால் மன்னிக்கப்பெறும்போது மகிழ்வடைகின்றனர். குறிப்பாக, விபசாரத்தில் பிடிபட்ட பெண் இயேசுவால் மன்னிக்கப்பெற்று அரவணைத்துக்கொள்ளப்படும்போது அதிகளவு மகிழ்வடைகின்றார். இங்கே “உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்" என்று தாவீது கூறும் வார்த்தைகளில், கடவுள் நம் பாவங்களை மன்னிக்கும்போது நாம் மீட்படைகின்றோம் என்றும், அந்த மீட்பே நமக்கு நிறைமகிழ்ச்சியைத் தருகின்றது என்றும், நாம் புரிந்துகொள்கின்றோம்.

நமது வாழ்க்கையில் நீண்ட கால, மகிழ்ச்சிக்கான முக்கிய காரணமாக அமைவது ஆக்கப்பூர்வமான நடத்தை. காமம், பற்றுதல், பேராசை, வெறுப்பு, கோபம், அப்பாவித்தனம் போன்ற துயர்தரும் உணர்ச்சிகளின் செல்வாக்கின் கீழ் செயல்படுவது, பேசுவது மற்றும் சிந்திப்பதிலிருந்து விலகியிருப்பது மிகவும் அவசியம். மேலும் நமது வாழ்வில் அழிவுகரமான நடத்தை, மகிழ்ச்சியின்மைக்கான முக்கிய காரணமாக அமைகின்றது என்பதை நாம் உணர்ந்துகொள்வோம். எடுத்துக்காட்டாக,  ஏக்கத்துடன், ஒரு கடையில் உள்ள ஒரு பொருளின் நல்ல குணங்களை பெரிதுபடுத்தி, சட்டரீதியான விளைவுகளைப் புறக்கணித்து, அந்தப் பொருளை நாம் திருடுகிறோம் என வைத்துக்கொள்வோம். அந்த உண்மை தெரியவரும்போது, அது நம் உறவில் ஏற்படுத்தும் விளைவைப் புறக்கணித்து, அச்செயலை மறைப்பதற்குப் பல வழிகளிலும் முயற்சி செய்கின்றோம். அது முடியாதபோது அந்நபரை கொலைசெய்யும் அளவிற்குத் துணிகின்றோம். இதனால் இறைவன் நமக்களித்த அளவுகடந்த மகிழ்ச்சியை இழந்துவிட்டு அதனைப் பெறுவதற்கு மீண்டும் தவியாய்த் தவிக்கிறோம். இதுதான் தாவீதின் வாழ்விலும் நிகழ்கிறது. ‘’மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’’ என்கிறார் ஆங்கில எழுத்தாளரான ஆஸ்கார் வைல்ட். இங்கே அழகு என்பது வெளிப்புற உடல் அழகைக் மட்டும் குறிக்கவில்லை, மாறாக, அகப்புற அழகை அதாவது, மன அழகை குறிக்கின்றது. நம் மனம் எப்போது மிகவும் அழகாய் இருக்கும்? நம் மனதில் பாவம் இல்லாதபோது அது மிகவும் அழகாக இருக்கும். இந்த அழகு மகிழ்ச்சியால் ஏற்படுகிறது. இந்த மகிழ்ச்சி பாவமின்மையிலிருந்து பிறக்கிறது.

இரண்டாவதாக, "தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்" என்கின்றார் தாவீது அரசர். இங்கே தன்னார்வ மனம் என்று அவர் எதைக் குறிப்பிடுகின்றார்? அதாவது, தன்னார்வ மனம் என்பது நிர்பந்தம் இல்லாமல் அல்லது யாராலும் நிர்பந்திக்கப்படாமல் தானே விரும்பி, ஒரு காரியத்தை செய்வது என்று அர்த்தப்படுகிறது. பொதுவாக, மதிகேடான நிலையிலோ அல்லது தவறான மனிதர் ஒருவரின் வழிநடத்துதலிலோ ஒரு மனிதர் பாவத்தில் ஈடுபாடு கொள்ள முடியும். ஆனால், தாவீதைப் பொறுத்தமட்டில், தானாகவே முன்வந்து பத்சேபாவுடன் பாவம் புரிகின்றார். இதனை அவரே விரும்பிச் செய்கின்றார். யாரும் அவரைத் தவறாக வழிநடத்தவில்லை. ஆனால், அவர் உள்ளத்தில் எழுந்த காமவேட்கையின் காரணமாக, கடவுள் தனக்கு அளித்த அனைத்து அருள்வரங்களையும் மறந்துவிட்டு இத்தகையதொரு பாவச் செயலில் ஈடுபடுகிறார். ஆகவேதான், எப்படி தானாகவே விரும்பி இந்தப் பாவத்தைச் செய்தாரோ அவ்வாறே, இனிமேல் இந்தப் பாவச் செயலிலிருந்து விலகியிருக்கும் தன்னார்வ மனம் எனக்கு வேண்டும் எனவும் இறைவனிடம் மன்றாடுகின்றார் தாவீது. இன்னும் கூறவேண்டுமெனில், இது பாவம், இது பாவமற்றது, இது கடவுளுக்கு உகந்தது, இது சாத்தானுக்கு உகந்தது என்பதைத் தெளிந்து தேர்ந்து தன்னார்வ மனதுடன் பாவத்துக்குரியவற்றை விலக்கி வாழும் சூழலை தனக்கு ஏற்படுத்திக்கொடுக்குமாறு இறைவனிடம் வேண்டுகின்றார். ‘திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது’ என்று கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் எழுதியதுபோல, பாவியாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் பாவத்தை ஒழிக்க முடியாது என்றும் கூட நாம் மாற்றி எழுதலாம். ஆக. ஒரு பாவச் செயலை ஒழிக்க வேண்டுமாயின், இதற்குத் தானார்வ மனம் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே, "தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்"  என்று உரைக்கின்றார் தாவீது.

இறுதியாக, " குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்” என்று கூறுகின்றார் தாவீது அரசர். தான் ஒரு பாவியாக மாறியது குறித்தும், அத்தகைய நிலையிலிருந்து கடவுள் தன்னை விடுவித்தது குறித்தும் குற்றம் செய்தோர்க்குத் தான் கற்பிக்கும்போது, அந்தப் பாவிகள் கடவுளை நோக்கித் திரும்புவதற்கு வாய்ப்புண்டு என்ற அர்த்தத்தில்தான் இவ்வாறு குறிப்பிடுகின்றார் தாவீது. நமது நடைமுறை வாழ்க்கையில்கூட இதைத்தானே காண்கின்றோம். பாவியான ஒருவர், எப்படித் தான் மனம் மாறினார் என்று நமக்கு நேரிடையாகச் சான்று கூறும்போது, அதைக் கண்டு நாம் மனமாற்றம் அடைகிறோம் அல்லவா? தூய அகுஸ்தினார் எப்படிப்பட்ட ஒரு பாவியாக வாழ்ந்தார் என்பதை நம் அறிவோம். மேலும் அவர் மனமாற்றம் பெற்று தூய வாழ்வு வாழவேண்டுமென அவருடைய அன்னை புனித மோனிகா எந்தளவுக்கு இறைவேண்டல் செய்தார் என்பதும் நமக்குத் தெரியும். ஆக, மனமாற்றம் பெற்று தூய வாழ்வு வாழ்ந்த புனித அகுஸ்தினாரின் வாழ்வு எத்தனையோ பாவிகளின் வாழ்வை மாற்றியதல்லவா? இயேசு சபையை நிறுவிய புனித இனிகோவின் வாழ்வில் நடந்தது இதுதானே. ஒரு போர்த்தளபதியாக உலகப் பற்றுகளில் மூழ்கிப்போய் இருந்த அவர், பாம்பலூனா கோட்டையில் நிகழ்ந்த போரில் குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடைந்த காலை சரிசெய்யும் பொருட்டு பலமாதங்கள் அவர் அங்கே தங்கவேண்டியிருந்தது. அப்போது வீரக் கதைகள் நிறைந்த நூல்களை வாசிக்கக் கேட்கிறார். ஆனால் அவைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. புனிதர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல்கள்தாம் அவருக்குக் கொடுக்கப்பட்டன. வேண்டாவெறுப்பாக அவைகளை வாசிக்கத் தொடங்குகிறார் இனிகோ. அப்போது, அவரது மனம் மற்றம் பெறுகிறது. அந்நேரத்தில் "இவர்களெல்லாம் புனிதர்களாகியிருக்கும்போது, ஏன் என்னால் மட்டும் புனிதராக முடியாது" என்று அவர் உள்ளத்தில் ஒரு கேள்வி எழும்பியது. இன்று அவரைப் புனிதர் நிலையில் பார்க்கின்றோம். ஆக, பாவ நிலையிலிருந்து நாம் பெறும் மனமாற்றமானது, பாவிகளாகிய பிறரையும் மனமாற்றமடையச் செய்து கடவுளை நோக்கித் திரும்பச் செய்யும் என்பதை மனதில் நிறுத்துவோம். எனவே, தன்னார்வ மனம் கொண்டு, பாவங்களிலிருந்து விடுதலைப்பெற்று இறைவன் அருளும் மீட்பின் மகிழ்ச்சியை சுவைப்போம். இவ்வருளுக்காக இறைவனிடம் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2024, 13:52