தேடுதல்

போர்த்துக்கல்லில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான பேரணி போர்த்துக்கல்லில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான பேரணி  (ANSA)

மர்செய்ல் நகரில் புலம்பெயர்ந்தோர் குறித்த திருஅவைக் கூட்டம்

புள்ளிவிவரங்களிலேயே நின்றுவிடாமல், புலம்பெயர்ந்தோரின் சோகக்கதைகளுக்கு நாம் செவிமடுக்க வேண்டும் என மர்செய்ல் கூட்டத்தில் கலந்துகொண்டோர் வலியுறுத்தினர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நல்வாழ்வை நாடி புலம் பெயரும் மக்களுக்கு மனிதாபிமான மற்றும் ஆன்மீக உதவிகளை ஆற்றிவருவது குறித்த திருஅவைப் பணியாளர்கள் கூட்டம் பிரான்சின் மர்செய்ல் நகரில் ஏப்ரல் 4 முதல் 8 வரை இடம்பெற்றது.

மத்தியதரைக்கடல் நாடுகளில் புலம்பெயர்ந்தோரிடையே பணியாற்றும் ஏறக்குறைய 50 திருஅவைப் பணியாளர்களுடன் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில்,  புலம்பெயர்ந்தோருக்கான ஒன்றிணைந்த மேய்ப்புப்பணி நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரான்சின் மர்செய்ல் நகரிலிருந்து புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காக கடந்த செப்டம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குரல் எழுப்பியதன் ஆறு மாதங்களுக்குப்பின் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மத்தியதரைக்கடல் பகுதியில் உள்ள புலம்பெயர்ந்தோர் அனுபவிக்கும் துயர்கள் குறித்து விவாதித்த இந்த கூட்டத்தில் மொரோக்கோ, துனிசியா, அல்பேனியா, கிரேக்கம்,  இஸ்பெயின், இத்தாலி, புனித பூமி, பிரான்ஸ் ஆகியவைகளிலிருந்து திருஅவைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

புலம்பெயர்ந்தோருக்கு உதவுவது என்பது வெறும் கொள்கையளவில் நிற்காமல், அதையும் தாண்டி தீவிரச் செயல்பாடாக மாறவேண்டும் என்பதை இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மர்செய்ல் பேராயர் கர்தினால் Jean-Marc Aveline கேட்டுக்கொண்டார்.

மத்தியக்கரைக்கடல் பகுதி அமைதியின் சோதனைக் கூடமாக உலகுக்கு விளங்கவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பை நினைவூட்டிய கர்தினால்,  புலம்பெயர்தல் என்பது நம் அனைவரது வரலாற்றின் ஒரு பகுதியே என்பதையும், புலம்பெயர்ந்தோரின் குரலுக்கு நாம் நேரடியாக செவிமடுக்கவேண்டுமேயொழிய புள்ளிவிவரங்களுக்கு அல்ல என்பதையும், சொல்லப்படுவதையல்ல, மாறாக நாம் நேரடியாக பெறும் தகவல்களை நம்பிச் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

புள்ளிவிவரங்களிலேயே நின்றுவிடாமல், புலம்பெயர்ந்தோரின் சோகக் கதைகளுக்கு நாம் செவிமடுக்க வேண்டும் என்பதை இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மேய்ப்புப் பணியாளர்கள் வலியுறுத்தினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2024, 16:50