தேடுதல்

வத்திக்கான் செய்தி ஒளிபரப்பு வத்திக்கான் செய்தி ஒளிபரப்பு   (Vatican Media)

திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் 53-வது மொழியாக கன்னடம்

கன்னட மொழி பேசும் மூன்றரை கோடி இந்தியர்களுக்கு இந்த மொழி வழி சேவையாற்றுவது அவர்களின் கலாச்சாரத்திற்குத் திருப்பீடம் வழங்கும் மரியாதை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தையின், வத்திக்கானின் மற்றும் திருஅவையின் செய்திகளை எடுத்துச் செல்லும் திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் 53-வது மொழியாக இந்தியாவின் கன்னட மொழி இணைக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட ஏறக்குறைய மூன்றரைக் கோடி மக்கள் இதனால் திருஅவைச் செய்திகளை வத்திக்கான் தலைமைப் பீடத்திலிருந்து தங்கள் தாய்மொழியிலேயே பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் இணையதளத்தில், ஏப்ரல் 2-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் கன்னட மொழி செய்தி தகவல் பக்கம் செயல்படத் துவங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு உயர்மறைமாவட்டத்தின் ஒத்துழைப்புடன் திருப்பீட சமூகத்தொடர்புத் துறையால் துவக்கப்பட்டிருக்கும் இப்புது முயற்சி குறித்து திருத்தந்தைக்குத் தன் நன்றியை வெளியிட்ட பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள்,  இந்தத் துவக்கம் அனைத்துலக திருஅவையை மக்களுக்கு மிக அருகாமையில் கொணர்ந்துள்ளது என்றார்.

திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் தலைவர் முனைவர் Paolo Ruffini அவர்கள் உரைக்கையில், கன்னட மொழி தொன்மை மொழியாக இருப்பினும் இன்னும் உயிருடன் இருக்கும் மொழி எனவும், மூன்றரை கோடி இந்தியர்களுக்கு இந்த மொழி வழி சேவையாற்றுவது அவர்களின் கலாச்சாரம், உண்மையான தகவல் தொடர்பு, இணைந்து நடத்தல் போன்றவைகளுக்கு வழங்கும் மரியாதை ஆகும் எனவும் கூறினார்.

திருஅவைச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் செல்வதற்கென 1931-ஆம் ஆண்டு வத்திக்கானில் துவக்கப்பட்ட வத்திக்கான் வானொலியில் 1965-ஆம் ஆண்டு இந்திய மொழிகளான இந்தி, தமிழ், மலையாளம் ஆகியவைகளில் ஒலிபரப்புத் துவக்கப்பட்டிருக்க, தற்போதுதான் தன் சமூகத்தொடர்புத் துறையில் முதன் முதலாக ஓர் இந்திய மொழியை, அதாவது கன்னடத்தை இணைத்துள்ளது திருப்பீடம்.

தற்போது கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம் உட்பட 53 மொழிகளில் திருப்பீடத்தின் தகவல்கள் திருப்பீட சமூகத்தொர்பு இணையதளப் பக்கத்தின் வழி வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2024, 14:46