தேடுதல்

புகலிடம் தேடிவரும் புலம்பெயர்ந்தோர் புகலிடம் தேடிவரும் புலம்பெயர்ந்தோர்   (AFP or licensors)

புலம்பெயர்ந்தோரை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் : JRS UK

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர்த்தோர் ருவாண்டாவிற்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ள வேளை, அங்குத் தடுப்புக்காவலில் உள்ள புலம்பெயர்ந்தோரை ஆதரித்து வருகிறது அந்நாட்டிற்கான இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அடுத்த 10 முதல் 12 வாரங்களில் ருவாண்டாவிற்குத் தஞ்சம் கோரும் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என்ற பிரித்தானிய பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்தோர்மீதான அந்நாட்டின் பொறுப்பைநிலைநிறுத்தும் பொருட்டு, இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகம் தொடர்ந்து பரப்புரை செய்யும் என்று அவ்வமைப்பு கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறது ICN செய்தி நிறுவனம்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அந்நாட்டிற்கான இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகத்தின் இயக்குநர் Sarah Teather அவர்கள், ருவாண்டா திட்டம் மனிதாபிமானமற்றது போலவே அபத்தமானது. அது உயிர்களை அழிக்கும், பாதிக்கப்படக்கூடிய மக்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்று கூறியுள்ளதுடன், இதனால் இங்குப் புகலிடம் தேடிவரும் மக்களுக்கான நமது கடமையை நாம் கைவிடுவதைப் பார்க்க முடிகிறது என்றும், இது தேர்தலுக்கான ஏமாற்றுவேலை என்றும் கூறியுள்ளார்.

எங்கள் ஆதரவாளர்களின் உதவியுடன், பிரித்தானியாவிற்கான இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகம் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் அரசின் அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எதிர்க்கும் என்று சூளுரைத்துள்ள Teather அவர்கள், இந்தக் கொடூரமான திட்டத்தால் உரிமைகள் அச்சுறுத்தப்படும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பைத் தேடி இங்கிலாந்துக்கு வரும் அனைவருக்கும் நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோரை வலுக்கட்டாயமாகவும் நிரந்தரமாகவும் ருவாண்டாவிற்கு மாற்றுவதற்கான திட்டங்கள், அம்மக்களின் கோரிக்கையை ஆராயாமல், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதலில் அறிவிக்கப்பட்டது என்பது நம் நினைவில் கொள்ளத்தக்கது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2024, 14:03