தேடுதல்

காசா பகுதியில் போரின் சேதங்கள் காசா பகுதியில் போரின் சேதங்கள்  (AFP or licensors)

புனித பூமி கிறிஸ்தவர்களின் வருங்காலத்தை இருளாக்கும் போர்

பெரும் துயர்களை அனுபவிக்கும் புனித பூமியின் காயப்பட்ட மனித குலம் வேதனைகளை தாங்குவதிலும், பகிர்வதிலும் விசுவாசத்திற்கு சான்று பகர்கின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

காசா பகுதியில் இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போர் புனித பூமி கிறிஸ்தவர்களின் வருங்காலத்தை இருள் நிறைந்ததாக மாற்றிவருகிறது என கவலையை வெளியிட்டுள்ளார் பிரான்சிஸ்கன் துறவி Ibrahim Faltas.

புனித பூமிக்கு பொறுப்பாளராக இருக்கும் துறவி இப்ராஹிம் உரைக்கையில், காசா, வெஸ்ட் பேங், மற்றும் இஸ்ராயேலில் வாழும் கிறிஸ்தவர்கள் ஏனைய மதத்தவர்களுடன் இணைந்து பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், இயேசு வாழ்ந்த புனித பூமியில் கிறிஸ்தவர்களின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருவதாகவும் தெரிவித்தார்.  

பெரும் துயர்களை அனுபவித்துவரும் அப்பகுதியின் காயப்பட்ட மனித குலம் தன் விசுவாசத்திற்கு சான்று பகர்கின்றது எனக்கூறும் பிரான்சிஸ்கன் துறவி இப்ராஹிம் அவர்கள், வேதனைகளை தாங்குவதிலும் மற்றவர்களின் வேதனைகளைப் பகிர்வதிலும் அது சான்று பகர்கின்றது என மேலும் கூறினார்.

புனித பூமியில் சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்கள் இன்றைய துயர்களை எதிர்கொள்ள சிரமப்படுகிறார்கள் என உரைக்கும் துறவி இப்ராஹிம், காசாவில் எண்ணூறு கிறிஸ்தவர்கள் திருக்குடும்ப பங்குதளத்திலும், மேலும் இருநூறு கிறிஸ்தவர்கள் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கோவிலிலும் அடைக்கலம் தேடியுள்ளதாகவும், அதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அடைக்கலம் தேடியுள்ள மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ள நிலையில், உணவு, தண்ணீர், மருந்துக்கள் பற்றாக்குறையையும் சந்தித்துவருவதாகவும், கத்தோலிக்க திருஅவையில் புனித பூமிக்கு பொறுப்பாக இருக்கும் பிரான்சிஸ்கன் துறவி இப்ராஹிம் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2024, 17:02