தேடுதல்

உதவி வழங்கும் இந்திய காரித்தாஸ் உதவி வழங்கும் இந்திய காரித்தாஸ்  

காரித்தாஸ் உரிமத்தை இரத்து செய்ய இந்து தேசியவாதிகள் கோரிக்கை!

கரித்தாஸ் இந்தியா எந்த மத மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அனைத்து மக்களுக்கும் பணியாற்றி வருகிறது : இந்தியக் காரித்தாஸின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சகோ. Frederick D'Souza

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) அதிகாரப்பூர்வ தொண்டு நிறுவனமான கரித்தாஸ் இந்தியா, இந்து தேசியவாதிகளின் மதமாற்ற எதிர்ப்பு பிரச்சாரத்தில் சிக்கித்தவிப்பதாகக் கூறியுள்ளது ஆசிய செய்தி நிறுவனம்.

உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், FCRA  எனப்படும், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டம், அவ்வமைப்பின் பதிவை இரத்து செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளதாக அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

2016-இல் நிறுவப்பட்ட ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் (LRPF) என்றதொரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், மீண்டும் மதமாற்றம் என்ற பொய்யானதொரு காரணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இத்தகையதொரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது என்றும் கூறுகிறது அச்செய்தி நிறுவனம்.

இது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய காரித்தாஸ் அமைப்பின் தலைவரும் பாட்னாவின் பேராயருமான Sebastian Kallupura அவர்கள், இந்தக் குற்றச்சாட்டுக் குறித்தோ அல்லது இந்தக் குழுவைக் குறித்தோ எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இந்தப் புகார் குறித்துக் கூறிய இந்திய காரித்தாஸ் அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சகோ. Frederick D'Souza அவர்கள், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், கரித்தாஸ் இந்தியா எந்த மதமாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அனைத்து மக்களுக்கும் சேவை செய்கிறது என்று கூறியுள்ளதுடன், இவ்வமைப்பு ஆயிரக்கணக்கான கிராமங்களில், குறிப்பாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு உதவி வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நிலையான விவசாய முறைகள் வழியாக, விவசாயிகளின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், இது நகர்ப்புறங்களுக்கு அவர்கள் இடம்பெயர்ந்து செல்வதைப் பெருமளவில் குறைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள Frederick D'Souza அவர்கள், அச்சம் மற்றும் பாரபட்சத்தின் அடிப்படையில் மட்டுமே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2024, 14:27