தேடுதல்

மணிப்பூரில் போராட்டம் மணிப்பூரில் போராட்டம்   (AFP or licensors)

கனமழையால் இந்தியாவின் மணிப்பூரில் கிறிஸ்தவ குடும்பஙகள் பாதிப்பு!

இந்த இயற்கைப் பேரிடரால் சுராசந்த்பூரில் ஏறக்குறைய 100 வீடுகளும், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட சேனாபதி மாவட்டத்தில் உள்ள லாய் கிராமத்தில் 328 வீடுகளும் சேதமடைந்துள்ளாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மத மோதல்களால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் மணிப்பூரில், கடந்த வாரத்தில் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழையால் பூர்வகுடி கிறிஸ்தவர்கள் பலர் தங்களின் வாழ்விடங்களை இழந்துள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.

கடந்த ஒரு வாரத்தில் இந்த இயற்கைப் பேரிடரால், இம்மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

இதுகுறித்து யூகான் செய்தி நிறுவனத்திடம் பேசிய தலத்திருஅவையின் அதிகாரி ஒருவர், கடந்த மார்ச் 26 , செவ்வாயன்று பெய்த அதிக எடையுள்ள கடும் ஆலங்கட்டி மழை பேரழிவை ஏற்படுத்தியதால், பலர் தங்கள் கால்நடைகளையும் பயிர்களையும் இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

அவ்வாறே சுராசந்த்பூரைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் ஒருவர் கூறுகையில், ஏற்கனவே வன்முறையால் சிதைந்துபோயுள்ள எங்களின் வாழ்வில், தற்போது பெய்துள்ள பெருமழை எங்கள் வாழ்க்கையில் மேலும் அழிவை உருவாக்கியுள்ளது என்று தனது கவலையை பதிவு செய்துள்ளார்.

சுராசந்த்பூரில் மட்டும் ஏறக்குறைய 100 வீடுகளுக்கும் மேலாக சிதைந்துபோயுள்ளதாகவும், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட சேனாபதி மாவட்டத்தில் உள்ள லாய் கிராமத்தில் 328 வீடுகள் சேதமடைந்துள்ளாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்தி நிறுவனம்.

கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய பெரும்பான்மையான இந்துக்களான மெய்தீஸ் மற்றும் குக்கி-ஸோ பூர்வகுடி கிறிஸ்தவர்களுக்கு இடையிலான வகுப்புவாத கலவரங்களில் 219 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.

இந்த மோதல்களின்போது, பூர்வகுடி கிறிஸ்தவர்களின் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பிற கிறிஸ்தவ நிறுவனங்கள் அழிக்கப்பட்டன. மேலும் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வன்முறையால் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2024, 14:23