தேடுதல்

புலம்பெயர்ந்தோரின் ஆபத்தான பயணம் புலம்பெயர்ந்தோரின் ஆபத்தான பயணம்   (AFP or licensors)

ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி ஐந்து புலம்பெயர்ந்தோர் பலி!

இந்த விபத்தில் இறந்த ஐவரில் ஏழுவயது சிறுமியும், ஒரு பெண்ணும் மற்றும் மூன்று ஆண்களும் அடங்குவர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிரான்சிலிருந்து 110 புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட படகு ஒன்று, அதிகமான கூட்ட நெரிசலால் சில நூறு மீட்டர்கள் தொலைவிலேயே இயந்திரம் பழுதாகி விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி உட்பட ஐந்து புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி இறந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தின்போது பலர் கடலுக்குள் விழுந்தனர், ஆனால் கடற்கரை மிக அருகில் இருந்ததால் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து 47 பேரைக் காப்பாற்றியதாக அங்கிருந்த பிரெஞ்சு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

மேலும் அந்தப் படகின் இயந்திரத்தை மீண்டும் இயக்கி அதிலிருந்த 57 பேரும் பிரித்தானியாவை நோக்கிச் சென்றனர் என்று மேலும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 10 முதல் 12 வாரங்களில் ருவாண்டாவிற்குத் தஞ்சம் கோரும் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என்ற பிரித்தானிய பிரதமர் Rishi Sunak அவர்களின் அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரங்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு உரைக்கின்றது.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், இது மனிதாபிமானமற்றது மற்றும் செயல்படுத்த முடியாதது என்றும் கண்டித்துள்ளன.

இதற்கிடையே, எங்கள் ஆதரவாளர்களின் உதவியுடன், பிரித்தானியாவிற்கான இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகம் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் அரசின் அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எதிர்க்கும் என்று சூளுரைத்துள்ள அதன் இயக்குநர் Sarah Teather அவர்கள், இந்தக் கொடூரமான திட்டத்தால் உரிமைகள் அச்சுறுத்தப்படும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பைத் தேடி இங்கிலாந்துக்கு வரும் அனைவருக்கும் நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2024, 11:57