தேடுதல்

காசா எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய இராணுவ ஊர்திகள் காசா எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய இராணுவ ஊர்திகள்   (AFP or licensors)

காசாவில் போர்நிறுத்தம் வேண்டி இங்கிலாந்தில் தேசிய அணிவகுப்பு !

அனைத்துலகச் சட்டத்தைப் பற்றி இஸ்ரேல் கவலைப்படவில்லை என்றால், பொருளாதாரத் தடைகள் வழியாக, உலகளாவிய மதிப்பீடுகளை அந்நாட்டிற்கு கற்பிக்க வேண்டும்: பாலஸ்தீனிய அரசுத் தூதர் Husam Zomlot

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 30, புனித சனிக்கிழமையன்று, காசாவில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து,  மீண்டும் ஒருமுறை, இலண்டனில் நடைபெற்ற பதினொன்றாவது தேசிய அணிவகுப்பில் கிறிஸ்தவர்களுடன் இணைந்து அனைத்து மதத்தினரையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர் என்று கூறியுள்ளது ICN எனப்படும் செய்தி நிறுவனம்.

இதுகுறித்து ICN செய்தி நிறுவனத்திடம் பேசிய கிறிஸ்தவப் பெண் ஒருவர், நாங்கள் இங்கே பேசிக்கொண்டிருக்கும் சூழலிலும் காசாவிலுள்ள குழந்தைகள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன என்றும், அதனைத் தடுப்பதற்கான ஒரு சிறிய முயற்சிதான் இந்த அணிவகுப்பு என்றும் தெரிவித்தார்.

பிறிதொருவர் கூறும்போது, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் நிலைமை பற்றி பல இளைஞர்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும் என்று கவலையுடன் தெரிவித்ததுடன், இதனை இளைஞர்களுக்கு எடுத்துச்சொல்லும் விதமாக அருகிலுள்ள உணவகம் ஒன்றில் புனித பூமி கல்வி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனிய அரசுத் தூதர் Husam Zomlot அவர்கள் இவ்வணிவகுப்பில் வழங்கிய உரையில், இஸ்ரேல்மீது பொருளாதாரத் தடைகளுக்கு அழைப்பு விடுத்ததுடன், அனைத்துலகச் சட்டத்தைப் பற்றி இஸ்ரேல் கவலைப்படவில்லை என்றால், பொருளாதாரத் தடைகள் வழியாக, உலகளாவிய மதிப்பீடுகளை அந்நாட்டிற்குக் கற்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தார்.

இங்கிலாந்து, இஸ்ரேலுடன் கொடூரமான ஆயுத வர்த்தகத்தைத் தொடர்வதைக் கடுமையாகக் கண்டித்த Jeremy Corbyn அவர்கள், உலகளாவியத் தொலைக்காட்சியில் நாம் நிகழ்நேரத்தில் பார்ப்பது காசாவில் நிகழும் உயிர் அழிவு என்று குறிப்பிட்டார்.

இந்த அணிவகுப்பில் பங்கேற்ற குழுக்களில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதி மற்றும் அமைதி குழுவினர், இலண்டன் கத்தோலிக்க பணியாளர், பல பள்ளிகள் மற்றும் பங்குத்தளங்களைச் சேர்ந்தோர், சில அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் மாணவர்கள் அடங்குவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2024, 14:34