தேடுதல்

மியான்மார் இராணுவத்தால் தீக்கிரையாக்கப்பட்ட கோவில் (கோப்புப் படம்) மியான்மார் இராணுவத்தால் தீக்கிரையாக்கப்பட்ட கோவில் (கோப்புப் படம்)  

துயரத்தில் நம்பிக்கையை காண்போம்!

உயிர்த்தெழுந்த இறைவனின் வல்லமை மற்றும் அன்பின் வழியாக, அநீதிகளின் இடிபாடுகள் மற்றும் பேரிடிகளின் சாம்பலில் இருந்து மீண்டும் எழுந்து ஒரு புதிய எருசலேமைக் கட்டியெழுப்புவோம் : ஆயர் Celso Ba Shwe

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மியான்மார் கிறிஸ்தவர்கள் கொடுமை, பசி மற்றும் மரணம் போன்றவற்றால் துன்புறுத்தப்பட்ட போதிலும் கிறிஸ்துவின் உயிர்ப்பு, நம்பிக்கையுடன் வாழ்வதற்கு அவர்களை ஊக்குவிக்கிறது என்று லொய்காவ் ஆயர் Celso Ba Shwe அவர்கள், தனது உயிர்ப்புவிழா செய்தியில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.

மார்ச் 31, இஞ்ஞாயிறன்று, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா சிறப்பிக்கப்பட்ட வேளை,  இவ்வாறு தனது செய்தியில் கூறிய ஆயர் Shwe அவர்கள், நாம் புனித வெள்ளியின் மக்கள் அல்ல, உயிர்ப்பின் மக்கள் என்பதை உலகுக்குக் காட்ட வேண்டும் என்றும், இதுவே நமது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளதாக உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

குடும்ப உறுப்பினர்களை இழந்து, வீடுகள், உடைமைகள் அழிந்து, பட்டினியால் வாடும், மனித அட்டூழியங்கள் மற்றும் கொடுமைகளால் அன்றாடம் பாதுகாப்பின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையை அனுபவித்து வரும் நமது சகோதரர் சகோதரிகளில் உயிர்த்த இறைவனைக் காணவும் அழைப்புவிடுத்துள்ளார் ஆயர் Shwe என்று மேலும் கூறுகிறது அச்செய்தி.

உயிர்த்தெழுந்த இறைவனின் வல்லமை மற்றும் அன்பின் வழியாக, அநீதிகளின் இடிபாடுகள் மற்றும் பேரிடிகளின் சாம்பலில் இருந்து மீண்டும் எழுந்து, ஒரு புதிய எருசலேமைக் கட்டியெழுப்புவோம் என்றும் அச்செய்தியில் ஆயர் Shwe அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்தி.

உயிர்த்த இயேசு நமக்கு வழங்கக்கூடிய உயர்ந்த வாழ்வு, உண்மையான அமைதியின் வாழ்வு, நீடித்த அமைதி ஆகியவையே இப்போது நமது ஏக்கங்களில் மிகப் பெரியதும் வலிமையானதுமானதாக இருக்கும் என்று ஆயர் Shwe அவர்கள் வலியுறுத்தியதாகவும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.

கடந்த 2021-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் நடந்துவரும் மோதலில் கயா மாநிலத்தில் ஏறத்தாழ 2,50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அவர்கள் 200 முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் உரைக்கும் அச்செய்தி, இவர்களில் குறைந்தது 80,000 பேர் கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2024, 14:17