தேடுதல்

பேராயர் கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெராவ் பேராயர் கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெராவ்  

தேர்தலில் வாக்களிக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் புனித கடமை!

அனைத்து மக்களின் நன்மைக்காக உழைப்பவர்கள் மற்றும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை மதித்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்யுங்கள் : பேராயர் கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெராவ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நாட்டின் பொதுத் தேர்தலில் கிறிஸ்தவர்கள் வாக்களிக்க வேண்டியது ஒரு புனித கடமை  மற்றும் குடிமைப் பொறுப்பு என்று கோவா மற்றும் டாமன் பேராயர் ஃபிலிப் நேரி ஃபெராவ் அவர்கள் அறிக்கையொன்றில் கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறது ஆசியா செய்தி நிறுவனம்.

தமிழ்நாட்டிலுள்ள அன்னை வேளாங்கண்ணி கோவிலுக்கு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இரயில் சேவை கிடைக்கும் நிலையில், அங்குச் செல்லும் திருப்பயணிகள் சிலர் வாக்களிக்க சரியான நேரத்தில் வர முடியாமல் போகலாம் என்பதால், மே 6-ஆம் தேதி இரயில் பயணம் செல்ல வேண்டாம் என்று, பேராயர் ஃபிலிப் நேரி அவர்கள் விசுவாசிகளை அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறுகிறது அச்செய்தி நிறுவனம்.

மாநில மக்களுக்கு, குறிப்பாக, கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு ஆற்றிய உரையில், அனைவரும் தேர்தலில் வாக்களித்து தங்கள் கடமையை நிறைவேற்றுமாறு பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும், வாக்களிப்பின் வெற்றிக்காக மே 3 மற்றும் 5 தேதிகளில் சிறப்பு இறைவேண்டல்களை நடத்துமாறு அருள்பணியாளர்கள், இருபால் துறவுசபையினர், அதன் தலைவர்கள், தனிக்குழும இல்ல அருள்பணியாளர்கள் அனைவரையும் வலியுறுத்தியுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு உரைக்கின்றது.

அனைத்து மக்களின் நன்மைக்காகவும், நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள விழுமியங்களை நிலைநிறுத்துவதற்காகவும் உண்மையாகவே தங்களை முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்றும் நபர்களை இந்தப் பொதுத்தேர்தலில் தேர்வு செய்யுமாறு கத்தோலிக்கர்கள் அனைவரிடமும் பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

கத்தோலிக்கர்கள் விடுமுறையில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வெளியேறுவது அல்லது தேர்தல் நாளில் திருப்பயணம் செல்வது என்பது, மே 7-ஆம் தேதி வாக்களிக்கும் தங்களின்  செயல்பாட்டில் பங்கேற்பதற்கான பொறுப்பிலிருந்து விலகுகின்றனர் என்பதை மட்டுமல்ல, மாறாக, குடிமக்களுக்குரிய தங்களின் கடமைகளிலிருந்து தவறுவதையும் குறிக்கிறது என்று பேராயர் கருதுவதாகவும் குறிப்பிடுகிறது அச்செய்திக் குறிப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2024, 15:36