தேடுதல்

இயேசு கிறிஸ்து உரையாடல் இயேசு கிறிஸ்து உரையாடல் 

விடை தேடும் வினாக்கள் – இன்னுமா என்னை புரிந்துகொள்ளவில்லை

இறைத்தந்தையின் பிம்பமாகத்தான், தான் செயல்படுகிறேன் என இயேசு வெளிப்படுத்தியுள்ளதை சீடர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வாழ்க்கையில் பெரும்பாலானோர் இந்த கேள்வியை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டிருக்கலாம். “இன்னுமா என்னை நீங்க புரிஞ்சுக்கல” என்ற கேள்விதான் அது. நண்பர்களுடனான உரையாடல்களில்கூட “இன்னுமாடா நீ என்னை புரிஞ்சுக்கல” என்று

எப்போதாவது நிச்சயம் இந்தக் கேள்வி வந்திருக்க வாய்ப்புள்ளது.

நம்மோடு இருந்த நண்பர்கள் நம்மைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும்போதோ, நம் கூட வாழ்கின்ற உறவினர்கள் நம்மை புரிந்து கொள்ளாமல் இருக்கும்போதோ, நம் குடும்பத்தினரே நம்மை புரிந்து கொள்ளாமல் பேசும்போதோ இந்த வாக்கியம் நம்மிடமிருந்து புறப்படும். இது பதிலை எதிர்பார்க்கும் கேள்வியல்ல, வலியை வெளிப்படுத்தும் கேள்வி. இங்கு பதில் எதிர்பார்க்கப்படவில்லை, மாறாக, அந்த கேள்வியில் வெளிப்படும் வேதனையே பதிலாக இருக்கின்றது.

இயேசுவின் வாழ்வில் ஒரு நிகழ்வில் அவர் தன் சீடர்களைப் பார்த்து, “என்னை அறிந்திருந்தால் தந்தையையும் அறிந்திருக்கிறீர்கள், அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்” என்கிறார். அப்போது பிலிப்பு இயேசுவிடம், ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்கிறார். அதற்குப் பதிலாக இயேசு சொல்லும் வாக்கியத்தைத்தான் நாம் கொஞ்சம் விளக்கமாக் இன்று பார்க்க உள்ளோம்.

இயேசு பதில்மொழியாக, “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? (யோவா 14:9, 10) என்கிறார்.

'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்' என்று ஆவலுடன் கேட்கிறார் பிலிப்பு.

இந்த விண்ணப்பத்திற்கு மூன்று கேள்விகள் வழியாக பதிலைத் தருகின்றார் இயேசு.

இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்பது முதல் கேள்வி.

என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று நீ எப்படிக் கேட்கலாம்? என இரண்டாவது கேள்வியை முன்வைக்கிறார்.

நான் தந்தையினுள்ளும், தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? என மூன்றாவது கேள்வியையும் கேட்டு, பிலிப்பு தன்னை இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதை பூடகமாக வெளிப்படுத்துகிறார்.

ஆம். இறைத்தந்தையின் பிம்பமாகத்தான், தான் செயல்படுகிறேன் என இயேசு விளக்கியுள்ளதையும், வெளிப்படுத்தியுள்ளதையும் சீடர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

இன்றும் இயேசுவின் கேள்வி நம்மை நோக்கி முன்வைக்கப்படுகிறது. “இன்னும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா?” என கேட்கிறார் இயேசு. இந்த கேள்விக்கான பதில், எத்தனை காலம் கிறிஸ்தவராக இருந்தோம் என்பதில் அல்ல, எவ்வளவு ஆழமாக கிறிஸ்தவராக வாழ்ந்தோம் என்பதிலிருந்து வெளிப்பட வேண்டும்.

யூதாஸ் இஸ்காரியோத்தைப் பற்றி நமக்குத் தெரியும்.  இயேசுவோடு மூன்று ஆண்டுகள் இருந்தவர். இயேசுவின் சிறு குழுவின் கணக்கு வழக்குகளைப் பார்த்துவந்த முக்கிய நபர். அவர் இயேசுவை அறிந்துகொண்டாரா? மூன்றாண்டுகள் தன்னோடு நெருங்கிப் பழகியவரின் மதிப்பு வெறும் 30 வெள்ளிக்காசுகள் என கணக்கிட்டவர் யூதாஸ்.  நட்பின், அன்பின் அடையாளமான முத்தத்தை ஒரு நம்பிக்கைத் துரோகச் செயலுக்குப் பயன்படுத்தியவர் யூதாஸ். ஏனெனில், இயேசுவை ஒரு சக மனிதர் என்பது வரையில்தான் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.

ஆனால், இயேசுவோடு இன்னொரு சிலுவையில் தொங்கிய நல்ல கள்வர், சில நிமிடங்களிலேயே இயேசுவை அடையாளம் கண்டுகொள்கிறார். தேவையான நல்ல பங்கைத் தெரிந்து கொள்கிறார்.

இதுபோல், மார்த்தாவின் சகோதரி மரியாவும் நல்ல பங்கையேத் தேர்ந்து கொள்கிறார். இயேசுவை தனியாக விட்டு சமையலறையில் சென்று பாத்திரங்களை உருட்டாமல், அவர் பாதத்தில் அமர்ந்து உரையாடுகிறார்.

சக்கேயுவைப் பற்றியும் நமக்குத் தெரியும். உயரம் குறைந்தவராயிருந்தாலும், பாவங்களைக் கழுவி, மனிதத்தை தழுவுவதன் வழி வரலாற்றில் உயர்ந்து நிற்கிறார்.

இயேசுவை அறிந்து ஏற்றுக்கொள்ளும் கனானேயப் பெண் செய்ததென்ன?  அவர் தன்னை நாய்க்குட்டியாய் ஒப்புமைப்படுத்திக் கொள்ளக்கூடத் தயங்கவில்லை.

இயேசுவை அறிந்து கொண்ட நூற்றுவர் தலைவர், நீர் என் வீட்டில் வரவும் நான் தகுதியற்றவன் என தன்னை தாழ்த்திக் கொள்கிறார். அதாவது, இயேசுவின் எட்ட முடியாத நிலையை வார்த்தைகளின் வழி வெளிப்படுத்துகிறார்.

இப்போது நம்மைக் குறித்து கொஞ்சம் சிந்திப்போம்.

நாம் உண்மையிலேயே இயேசுவை அறிந்து கொண்டோமா? அவர் வழியில் நடக்கிறோமா? இயேசுவைப் புரிந்து கொண்டவர்கள் எல்லாரும் இயேசுவின் வழியில் நடப்பது இல்லை. நாம் இன்று மீண்டும் மீண்டும் கேட்கவேண்டிய கேள்வி : நான் இயேசுவை அறிந்து கொண்டிருக்கிறேனா? இயேசுவைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேனா? அவரை முழுமையாய் அறிந்ததால் ஏற்றுக் கொண்டிருக்கிறேனா?

இயேசு பிலிப்புவிடம், “என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, “தந்தையை எங்களுக்குக் காட்டும்” என்று நீ எப்படிக் கேட்கலாம்? (யோவா. 14:9) என கேட்பது இரண்டாவது கேள்வி.

அதாவது நானும் தந்தையும் வேறு வேறு அல்ல என்று கூறுவதாக இது உரைக்கிறது. கடவுள்தான் உலகைப் படைத்தார். தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார் (தொ.நூ. 1:1) என்று விவிலியத்தின் தொடக்க நூலில் நாம் வாசிக்கிறோம்.  ஆனால் கடவுள், இயேசு கிறிஸ்துவின்மூலமே உலகைப் படைத்தார் என்று யோவான் நற்செய்தியில் வாசிக்கின்றோம். “அனைத்தும் அவரால் (இயேசு) உண்டாயின; உண்டானது எதுவும் அவராலன்றி உண்டாகவில்லை” (யோவா. 1:3) என்று திருத்தூதர் யோவான் கூறுகிறார். விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கண்ணுக்குப் புலனாகுபவை, கண்ணுக்குப் புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன (கொலோ. 1:16) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். இதன்வழி, தந்தையும் மகனும் ஒன்றே என்பது தெளிவாகிறது.

இன்னும் ஒரு படி மேலேச் சென்றுப் பார்த்தோமானால், கடவுளுக்கு மட்டும்தான் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதே திருமறை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம். ஆண்டவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார் எனவும், நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர் எனவும் திருப்பாடல் நூலில் (தி.பா. 103:3, 130:4) கூறப்பட்டிருப்பதை வாசிக்கின்றோம். “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார்” என தாவீதிடம் நாத்தான் கூறுவதை சாமுவேல் இரண்டாம் நூலிலும் ( 2சாமு. 12:13) காண்கிறோம். பாவங்களை மன்னிப்பது கடவுளுடைய அதிகாரம் என்பதில் தெளிவாக இருந்தனர் யூதர்கள். ஆனால், இங்கு கிறிஸ்துவுக்கும் அவர்களுக்கும் முரண்பாடு முளைத்தது. இந்த அதிகாரம் தனக்கும் உள்ளது என்று இயேசுவே கூறிய ஒரு நிகழ்வைப் பார்ப்போம். ஒருமுறை இயேசுவிடம்  குணம் பெற்றுச் செல்ல முடக்குவாதமுள்ள ஒருவரை கட்டிலோடு தூக்கிக்கொண்டு வந்தார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வீட்டுக் கூரையின் மேலேறி ஓடுகளைப் பிரித்து நோயாளியை இறக்குகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த நோயுற்றவரைப் பார்த்து, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்கிறார். இதனை கேட்ட மறைநூல் அறிஞரும், பரிசேயரும், கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றி பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? என்று எண்ணிக்கொண்டனர். அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன? ‘உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்து நடக்கவும்’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்கிறார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன் நீர் வீட்டுக்கு போம்!” என்றுரைக்கிறார். உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிகொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போகிறார் (லூக். 5:18-25, 7:48,49).

கடவுளுக்கு மட்டுமே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என யூதர்கள் எண்ணிக்கொண்டிருக்க, தனக்கும் அந்த அதிகாரம் உள்ளது என இயேசு கூறுவதிலிருந்தே, அவரும் தந்தையும் ஒன்றே என்பது தெளிவாகக் காட்டப்படுகிறது. இத்தகைய நேரங்களில் இயேசுவின் சீடர்கள், பிலிப்பு உட்பட, அவருடன் இருந்திருக்க வேண்டும். இருப்பினும் அவர்கள் மறைநூல் அறிஞர்களையும், பரிசேயர்ளையும் போல் தன்னை புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் எழுந்ததுதான் இந்த கேள்வி. என்னோடு இருந்துகொண்டே, தந்தையை எனக்குக் காட்டும் என்று எப்படி உங்களால் கேட்க முடிகிறது என்பதுதான் இயேசுவின் வருத்தம்.

இயேசு கேட்கும் மூன்றாவது கேள்வியும், இரண்டாவது கேள்வியை ஒத்ததுதான். நான் தந்தையினுள்ளும், தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? என்று பிலிப்புவிடம் மீண்டும் கேட்கிறார் இயேசு.

இயேசு கிறிஸ்துவை ‘கடவுளின் வாக்கு’ என்று அறிமுகப்படுத்தி தன் நற்செய்தி நூலைத் துவக்குகிறார் புனித யோவான்.

தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு (இயேசு) என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும், உண்மையும் நிறைந்து விளங்கிய அவர், தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார் (யோவா. 1:1-3,14) என்று திருத்தூதர் யோவான் வெளிப்படுத்துகிறார்.

இயேசு ஒருமுறை தன் தந்தையை நோக்கிப் பிரார்த்தனை செய்யும்போது, “தந்தையே உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்” (யோவா. 17:5) என்கிறார். இதன் மூலம் உலகம் தோன்றுவதற்கு முன்பே இயேசு கடவுளோடு, கடவுளுக்குள் சம மாட்சியோடு இருந்தார் என்று தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம்.

இயேசு மக்களுக்குப் போதித்தபோதும், அரும் செயல்கள் பல புரிந்தபோதும் அவருடைய சொற்களும் செயல்களும் கடவுளின் வல்லமையை மக்களுக்கு எடுத்துக்காட்டுபவைகளாக இருந்தன. இதை இயேசுவோடு கூட இருந்த சீடர்கள் நேரடியாகக் கேட்டார்கள், கண்டார்கள். எனவே அவர்கள் இயேசு யார் என்பதை அறிந்திருப்பார்கள் என நாம் அனைவரும் எதிர்பார்ப்பது நியாயமே. ஆனால், சீடர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே பிலிப்புவின் கூற்று வெளிப்படுத்துகிறது. இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவை பிலிப்புப் புரிந்துகொள்ளவில்லை. தந்தை வேறு இயேசு வேறு என்றுதான் அவர் நினைக்கின்றார். ஆனால் இயேசுவோ, தந்தை தன்னிடம் உறைகின்றார்; தான் தந்தையிடம் உறைகின்றேன் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றார். இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு எந்த அளவு நெருக்கமானது என்றால் இயேசு, ''என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்'' எனக் கூறுகிறார் (யோவா 14:9).

மேலும், இயேசு தன் சீடர்களுக்காக இறைத்தந்தையை நோக்கி வேண்டிய வார்த்தைகளில் இந்த மூன்றாவது கேள்வி மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்’ என்று இயேசு தந்தையை நோக்கி செபிப்பது, நமக்கு இன்னும் ஆழமாக சிந்திக்க உதவுபவைகளாக உள்ளன.

“உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்”(யோவா 8:19),

“ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவா 8:58),

“என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்” (யோவா 12: 45),

 “நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” (யோவா 10:30),

“தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” (யோவா 10:38),

என்ற இயேசுவின் வார்த்தைகளை இன்று நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட கேள்வியுடன் பொருத்திக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். பல உண்மைகள் விளங்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2024, 12:35