தேடுதல்

உதவும் மனம் வேண்டும் உதவும் மனம் வேண்டும்  (AFP or licensors)

தடம் தந்த தகைமை - “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்”

ஏழையரைப் ‘பாவிகள்’ எனப் பட்டியலிட்டுப் பரிகசித்த சமூகத்தில் அவர்களைப் ‘பேறுபெற்றோர்’ எனப் போற்றி இயேசு சொன்ன சொல் ஒரு புரட்சிக்கான கனல்.

 “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது (மத் 5:3), என்கிறார் இயேசு.

ஏழைக் குடும்பத்தில் பிறப்பதும் ஏழ்மை நிலையில் உழல்வதும் கடவுளின் சாபம் எனக் கருதியது அக்கால யூத சமூகம். அங்கு நிலவி வந்த ஏழ்மை பற்றியப் புரிதல் முற்றிலும் தவறானது என இயேசு புரிந்துகொண்டார். ஆதிக்கவாதிகளின் பார்வையில் அங்கே ஏழையரை 3 விதமாகப் பகுத்தனர்.

1. பொருளாதாரத்தில் பின்தங்கி, பட்டினியோடு போராடி, பாதுகாப்பு ஏதுமின்றி, அன்றாட அடிப்படைத் தேவைகளை எதிர்கொள்ள முடியாதவர்கள்.

2. குறை உறுப்போடு, மனநலம் குன்றி, பெண்ணினமாக, அடிமைக் குடும்பத்தில் பிறந்து சமூக மதிப்பு இழந்தவர்கள்.

3. எளிய மனதோடு கடவுளை மட்டும் நம்பி வாழ்ந்தவர்கள்.

யாரை இச்சமூகம் பின்தள்ளுகின்றதோ அவர்களை முன்னிறுத்திப் பேருவகை கண்டவர் நம் கடவுள். எனவேதான் மேற்காணும் ஏழையரைப் ‘பாவிகள்’ எனப் பட்டியலிட்டுப் பரிகசித்த அச்சமூகத்தில் அவர்களைப் ‘பேறுபெற்றோர்’ எனப் போற்றி இயேசு சொன்ன சொல் ஒரு புரட்சிக்கான கனல். அதைக் கேட்ட சிலர் வியந்திருப்பர், சிலர் வியர்த்திருப்பர், சிலர் வெறுத்திருப்பர், சிலர் விவாதித்திருப்பர். இயேசு ஏழையரைப் பேறுபெற்றோர் எனச் சொல்லி வறுமையை வாழ்த்தவில்லை. மாறாக செல்வரால் பல நிலைகளில் வறுமைக்கூட்டுக்குள் வீழ்த்தப்பட்ட வறியவர்களோடு கடவுள் கைகோர்த்துள்ளார் என்பதே இயேசுவின் புது வேதம். கடவுளைச் சந்திக்க எளிதான வழி ஏதெனில் கடைநிலையினரைச் சந்திப்பதுதான்.

இறைவா! இப்பிரபஞ்சமெல்லாம் நீர் படைத்தும் ஏழையாகவே வாழும் உம் எளிய மனநிலைதனை எனக்கும் தாரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2024, 13:52