தேடுதல்

பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்  (ANSA)

பாகிஸ்தானில் தாக்குதலுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்

2023ஆம் ஆண்டு ஆகஸ்டில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல், அவர்களின் வரலாற்றில் மிகவும் இருண்ட நாட்களுள் ஒன்று

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பாகிஸ்தானின் ஜாரன்வாலா நகரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் இடம்பெற்று 8 மாதங்கள் கடந்தபின்னரும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நீதிக்காக இன்னும் காத்திருப்பதாகவும், அவர்களுக்கு நியாயம் கிட்டும் என்ற நம்பிக்கை குறைந்துவருவதாகவும் இங்கிலாந்து பாராளுமன்ற குழு கூட்டத்தில் கத்தோலிக்க உதவி அமைப்பு ஒன்று புகார் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, அதாவது அந்நாட்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்குப்பின் ஜாரன்வாலா என்ற இடத்தில் புனித நூலான குர்ஆனை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கிறிஸ்தவக் குடியிருப்புக்கள் மீது முஸ்லீம் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதில் 26 கிறிஸ்தவக் கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நிலையில், எண்ணற்ற கிறிஸ்தவர்கள் அங்கிருந்து வெளியேறியது பற்றியும் மத விவகாரங்களுக்கான இங்கிலாந்து பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் தகவல்களை எடுத்துரைத்த கத்தோலிக்க உதவி நிறுவனமான Aid to the Church in Need அமைப்பு, குற்றமிழைத்தவர்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கவலையை வெளியிட்டுள்ளது.  

ACN எனப்படும் Aid to the Church in Need அமைப்பு, CSW எனப்படும் உலகலாளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டமைப்பு, இங்கிலாந்தின் அஹ்மதியா முஸ்லீம் அமைப்பு, இந்து அமைப்பு மற்றும் பாகிஸ்தான் சிறுபான்மையினர்க்கான பாராளுமன்ற குழு ஆகியவைகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்த பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில், 2023ஆம் ஆண்டு ஆகஸ்டில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல், அவர்களின் வரலாற்றில் மிகவும் இருண்ட நாட்களுள் ஒன்று என அறிவிக்கப்பட்டது.

இந்த குழுக்கூட்டத்தில் உரையாற்றிய ACN அமைப்பினர், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலைகள் குறித்து ஆராயும் நோக்கில் அந்நாட்டில் தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசை இங்கிலாந்து அரசு வலியுறுத்தவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தாக்குதல் நடந்து 8 மாதங்கள் கடந்த பின்னரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படாதது குறித்து பாகிஸ்தானில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பைசலாபாத் கத்தோலிக்க ஆயர் Indrias Rehmat அவர்கள், இஸ்லாம் கும்பல்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட கோவில்களை சீரமைக்காமல், அரசு அதிகாரிகள் வெறுமனே வெள்ளையடித்து மட்டும் கொடுத்திருப்பதால், அக்கட்டிடங்கள் ஆபத்தான நிலையிலேயேத் தொடர்கின்றன என கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2024, 15:39