தேடுதல்

உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்ற பெண்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2023) உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்ற பெண்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2023)   (ANSA)

“திருஅவையின் வாழ்க்கை, பணியில் பெண்கள்” சிறப்பு தவக்கால நிகழ்வு

இனி உங்களிடையே ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்”

மெரினா ராஜ் - வத்திக்கான்

“ஒருங்கிணைந்த பயணப்பாதையில் திருஅவையின் வாழ்க்கை மற்றும் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் சிறப்பு தவக்கால நிகழ்வானது, மார்ச் 9 சனிக்கிழமை இங்கிலாந்தில் உள்ள டுவிக்கிங்காம் தூய மரியா பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது.

ஷூம் இணைய வழியாக இலவசமாக மக்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வானது மார்ச் 9 சனிக்கிழமை இங்கிலாந்து நேரம் காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ள நிலையில் நேரடியாக பங்கேற்பவர்களுக்கு நுழைவுச்சீட்டு 10 டாலர் என்றும் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தூய மரியா பல்கலைக்கழகம் மற்றும் CAFOD இணைந்து வழங்கும் தவக்கால இச்சிறப்பு நிகழ்வின் முக்கிய பேச்சாளர்களாக உரோமில் உள்ள ஒருங்கிணைந்த பயணத்திற்கான செயலகத்தில் பணியாற்றும் பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரி மரியா கோல்ஃபே ஷமோரா (Marie-Kolbe Zamora OSF) மற்றும், நைஜீரியாவில் உள்ள பெண்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தலையீடுகளுக்கான நிலையத்தின் இயக்குநரான, புனித குழந்தை இயேசுவின் பணியாளர்கள் சபையைச் சார்ந்த அருள்சகோதரி பிரான்சிஸ்கா என்கோசி உட்டி (Francisca Ngozi Uti) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

“கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற ஆண்கள், பெண்கள் என அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். இனி உங்களிடையே ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்கேற்ப, 2023 அக்டோபர் மாதம் உரோமில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் திருஅவையில் பெண்களின் ஈடுபாடு குறித்து அதிகமாக வலியுறுத்தப்பட்டது.

மேலும் திருஅவையின் முடிவெடுக்கும் செயல்திறனில் பெண்களின் ஈடுபாடு, மேய்ப்புப்பணி மற்றும் மறைப்பணியில் பொறுப்புக்கள் வழங்கப்படுதல் போன்றவை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர் உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்ற பெண் துறவறத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2024, 11:46